ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே.என்.யூ. பல்கலை.யில் பயின்ற ஆய்வாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை விசனப்பட வைத்தது.
அவர் கேட்ட கேள்வி – ‘வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’
இரண்டாவதாக ஒரு முக்கியமான டி.வி. சேனலில் மக்கள் அரங்கம் என்ற பேரில் தமிழ் மரபைக் காப்பாற்றிய முக்கிய ஆளுமைகள் என்ற பேரில் திருவள்ளுவர் முதல் அண்ணா, காமராசர் வரை சுமார் பதினைந்து ஆளுமைகளுக்கு மேலாக ஒவ்வொரு முக்கிய அரசியல் பிரமுகர்களும் ஒவ்வொரு தலைவர்கள் குறித்து பேசினார்கள்.
அந்த மரபில் இடம்பெறாத ஆளுமை பெரியவர் வ.உ.சி.
இதுமாதிரி பொதுப்புத்தியில் வ.உ.சி. என்ற மகத்தான ஆளுமையை மறந்து எளிதாகக் கடந்து செல்லும் அளவிலான அறிவுஜீவிகள் கலந்துகொண்ட நிகழ்வாக இருந்ததும் என்னை யோசிக்க வைத்தது.
2015 வாக்கில் கூகுள் தேடுபொறியில் வ.உ.சி. என்று தேடினால் நான்கு பக்கம் தாண்டாது. அதேவேளையில் அரைநாள் கூட சிறைவாசம் அனுபவிக்காத, பிரிட்டிஷ் அரசாங்கத்தை சொரிந்து விட்ட அரசியல் தலைவர்கள் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்களில் தரவுகள் அள்ளிக் கொட்டியது.

இந்தப் பின்னணியில்தான் வ.உ.சி. ஆய்வு வட்டம் ஒன்றை நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் வ.உ.சி. குறித்த சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவரது பன்முகத் தன்மையை பதிவுகளாகப் போடப் போட இன்று கூகுள் பொறியைத் தட்டினால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வ.உ.சி. குறித்த தரவுகள் கொட்டத் தொடங்கியது.
ஆனால், சில அறிவுஜீவிகள் இன்றைய அரசியல்செயற்பாடுகளுக்கு வ.உ.சி. யை எப்படி பொருத்தப்பாட்டோடு பார்க்கப் போகிறீர்கள் என்று சலசலப்போடு கேள்விக்கணைகள் கேட்க ஆரம்பித்தன.
ஒரு சிலர் சாதிய நோக்கில் கொண்டுபோகிறார்களோ என்று பல்லவி பாடல்களும் காதில் விழத்தான் செய்தது ஒருபுறம்.
இதில் இலக்கிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் காற்றடிக்கும் திசைகளில் அரோகரா போட்டு இந்தப் பக்கம் திரும்பவேமாட்டார்கள் என்பது இன்னொருபுறம்.
எந்தப் புறமும் எது வந்தாலும் கொண்ட கொள்கையை நோக்கி சீராக பயணிக்க நினைத்தது வ.உ.சி. ஆய்வு வட்டம்.
சமூக ஊடகங்கள் வழியாகவே பெரியவர் வ.உ.சி. குறித்த பல்வேறு உண்மைத் தகவல்களை பதிவுகளாக ஆக்கி பொதுப்புத்தியில் பதியச் செய்தது.
ஊடகங்கள், ஓவியங்கள், இசை, வரலாற்று நிகழ்வுகள் போன்ற பல்வேறு தளங்களில் பெரியவர் வ.உ.சி.யை கொண்டு போய்ச் சேர்த்தோம்.
மக்கள் தலைவர் வ.உ.சி. என்ற குறுவெளியீடு சுமார் 35000 பிரதிகள் போய்ச் சேர்ந்தது.
சுந்தரன் முருகேசன், ஜீவா, சசி மாரீஸ், ரவி பேலட், ஆகியோர் ஓவியங்கள் வழியாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்றனர்.
கடந்த இரண்டு வருடங்கள் காலண்டர் வழியாகவே வ.உ.சி.யின் சுருக்கமான வரலாற்றை கொண்டு சென்றோம்.
குழந்தைகளுக்காக மெய்யறம் – மாணவர் இயல் மற்றும் 2025ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரை மெய்யறம் உரை ஆடியோ காணொளி வழியாக தினமும் காலையில் தவறாமல் பதிவிட்டு வருகிறோம்.
பெரியவர் பிறந்தநாள் மற்றும் திருநெல்வேலி எழுச்சி நாள் விழாவாக கொண்டாடி மக்களிடம் எடுத்துச் செல்கிறோம்.
இதன் ஒரு பகுதியாக உயர் கல்வி நிறுவனங்களில் வ.உ.சி. பெயரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தவிர்த்து எந்தப் பல்கலை கழகங்களிலும் வ.உ.சி. பெயரில் இருக்கையோ, அறக்கட்டளை சொற்பொழிவோ இல்லை என்பதை கவனத்தில் கொண்டோம்.
பல்கலைக்கழகத்தில் எப்படியாவது அறக்கட்டளை சொற்பொழிவு நிறுவிட முயற்சி செய்தோம். அந்த வகையில் முதல் முயற்சியாக காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் ஆலோசித்தோம்.

துறைத் தலைவர் பேராசிரியர் ஆனந்தகுமார் எங்களுக்கு நல்வழிகாட்டியாக இருந்து வழிநடத்தினார்.
பல்கலை துணைவேந்தர் பெருமதிப்புக்குரிய ந.பஞ்சநதம் எங்கள் அமைப்புக்கு வ.உ.சி. பெயரில் அறக்கட்டளை நிறுவ உடனடி அனுமதி தந்தார்.
பெரியவர் வ.உ.சி. எப்படி பொதுமக்கள் பங்கேற்போடு கப்பலை இறக்கினாரோ அதே போன்று சாதாரண மக்களை நம்பி கோரிக்கை வைத்தோம்.
செப்டம்பர் மாதத்திற்குள் மூன்று மாத இடைவெளியில் அறக்கட்டளைக்கு தேவையான மூன்று இலட்சம் வேண்டி முகநூல் வழியாகவே கோரிக்கை வைத்தோம்.
மூன்றே வாரங்களில் வ.உ.சி. ஆய்வு வட்டத்தை நம்பி மூன்று லட்சம் நன்கொடை நிதி வந்து சேர்ந்து, எங்களைத் திக்குமுக்காடச் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு எவ்வாறு நன்றிக் கடன் செலுத்தப்போகிறோமோ என்று தெரியவில்லை.
மேலும் மிகச்சரியாக அறக்கட்டளை சொற்பொழிவு நடத்திடும் பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடை அளிக்க பல முக்கிய பிரமுகர்கள் உதவ முன்வந்துள்ளனர் என்ற நற்செய்தியையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் முதல் முயற்சியாக இந்த சிறு அமைப்பான வ.உ.சி. ஆய்வு வட்டத்தை நம்பி, நன்கொடை நிதி அளித்த அத்துணை நன்கொடையாளர்களுக்கும் ஆய்வு வட்டம் சிரம் தாழ்த்தி மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.