கலைஞர்களின் பிதாமகன்: கூத்துப்பட்டறை ந. முத்துசாமி!

ஒவ்வொரு கலையின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.
 
குறிப்பிட்டு சொல்வதென்றால் புதுமைப்பித்தன், மௌனி, ஜெயகாந்தன் போன்றோர் அவரவர்கள் காலகட்டத்தில் இலக்கியத்தில் ஆளுமை செலுத்தினார்கள் என்றால், பம்மல் சம்பந்த முதலியார், சி.கன்னையா, தி.க.சண்முகம் உள்ளிட்டோர் நவீன நாடகத்தை மறுமலர்ச்சிக்குக் கொண்டுவந்தவர்கள் எனலாம்.
 
மேலும் கே.பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்றோர் சினிமாவை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், இவர்கள் யாரும் தான் சார்ந்த துறைகள் தவிர்த்து, பிற துறைகளில் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.
 
ஆனால், ந.முத்துசாமி அப்படி இருக்கவில்லை. சிறுகதைகள், நாடகங்கள், சினிமாவுக்கான பங்களிப்பு, பத்திரிகை ஆசிரியர் எனப் பல துறைகளிலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளார்.
 
சினிமாவுக்கும் கலைஞர்களுக்குமே சமூகத்தில் பெரிய அளவில் மதிப்பில்லாதபோது, நடிகர்களுக்கான ஓர் அமைப்பாகக் கூத்துப்பட்டறையை நிறுவியதோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் நுழைவதற்கான வாசலாகவும் அதை மாற்றிக்காட்டினார்.
 
தமிழ்த் திரையில் இன்று நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களுக்குக் காரணமானவர்களை உருவாக்கியதில் இவருக்கும் இவர் உருவாக்கிய இந்தக் கூத்துப்பட்டறைக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு.
 
வெற்று வசனங்கள் மூலமே கதாபாத்திரங்களின் பிம்பத்தைக் கட்டமைக்க முடியும் என்ற பழைய நாடக முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையில் இவரது நாடகங்கள் அமைந்தது.
 
தமிழ்நாட்டின் பாரம்பர்ய நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை இவர் உருவாக்கினார்.
 
அதே நேரத்தில் நாடகத்தில் பயன்படுத்தும் லைவ் மியூசிக் பாணியை அறிமுகம் செஞ்சு இசையிலும் மிக முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தினார். இவையே கூத்துப்பட்டறையின் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்பகுதிக்குக் குடிபெயர்ந்தவர் என்பதாலேயே இவரது படைப்புகள் நகர்ப்புற வாழ்க்கையில் காணப்படும் ஊழல்களையும் கிராம வாழ்க்கையை நகர வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியைப் பிரதிபலிக்கவும் அவரைக் கட்டாயப்படுத்தின.
 
அவரது சிறுகதைகளின் கருப்பொருள்களும் இவற்றை மையமிட்டவையாக இருந்தது. அவரது நாடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் சமூக மற்றும் அரசியல் உருமாற்றத்தை வெளிக்கொண்டுவந்தவையாகவே இருந்தன.
 
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நகரங்களிலும் அவரது நாடகங்கள் முக்கியத்துவம் பெற்றன.
 
தொடர்ந்து பல்வேறு வகையில் தன் படைப்புகள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர் கடந்த 2018, அக்டோபரில் மூச்சுத்திணறல் காரணமாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
 
– நன்றி: முகநூல் பதிவு
 
vels
You might also like