“உங்கள் காலத்தில் இசையமைக்க 50, 100 வயலின் என்று பெரியதொரு திருவிழாக் கூட்டம்போல வாத்தியக் கோஷ்டி இருக்கும். இப்போது எலெக்ட்ரானிக் யுகம் வந்ததால் ஏற்பட்டது சாதகமா, பாதிப்பா?”
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பதில்:
“எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸால பாதிப்பு இருக்குனு சிலர் சொல்றாங்க. அதை நான் ஒப்புக்கமாட்டேன்.
அதை எப்படி யூஸ் பண்ணணும்னு தெரிஞ்சவங்க நல்லாவே செய்யலாம். அதைச் சரியா யூஸ் பண்ணத் தெரியாதவங்க செய்யும்போதுதான் அபஸ்வரமா இருக்கும்.
எலெக்ட்ரானிக் யுகத்தால் நம்ம மியூஸிக் கெட்டுப் போச்சுன்னு சொல்லமுடியாது. எங்க பீரியட்ல நாங்க கடுமையா உழைச்சு வாசிச்சோம்.
அதில் கிடைச்ச ஆத்ம திருப்தி, எலெக்ட்ரானிக் கருவிகள்ல ஒருவேளை கிடைக்காமல் இருக்கலாம்.
இத்தனைக்கும் எலெக்ட்ரானிக் கருவிகள்ல எல்லாவித சௌகரியங்களும் இருக்கு. எல்லாத்துக்கும் ஸ்விட்ச்.
அந்தக் காலத்துல என் தலையெழுத்து, நான் கஷ்டப்பட்டு ப்ராக்டீஸ் பண்ணினேன். இப்போ வர்ற இளைஞர்களுக்கு அப்படி இல்லை.
நான் 15 வருஷம் கத்துக்கிட்டதை அவங்க 15 நாள்லயும் கத்துக்கலாம்; 15 நிமிஷத்துக்குள்ளயும் கத்துக்கலாம். அவ்வளவு வசதியா போச்சு! என்னைப் பொறுத்தவரைக்கும் வசதி வர வர, அசதி வந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்!”
– 01.05.1994 ஆனந்த விகடனில் வெளிவந்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.