பாரதியார் தன்னுடைய ‘சின்ன சங்கரன்’ கதையில் ஜமீன்தார் சாப்பிடுகிற சாப்பாட்டு காட்சியை எழுதும் போது ‘உப்புச் சாறு’ என்றொரு குழம்பு வகையை குறிப்பிடுகிறார். அனேகமாக மக்களால் மறக்கப்பட்டுவிட்ட ஒரு குழம்பு.
நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் அடிக்கடி இந்தக் குழம்பு உண்டு. அதாவது அவசர காலத்திற்கு இதை செய்வதுண்டு. கிராமங்களில் இது சர்வசாதாரணம்.
மிளகாயின் காம்புகளை ஆய்ந்துவிட்டு பாதி பாதியாக கீறிவிட வேண்டும். அப்புறம் சின்ன வெங்காயத்தை நன்றாக உரித்து எடுத்து தேவையான உப்பை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பின்னர் நெத்திலி, சூடை அல்லது வாலை கருவாட்டை போட்டு சிறிது நேரத்தில் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி இறக்கி விட்டால் ‘உப்புச் சாறு’ ரெடி.
மசாலா எதுவும் இல்லாததால் பச்சைத் தண்ணீர் மாதிரியே இருக்கும். ஆனால் டேஸ்ட் மிகவும் நன்றாகவே இருக்கும். எட்டயபுரம் மன்னர் சாப்பிட்டதைத்தான் பாரதி நையாண்டி செய்கிறார். இந்தக் குழம்பு வைப்பதில் இன்னொரு லாபம்.
அதிலுள்ள சாறு முழுவதையும் சோற்றில் ஊற்றி சாப்பிட்ட பின்னர் மீதமிருக்கும் மிளகாய், வெங்காயம், கருவாடு காலை, மதியம் கரைகஞ்சி என்று சொல்லக் கூடிய கரைத்து சாப்பிடுகிற கம்பு, சோளம், கேப்பைக்கூழ் போன்ற உணவுக்கு வெஞ்சனமாக பயன்படும். இப்போது முற்றாக மறைந்து போயிற்று ‘உப்புச் சாறு’.
அடுத்து புதுமைப்பித்தன் தன்னுடைய சிறுகதை ஒன்றில் அப்போ இன்னைக்கி “வண்டிக்காரன் குழம்பு தான்” என்று ஒரு வரி எழுதியிருப்பார். அதென்ன வண்டிக்காரன் குழம்பு.
அந்தக் காலங்களில் மாட்டு வண்டிகளில் ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்பவர்கள் ஏழெட்டு பத்து வண்டிகள் என கூட்டங்கூட்டமாக செல்வதுண்டு. காரணம் கள்ளர்களின் பயம். அப்படி போகும் போது இருட்டி விட்டால் தங்கிக் கொள்வதற்கு “வண்டிப் பேட்டைகள்” என்று சொல்லக் கூடிய சில இடங்களில் பாதுகாப்பாக தங்கிக் கொள்ள வியாபாரிகள் இடங்கள் வாங்கிப் போட்டிருப்பார்கள்.
மொத்தமாக அங்கே தங்கிக் கொண்டு வியாபாரிகள் தானே சமைத்து சாப்பிடுவது உண்டு. கடைகள் அருகில் இருக்காது. முக்கோண வடிவத்தில் கற்களை அடுப்பாக வைத்து சோறாக்கிய பின்னர் குழம்பு தயாரிப்பார்கள்.
தண்ணீரில் புளியை ஊற வைத்து பிழிந்து எடுத்துப் பின்னர் அந்த புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பு போட்ட பின்னர் மிளகாய் வற்றல்களை தீயில் கருக்கி எடுத்து அந்த தண்ணீரில் பிய்த்துப் போட்டு கலக்கி விட்டால் “வண்டிக்காரன் குழம்பு “தயார்.
எங்கள் அய்யா வண்டி பூட்டி பருத்தி, மிளகாய்வற்றல், தானியங்கள், பயறு வகைகள் ஏற்றி நகரங்களுக்கு கொண்டு போவார். அப்போது வியாபாரிகளுடன் தங்கி அந்தக் குழம்பு சாப்பிட்டதையும் வண்டிக்காரர்கள் தயாரிப்பதையும் கதை போல் எங்களிடம் சொல்வார்.
மசால் வகைகளே இல்லாமல் வைக்கப்படும் குழம்புகள். நான் இந்த இரண்டு குழம்புகளும் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது நினைத்தாலும் ஆசையாக இருக்கிறது. மன்னரே விரும்பி சாப்பிட்டிருக்கிறார். அப்புறமென்ன ருசி கேட்கவா வேண்டும்.
– எழுத்தாளர் சோ.தர்மன்
#புதுமைப்பித்தன் #வண்டிக்காரன்குழம்பு #கம்பு #சோளம் #கேப்பைக்கூழ் #நெத்திலி #சூடை #வாலை #கருவாடு #உப்புச்சாறு #chodharman #writerchodharman #puthumaipithan #bharathi #vandikkarankuzhambu #grains #karuvadu #uppucharu #பாரதியார்