முதல் படத்திலேயே மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசிய இயக்குநர்!

இயக்குநர் கே. பாக்யராஜ் சிஷ்யர்களில் மிகவும் துடிப்பான கெட்டிக்காரராக இருந்த ஆர். பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘கன்னி ராசி’. 1985ம் ஆண்டு வெளியானது.

பிரபு, ரேவதி, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், சுமத்ரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி விழாக் கொண்டாடியது.

முதல் படத்திலேயே யாருப்பா இந்த படத்தோட இயக்குநர் என திரும்பிப் பார்க்க வைத்த ஒரு இயக்குநராக பிரபலமானார் ஆர். பாண்டியராஜன்.

‘கன்னி ராசி’ படத்தின் பிரிவியூ காட்சி திரையிடப்பட்டதுமே விநியோகஸ்தர்கள் உடனே படத்தை வாங்க முன்வந்துள்ளனர். அதற்கு காரணம் படத்தின் அசத்தலான திரைக்கதை. நிச்சயம் இப்படம் வெற்றி பெறும் என அன்றே முடிவெடுத்துவிட்டனர்.

நகைச்சுவை, காதல் என்ற கலவையில் இப்படம் வெளியாகி இருந்தாலும் அதில் பகுத்தறிவையும் அப்படத்தின் மூலம் புகுத்தி இருந்தார் ஆர். பாண்டியராஜன்.

செவ்வாய் தோஷம் என்பது இன்றும் நம்பப்படுகிறது. ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்தவர் பாண்டியராஜன் தான்.

‘கன்னி ராசி’ படத்தின் கிளைமாக்சை பற்றி பாண்டியராஜன் ஒரு பேட்டியில் “முதலில் ரேவதி இறப்பதாக, சூட்டிங் எல்லாம் முடிந்து, பிறகு, கலகலப்பான படத்துக்கு, இந்த சோக முடிவு வேண்டாம் என்று ரேவதியும் பிரபுவும் பள்ளிச் சீருடையில் சிரித்த முகத்தோடு டாடா காட்டுவது போல எடுத்திருந்ததாகவும்,

பிறகு தயாரிப்பு மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில் ரேவதி இறப்பதாகச் சொல்லி தான் படத்தை வணிகம் செய்தோம், எனவே பழையபடி இறந்து போவதாகவே கிளைமாக்சை வைங்க என்று மன்றாடியதால் அது போலவே முடிவு அமைத்து பின் எண்ட்கார்டில் “இந்த நிழலுக்கு நேர்ந்த நிலையை உங்கள் நிஜத்திற்கு தந்து விடாதீர்கள்” என்ற வாசகத்துடன் முடித்ததாக கூறி இருப்பார்.

அந்த 7 நாட்கள் படம் ரொம்ப பிடிச்சிருந்தாலும் அந்த படத்தின் முடிவில் நமக்கு உடன்பாடில்லை. தாலி கட்டிட்டாவே வேற வழியில்லை கட்டியவனோடு தான் சேர்ந்து வாழணும் என்ற நிலைப்பாட்டில் அந்த கதையின் முடிவு அமைந்திருக்கும்.

தனது குருநாதர் கே.பாக்யராஜின் அந்த வழியிலேயே ‘கன்னி ராசி’ படத்தின் முடிவையும் அமைத்திருப்பார் போல பாண்டியராஜன்.

படத்தின் ஆரம்பம் முதல் பாடல், இசை, திரைக்கதை, காமெடி, வசனம் என அற்புதமாக பயணித்திருக்கும் படத்தை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்ற காரணத்தால் தன்னை மணக்கும் பிரபு இறந்துவிடுவார் என்பதால் கல்யாண கோலத்தில் ரேவதி விஷம் அருந்தி இறந்து போவதாக காட்டி இருப்பார்.

ஒரு வகையில் இந்த சம்பவம் பிரபு இறக்காமல் ரேவதி இறந்து போவது என்பது ஜாதகத்தை தவறாக்கிய வகையிலான சிந்தனையுடன் இருந்தாலும் முடிவு என்பது சங்கடமாகவே இருக்கும்.

கன்னிராசி படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் “நீ என்ன சிரிக்கிறெ, உனக்கு இந்த வீட்ல யாரு மரியாதை கொடுக்கிறா. நானே கொடுக்கிறேன்” சொல்லிட்டு தன் படத்திற்கு மாலை அணியும் அட்டகாசம் நகைச்சுவை மிகுந்த காட்சியாக இருக்கும்.

இசைஞானியின் “ஆள அசத்தும் மல்லியே…”, “சுகராகமே…” என இனிமையான பாடல்களுடன் படத்தின் உயிரோட்டமான பின்னணி இசையும் கன்னி ராசி படத்தை காலம்தோறும் பசுமையான ஒரு காவியமாகவே நம்முள் இடம் பெறச் செய்கிறது.

குறிப்பு: கன்னிராசி படப்பிடிப்பின்போது இயக்குநர் பாண்டியராஜ், நாயகன் பிரபு, நாயகி ரேவதி உடன் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

– மணி அமுதன்

You might also like