திறனாய்வு அணுகுமுறையை வளர்த்தெடுக்கும் முயற்சி!

நூல் அறிமுகம்:
 
மொழி, எழுத்து, இலக்கியம் இவை சார்ந்து பன்னெடுங்காலமாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றாக பெண் எழுத்துக்கள் சார்ந்த விவாதங்களும் இடம்பெறுகின்றன.
 
ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமா? இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்கின்ற இந்த பெண்ணிய வாசிப்புகள் என்னும் அ. ராமசாமி எழுதிய கட்டுரைத் தொகுப்பில் நூலாசிரியர் இந்த கேள்விக்கு விரிவாக ஆராய்ந்து விடையை அளித்திருக்கிறார்.
 
எனது கருத்து என்னவெனில் ஒற்றுமையை உருவாக்குவதே வேற்றுமை தான் என்பேன்.
 
ஒற்றுமையில் இருந்து வேற்றுமை பிறந்ததா? வேற்றுமையில் இருந்து ஒற்றுமை பிறந்ததா என்று யோசித்துப் பாருங்கள். புரியும்.
 
ஆண் எழுத்து, பெண் எழுத்து என்ற வகைப்பாடுகளும் ஒருவகையில் இட ஒதுக்கீடு தான்.
 
எழுதுகிற எல்லா ஆண்களுக்கும் கிடைக்கும் வசதிகளும் வாய்ப்புகளும், எழுதுகிற, எழுத வேண்டும் என்று நினைக்கிற எல்லாப் பெண்களுக்கும் சம அளவில் கிடைப்பதில்லையே?
 
ஒரு ஆணின் பார்வையில் வெளிப்படும் பெண்ணுக்கும், பெண் தனது பார்வையில் வெளிப்படுத்தும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா?
 
அந்த வகையில் பேராசிரியர் அ. ராமசாமி எழுதியுள்ள இந்த பெண்ணிய வாசிப்புகள் – எழுதும் பெண்களும் எழுதப்படும் பெண்களும் என்ற இந்த நூல் மிக முக்கியமானதாக இருக்கின்றது.
 
பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்ந்து 26 திறனாய்வுக் கட்டுரைகளை அ. ராமசாமி முன்வைத்திருக்கிறார்.
 
26 பெண் எழுத்தாளர்களின் 26 சிறுகதைகள் இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
 
பெண் எழுத்தாளர்களின் அனைத்துப் படைப்புகளையும் பொத்தாம் பொதுவாக எடுத்து ஆராயாமல், ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களினதும் ஒன்று அல்லது இரண்டு கதைகளை மட்டும் எடுத்து, அவற்றில் பெண்ணிய கூறுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை பேராசிரியர் அ. ராமசாமி ஆராய்ந்திருக்கிறார்.
 
இந்திய அல்லது தமிழகப் பெண்கள் மட்டுமின்றி, இலங்கை அல்லது புலம்பெயர் நாடுகளின் பெண் எழுத்தாளர்களான தமிழ்க் கவி, தமிழ்நதி, லறீனா, மஜீதா, கறுப்பு சுமதி, ஈழவாணி, பிரமிளா பிரதீபன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஹேமா, அழகுநிலா, சுஜா செல்லப்பன் மற்றும் மலேசியா பாவை ஆகிய பெண் எழுத்தாளர்களின் படைப்புகளும் இங்கு கருத்திற் கொள்ளப்பட்டிருக்கின்றமை சிறப்பு.
 
‘பெண் எழுத்துக்களை வாசித்து விவாதிக்கும் திறனாய்வுப் பார்வையை பெண்ணியத் திறனாய்வு அணுகு முறையைத் தமிழில் வளர்த்தெடுக்கும் பணியை இக்கட்டுரைகள் செய்யும்’ என நூலாசிரியர் அ. ராமசாமி குறிப்பிட்டிருப்பது நூறு வீதம் உண்மை என்றே கூற வேண்டும்.
 
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சித் தன்மை கொண்டவை அல்ல என்பதால் தோராயமாக தெரிவு செய்து அல்லது நீங்கள் விரும்பும் ஒழுங்கில் வாசிக்கலாம்.
 
ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களினதும் தனித்தனி படைப்புகளை தனித்தனியே விரிவாக ஆராய்ந்திருக்கின்றது.
 
தமிழ் இலக்கியப் பரப்பில் வாசிப்பு அருகிவரும் சூழலில், இவ்வாறான திறனாய்வு நூல்களைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
 
ஏதோவொரு வகையில் எழுதும் ஒவ்வொருவரும் கவனிக்கப்பட்டு அவர்களின் படைப்புகள் அந்தந்தக் காலத்தின் தேவைக்கேற்ப திறனாய்வு செய்யப்பட வேண்டும்.
 
பாரதியின் படைப்புகள் மீதான திறனாய்வுகள் இன்றளவும் இடம்பெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன?
 
மொழி என்ற பரந்த தளத்தில் இலக்கியத்தின் தேவை பரந்தது என்றாலும் அதன் இடம் குறுகியது தான். ஆனால், அதனை கற்றறிந்த சமூகத்தின் மத்தியில் வாசிப்பை எடுத்துச் செல்வதன் மூலம் அந்த இடைவெளியை சரி செய்ய முடியும்.
 
புத்தகம்: பெண்ணிய வாசிப்புகள்
எழுத்தாளர்: அ. ராமசாமி
எழுத்து பிரசுரம்
பக்கங்கள்: 246
விலை: ரூ. 285/-

 

 
– சிகரம் பாரதி
 
நன்றி: முகநூல் பதிவு
 
*****
You might also like