மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தையும் சுகுண விலாச சபையும்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள சுகுண விலாச சபையும் சென்னை மயிலாப்பூர் கோவிலும் மாபெரும் தமிழ் ஆளுமை பம்மல் சம்பந்த முதலியாரின் வரலாற்றைச் சொல்லக் கூடியவைதான்.

பம்மல் சம்பந்தனார் 1873-ம் ஆண்டு சென்னை பம்மல் என்ற இடத்தில் பிறந்தார். இவரது வீடு சென்னை பாரிமுனை பகுதி ஆச்சாரப்பன் வீதியில் இருந்தது. 1880-ம் ஆண்டு சென்னை பிராட்வே இந்து புரொப்பரைட்டரி என்னும் பள்ளியில் சேர்ந்து ஆங்கில வழிக் கல்வி கற்றார்.

1886-ல் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், பின்னர் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1889 முதல் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்த பம்மல் சம்பந்தனார் 1891-ல் சுகுண விலாச சபை என்னும் குழுவை உருவாக்கினார்.

இந்த சுகுண விலாச சபை சென்னை அண்ணா சாலையின் மையப் பகுதியில் இன்றைக்கும் பெரும் வரலாற்று சுவடுகளுடன் கம்பீரமாக இருந்து வருகிறது.

நாடகங்களுக்கான பயிற்சிகள், நாடகங்கள் அரங்கேற்றம் என நாடக மேம்பாட்டுக்காக இந்த சுகுண விலாச சபை உருவாக்கப்பட்டது.

பம்மல் சம்பந்தனார் 1891 முதல் 1936 வரையில் 94 நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கில மொழியிலிருந்து சேக்ஸ்பியரின் ஐந்து நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதாரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பி்ற்பகல் விளையும், ரத்னாவளி,

காலவரிஷி, மார்க்கண்டேயர், அமலாதித்தியன், வாணீபுர வணிகன், சபாபதி, வேதாள உலகம், பொன் விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், வள்ளி மணம், கொடையாளி கர்ணன்,

சகுந்தைலை, காளப்பன் கள்ளத்தனம், நல்லதங்காள், ஏமாந்த இரண்டு திருடர்கள், ஸ்திரி ராஜ்யம்,

இந்தியனும் ஹிட்லரும், கலையோ காதலோ போன்றன சம்பந்த முதலியாரின் நாடகங்களாகும்.

பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் 1936-ம் ஆண்டு அரங்கேறியது. பம்மல் சம்பந்தனார் காலத்திலேயே மனோகரா நாடகம் 859 முறை அரங்கேற்றம் செய்யப்பட்டது வரலாறு.

இந்த மனோகரா நாடகத்தின் மூலக் கதையை வைத்து கொண்டுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மனோகரா எனும் புகழ் பெற்ற சினிமாவுக்கு வசனம் எழுதினார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பம்மல் சம்பந்தனார் குடும்பத்துக்கு இப்போதும் முன்னுரிமை உண்டு. தமிழ் நாடகத் துறைக்கு ஆகப் பெரும் அளப்பரிய சேவையாற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார்.

சென்னை தினத்தைக் கொண்டாடும் அனைவரும் சென்னையின் அடையாளமாக ஒன்றி நிற்கும் சுகுண விலாச சபையையும் பம்மலாரையும் நினைவில் கொள்வது வரலாற்று கடமை!

  • நன்றி : ஒன் இந்தியா
You might also like