எனக்கு மிகவும் பிடித்த பெண் குரல் பாடகி சித்ரா உடையதுதான். அந்தக் குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது.
இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ராதான். 6 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் பாடகியும் அவர்தான்..
1985 – பாடறியேன் படிப்பறியேன் (சிந்து பைரவி)
1986 – கண்ணா வருவாயா (மனதில் உறுதி வேண்டும்)
1987 – புத்தம் புது ஓலை வரும் (வேதம் புதிது)
1988 – நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)
1989 – ஓ ப்ரியா ப்ரியா (இதயத்தைத் திருடாதே)
1990 – சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது (வைகாசி பொறந்தாச்சு)
1991 – தூளியிலே ஆடவந்த (சின்னத்தம்பி)
1992 – ருக்குமணி ருக்குமணி (ரோஜா)
1993 – அஞ்சலி அஞ்சலி (டூயட்)
1994 – தென்கிழக்குச் சீமையிலே (கிழக்குச் சீமையிலே)
1995 – கண்ணாளனே (பம்பாய்)
1996 – மலர்களே மலர்களே (லவ் பேர்ட்ஸ்)
1997 – ஊ லலல்லா ஊ லலல்லா (மின்சாரக் கனவு)
1998 – உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் (நினைத்தேன் வந்தாய்)
1999 – தீண்டாய் மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே)
2000 – எங்கே எனது கவிதை (கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’)
2001 – நீதான் என் தேசிய கீதம் (பார்த்தாலே பரவசம்)
2002 – கரிசக் காட்டுப்பூவே (ராஜா)
2003 – இதுதானா இதுதானா (சாமி)
2004 – ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப்)
2006 – வருகிறாய்.. (அன்பே ஆருயிரே)
2008 – இதயம் இடம் மாறியதே (ஜோதா அக்பர்)
2009 – யாரோ யாருக்குள் இங்கு யாரோ (சென்னை 28)
2010 – நான் போகிறேன் மேலே மேலே( நாணயம்)
2011 – சந்திக்காத கண்களில் (180)
2014 – மௌனம் பேசும் (அமர காவியம்)
2015 – மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை (ஓ காதல் கண்மணி)
2016 – கொஞ்சிப் பேசிட வேணாம் (சேதுபதி)
என்று அவருடைய உயரம் எந்தக் காலகட்டத்திலும் மாறவேயில்லை.
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கான அவருடைய மெனக்கெடல் அனைத்துத் துறைகளிலும் இருப்பவர்கள் கற்க வேண்டிய பாடம்.
பாடல் பதிவு, பாடல் பதிவுக்கான ஒத்திகை, சர்வதேச இசைக் கச்சேரி, உள்ளூர்க் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நேர்காணல், போட்டியாளர்களுக்குக் கற்றுத் தரும்போது பாடுதல் என்று எந்த விதமான பேதத்தையும் அவரிடம் நான் கண்டதில்லை.

சுதி விலகாமல், தாளம் பிசகாமல் ஸ்வரக் கட்டின் கம்பீரம் குலையாமல் பிரவாகித்துக் கொண்டேயிருக்கும் சங்கீத நதி அவர்.
காது, மூக்கு, தொண்டை நிபுணர் தொண்டை வலிக்காகத் திறக்கச் சொன்னால் கூட அவர் சுதி விலகாமல்தான் வாய் திறப்பார்.
ஜானகி, எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா, ஜெயச்சந்திரன், ஜென்சி ஆகியோர் ராஜா பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
சுஜாதா, ஹரிஹரன், ஷாகுல் ஹமீது, சங்கர் மகாதேவன், சாதனா சர்கம், உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், சின்மயி , ஸ்ரீனிவாஸ், கார்த்திக், நரேஷ் அய்யர், மால்குடி சுபா, அனுபமா, உதித் நாராயணண், சுக்வீந்தர் சிங், எம்.ஜி. ஸ்ரீ குமார், சித் ஸ்ரீராம் ஆகியோர் ரஹ்மான் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
மனோ, சித்ரா, ஸ்வர்ணலதா ஆகிய மூவரையும் இரண்டு பள்ளிகளின் கலவை என்று குறிப்பிடலாம். அதுவும் சித்ராவிடம் இருவரின் குணாதிசயங்கள் கூட உண்டு ஆம் அவர்தான் நிஜமான ‘இளையமான்’.
ஜானகியம்மா கம்பீரமானவர். சித்ரா பணிவானவர். இளையராஜா, எஸ்பிபி, ஜேசுதாஸ், ஜானகியம்மா ஆகியோர் முன்னிலையில் அவர் காட்டுகிற பணிவு அலாதியானது. தன்னைவிட இளையவர் எனினும் அவர் மனதளவில் ரஹ்மான் மீது வைத்திருப்பதும் குரு மரியாதைதான்.
ஒட்டுமொத்தமாக அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரஹ்மான் இசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஒரே பெண் பாடகி சித்ராதான்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் துயரங்கள் இருந்தாலும், அந்தத் துயரங்களை நினைவு கூர்வதற்கான சூழல்களை விஜய் டிவி வலிந்து உருவாக்கினாலும் தேவையில்லாத மிகை உணர்ச்சியை அவர் பொதுவெளியில் வெளிப்படுத்தியதில்லை.
சித்ரா கலையை மலினப்படுத்தாத அபூர்வமான கலைஞர். உண்மையில் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகளில் அவரளவிற்குச் சிறந்த ஆசிரியர் வேறு யாருமில்லை..
அவர் குரலை மட்டும் தனியாகக் கேட்டால் இந்த வயது வரை அது அன்பில் பெருகி வழியும் காதலியின் குரல்தான். ஆனால் தொலைக்காட்சியில் காண்கிறபோது என்னையறியாமல் வாய் ‘சித்ராம்மா’ என்று அழைத்து விடும்..
‘சித்ராம்மாவிற்கும்’ ‘சித்ராவுக்கும்’ நடுவே ஊஞ்சலாடும் அந்தக் குரலில்தான் என் தனிமையின் பொழுதுகள் நகர்ந்திருக்கின்றன.
எம் தாத்தாக்களுக்கு சுசீலா, தகப்பனுக்கும் தாய்மாமன்களுக்கும் எஸ்.ஜானகி எனில், எமக்கு சித்ராதான்.
ஸ்ரேயா கோஷல் வந்து கரங்களைப் பிடித்திழுத்து பொழுதெல்லாம் மயக்கினாலும் மனம் சித்ராம்மாவின் முந்தானையைப் பற்றிக் கொண்டு ஒரு சிறுவனாக மாறிவிடுவதை இன்றுவரை தவிர்க்கவே முடியவில்லை.
லவ் யூ சித்ராம்மா !!!
– நன்றி: மானசீகன் முகநூல்