உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், காபி கடை உரிமையாளர்கள் மற்றும் காபி செய்யும் மக்களை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினம் (International Coffee Day) ஆனது முதலில் 2015-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
எத்தியோப்பியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவர், அன்றாடம் மேய்ச்சல் முடிந்ததும், மாலை மயங்கும் நேரத்தில் ஆடுகளை கொண்டு வந்து ‘கிடை’யில் அடைத்துவிட்டு, இரவில் அருகில் உள்ள குடிசையில் தூங்கி விடுவார். ஆனால் ஒருநாள் ஆடுகள் தூங்காமல் விளையாடியுள்ளனர். காரணம், அவை ஏதோ ஒரு செடியை சாப்பிட்டுள்ளனர். மறுநாள் ஆடுகளோடு சென்று அவரும் அந்த செடியின் இலைகளையும், பூவையும் சுவைத்தார்.
அதன் மணமும், சுவையும் அவருக்கும் உற்சாகத்தை தந்தது. அந்த விஷயம் பரவியது. காபி பழம், கொட்டை போன்றவைகளை சுவைத்து மகிழ்ந்த மக்கள் பின்பு கொட்டையில் இருந்து காபி தயாரித்தும் பருகியிருக்கிறார்கள். எத்தியோப்பியாவில் தோன்றிய காபியை உலகின் பல பகுதிகளுக்கும் பரப்பினார்கள். அப்படியாக, கி.பி.1554-ல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அரேபிய வியாபாரிகள் முதன்முதலில் காபி கடைகளை திறந்ததாக சரித்திர சான்றுகள் சொல்கின்றன.
உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காபி ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவது பில்டர் காஃபிதான். அதுவும் தமிழகத்தில் கும்பகோணம் பில்டர் காஃபிக்கென்றே தனி அடையாளம் உண்டு.
அதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் அதில் இருக்கும் காஃபைன் என்னும் ஒரு வேதிப்பொருள்தான். இதுவே குடித்ததும் சட்டென தோன்றும் ஒரு உற்சாகத்திற்கு காரணம். இந்த காஃபின் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உலக ஆராய்ச்சியாளர்களிடையே காஃபி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.காஃபி குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற கோளாறுகளில் தொடங்கி விரைவில் உடல்நலத்தையே கெடுத்து விடும் என ஒரு சாரரும் இல்லையில்லை காஃபி குடிப்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தி ஆயுளையே அதிகரிக்கச் செய்து விடும் என ஓரு சாரரும் வாதிடுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் எதிலும் அளவோடு இருப்பதே நலமோடு வாழ வழி செய்யும். காஃபியை அதிகமாக அருந்தும் பழக்கமுடையவர்கள் மெதுவாக குறைக்க முயற்சி செய்து வரலாம். அதிலும் உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில் முற்றிலும் தவிர்த்து விடுவதே உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
– செந்தில் வேலன்
#InternationalCoffeeDay #சர்வதேசகாபிதினம் #விவசாயிகள் #காபி #CoffeeDay #Coffee #வரலாறு #எத்தியோப்பியா #Farmer #CoffeeLovers