உலகத்தின் பார்வையில் ஏதோ இஸ்ரேலும், ஈரானும் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுக் கொள்வது போலத் தெரிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
ஈரான் தனித்து நின்று போர் செய்கிறது. இஸ்ரேலுக்கு கூட்டாக பல நாடுகள் உதவுகின்றன.
இஸ்ரேலைத் தாக்க ஈரான் ஏவுகணைத் தொகுதி ஒன்றை ஏவுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவை குருவிக்கூட்டம் போல மேற்கு நோக்கி பாயும்போது, பாரசீக வளைகுடாவில் பாஹ்ரைன் தீவில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை முடிந்த அளவுக்கு இடைமறிப்பு செய்கிறது.
அதில் ஒன்றிரண்டு ஏவுகணைகள் தகர்ப்பட, அதையும் தாண்டி மற்ற ஏவுகணைகள் பயணப்படுகின்றன.
இராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இப்போது இடைமறிப்பு முயற்சிகளைச் செய்கின்றன.
இதையும்தாண்டி ஜோர்டான் அருகே வரும்போது ஈரானிய ஏவுகணைகளை ஜோர்டான் நாடு வழிமறித்துத் தகர்க்க முயற்சிக்கிறது.
அதேப்போல செங்கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களும் இந்த இடைமறிப்பு பணியில் ஈடுபடுகின்றன.
சௌதி அரேபியா கூட ஈரானிய ஏவுகணைகளை இடைமறிப்பதாகக் கூறப்படுகிறது.
ஏவுகணைகள் இஸ்ரேலை நெருங்கும் வேளையில் மத்தியத் தரைக்கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள், சைப்பிரஸ் தீவில் உள்ள பிரிட்டன் தளங்களில் இருந்தும் இடைமறிப்பு ஏவுகணைகள் ஏவப்படுகின்றன.
இஸ்ரேல் அதன் பங்குக்கு அயர்ன் டோம் போன்ற பல்வேறு வான்தடுப்பு சாகசங்களைச் செய்து பார்க்கிறது.
இத்தனை தடைகளையும் தாண்டித்தான் ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான டெல்அவிவ், துறைமுக நகரமான ஹைபா உள்பட பல்வேறு இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்குகின்றன.
ஆனால், இஸ்ரேலிய ஏவுகணைகளைத் இதுபோல யாரும் தடுப்பதில்லை. அவை ஈரானை நோக்கி பாய்கின்றன. ஈரான் அவற்றை இடைமறித்தால்தான் உண்டு.
ஆக, ஒற்றை நாடாக, சொந்த தயாரிப்பு ஏவுகணைகளுடன், உலகத்தின் இரண்டு பெரிய வல்லரசுகள் உள்பட ஐந்து நாடுகளுடன் தனியொரு சக்தியாக ஈரான் போராடுகிறது.
இத்தனை தொழில்நுட்பங்களையும் மீறி ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலை குதறி வருகின்றன.
இந்த கடுப்பில்தான் அமெரிக்க சண்டியர் இப்போது நேரடியாக களம் புகுந்து ஈரானின் ஃபோர்டோ, இஸ்பகான், நடான்ஸ் பகுதி அணுஆலை பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
13 ஆயிரம் கிலோ எடையுள்ள ஜிபியூ-57 குண்டுகள் பி-2 விமானம் மூலம் 12 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்டிருக்கிறன.
கான்கிரீட் தளங்களை 60 அடி உயரம் வரை ஊடுருவிய பின் வெடிக்கக்கூடிய 2400 கிலோ குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
‘இந்த மூன்று இடங்களிலும் ஓர் ஈகாக்கை கூட இல்லை. இந்த 3 தளங்களையும் எப்போதோ காலி செய்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறது ஈரான்.
கிட்டத்தட்ட பூட்டிய வீட்டின் முன் சவுண்டு விடுவதுபோன்ற தாக்குதல்தான் அமெரிக்கா நடத்தியிருக்கும் இந்த வான்வெளித் தாக்குதல்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இன்று காலை முதல் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியிருக்கிறது ஈரான்.
இந்த போர் எங்கே போய் எப்படி முடியுமோ தெரியவில்லை?
– மோகன ரூபன்