அருமை நிழல்:
பல படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர்கள் நாகேஷூம், அசோசனும்.
அசோகன் தமிழ்த் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு.
குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி, கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையைக் குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
வில்லியுடன் சேர்ந்து கொண்டு ‘அடிமைப்பெண்’ படத்தில் செய்யும் செங்கோடன் என்ற வில்லன் வேடத்தை இனி யாராலும் செய்ய முடியாது.
திரையில் வில்லனாக நடிக்கும் அசோகனின் இயல்பான குணம், நிஜத்தில் அதற்கு நேர் எதிரானது. அந்த எளிமையான, இரக்க குணம் தான் எம்.ஜி.ஆரோடு அசோகனை நெருக்கமாக்கியது. இதேபோல், திரையைத் தாண்டி எம்.ஜி.ஆரோடு நெருக்கம் காட்டியவர் நாகேஷ்.
எம்ஜிஆருக்கும் தனக்குமான பிணைப்புப் பற்றி நாகேஷ், பல இடங்களில் பலமுறை சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்சனை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு.
அந்த சமயங்களில் எல்லாம், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, இயக்குநரிடம் ”மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிடுவார்.
ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது” என்று பல விஷயங்களில் பேசியுள்ளார் நாகேஷ்.
எம்.ஜி.ஆர் எப்போதும் சினிமாவைத் தாண்டி எல்லோருடனும் இயல்பான நட்பைப் பாராட்டுவார் என்பது திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களே சாட்சிகளாக உள்ளனர். சினிமாவைத் தாண்டி அவர் அரசியலுக்குச் சென்ற பிறகும் அந்த நட்பு அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது.
குறிப்பு: படப்பிடிப்பு இல்லாத ஒரு சமயத்தில் நாகேஷையும் அசோகனையும் தோழமையோடு அணைத்தபடி இருக்கிறார் பொன்மனச் செம்ம எம்.ஜி.ஆர்.