வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய் வாழ்ந்திருக்கிறார்கள்.
எளிய கிராமப்புற விவசாயிகள் கூரை வேய்ந்த சிறு வீடுகளில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள். மலை வாழ் மக்களோ அவர்கள் வாழ்விடத்தை ஒட்டியபடி அவர்களும் எளிய வாழ்வையே மேற்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துவங்கி ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை வீடுகளுடைய பொதுவான தோற்றங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கின்றன.
தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபிறகு உருவான காங்கிரீட் சூழல் வேறுவிதம். இதை மேலே சொன்ன அந்த வரையறைக்குள் கொண்டு வந்துவிட முடியாது.
ஆனால், இதிலிருந்து தனித்துத் தெரிவது காரைக்குடி சார்ந்த செட்டிநாடு பகுதியில் அமைந்திருந்த, இன்றும் அமைந்திருக்கும் வீடுகள்.
செட்டிநாடு அரசர் வாழ்ந்த வீடுகளும் சரி, வெளிநாட்டுக்கு வணிகத்திற்காக சென்று சம்பாதித்து அவரவர் சொந்த ஊர்களில் செட்டிநாட்டு மக்கள் கட்டிய வீடுகளும் சரி, கட்டுமானத்தில் ஒரே பாணியை அடிப்படையாகக் கொண்டவை.
அவற்றைக் கட்டுவதற்கென்றே செட்டிநாட்டு ஊர்களில் அதற்கென கட்டுமான ஊழியர்கள் இருந்தார்கள்.
வீடுகளைக் கட்டுவதே அவர்களது பிரதான தொழிலாக இருந்தது. இப்போதும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் செட்டிநாட்டு வீடுகள் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களால் படம்பிடிக்கப்பட்டு பொதுவெளிக்கு முன் காட்சிப் பொருளாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
வீடு என்பது எளிய வசிப்பிடம் என்கிற நிலை மாறி அந்த வீடுகள் செட்டிநாட்டு மக்களின் பண்பாட்டின் அடையாளமாக உருமாறி இருப்பதையும் பார்க்க முடிகிறது.
அத்தகைய செட்டி நாடு வீடுகளைப் பற்றிய ஒரு பதிவு இதோ:
****
ஆச்சர்யம் தான்.
நம் கலாசாரத்தைச் சொல்லும் வீடுகள் யுனெஸ்கோ வரைபடத்தில் இடம்பிடித்திருக்கின்றன என்றால் பெருமை இல்லையா?
அந்த அளவுக்குப் பொக்கிஷத்தைப் போலிருக்கின்றன செட்டிநாட்டு வீடுகள்.
நுழைந்ததும் கோவில் மாதிரியான அலங்கார வளைவுகள். பிரமிப்பை ஏற்படுத்தும் கலை நுட்பம் கூடிய நிலைக்கதவுகள். பளிங்கு பரவிய தரை.
அண்ணாந்து வியக்க வைக்கும் மேற்கூரை. விரிந்து முற்றம். விசாலமான தாழ்வாரம் என்றிருக்கும் வீடுகளைக் கனவின் இன்னொரு வடிவங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்.
காரைக்குடியைச் சுற்றியுள்ள சுமார் 96 ஊர்களைத் தான் ‘’செட்டி நாடு’’ என்கிறார்கள். தேவகோட்டை, கானாடு காத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி என்று பல ஊர்களையும் இணைக்கும் அம்சம் – இங்குள்ள கலை நேர்த்தியான வீடுகள்.
ஒரே நேரத்தில் பலரும் அழகான கனவைக் கண்ட மாதிரி எப்படி இவ்வளவு அழகான வீடுகள் உருவாயின?
சின்ன ஃபிளாஷ்பேக். பர்மா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை என்று பல நாடுகளிலும் பரவியிருந்தார்கள் நகரத்தார் என்றழைக்கப்பட்ட நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.
இரண்டாம் உலகப் போர் மூண்டதும் அவர்களுக்குக் கடும் நெருக்கடி.அதற்கு முன்பு பல நாடுகளில் அவர்களுடைய பணத்தை முதலீடு செய்திருந்தார்கள்.
1930க்கு முன்பு சென்னையில் மட்டும் அவர்கள் முதலீடு செய்திருந்த தொகை மட்டும் இரண்டு மில்லியன் ரூபாய். பர்மாவில் 225 மில்லியன்.
போருக்குப் பிறகு அவர்கள் சொந்த மண்ணை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்கள்.
தங்களுடைய சொந்த மண்ணில் வீடுகளை அரண்மனையைப் போலக் கட்டினார்கள். 1875 லிருந்தே செட்டிநாட்டில் வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டது 1900 க்குப் பிறகு தான்.
சாதாரணமாக எண்பது அடியிலிருந்து 240 அடி வரை நீள அகலம் உள்ள விசாலமான வீடுகள் கட்டப்பட்டன. இப்படிக் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மட்டும் எட்டாயிரம். தற்போது இந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
தரை மட்டத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் தான் வீடே எழுப்பப் பட்டிருக்கிறது. சர்வதேசத் தொடர்பு அவர்களுக்கு இருந்ததால் வீடுகளிலும் அது பிரதிபலித்தது.
பர்மாவிலிருந்து தேக்குகள் வந்தன. இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து ‘’பொருசு’’ என்கிற மரங்கள் இறக்குமதியாகின. இத்தாலியிலிருந்து பளிங்கு வந்திறங்கியது. பெல்ஜியத்திலிருந்து கண்ணாடிகள் வந்தன. ஆற்றங்குடியிலிருந்து தரையில் பதிக்கப்படும் ‘டைல்ஸ்’ வந்து சேர்ந்தன.
இங்கு கட்டப்பட்ட வீடுகளுக்குத் தேவையான செங்கலை அனுப்ப ராஜபாளையத்தில் தனியாகக் கொத்தனார் தெருவே இருந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
ஆங்கிலேய-இந்திய பாணியில் கட்டப்பட்ட இந்த வீடுகளைக் கட்டுவதில் தேர்ச்சி பெற்ற ஆசாரிகளும், ஸ்தபதிகளும் எழுவங்கோட்டை என்கிற கிராமத்தில் இருந்தார்கள்.
இந்த வீடுகளின் இன்னொரு சிறப்பம்சம் – இங்குள்ள வழுவழுப்பான சுவர்கள். சுண்ணாம்புச் சாந்து, முட்டை, கருப்பட்டி, கடுக்காய் எல்லாம் சேர்ந்த கலவையோடு இருப்பதால் சுவர்கள் கெடுகெட்டி.
வீடு என்பது கனவு மட்டுமல்ல, அவர்களுடைய அந்தஸ்தின் அடையாளமாகவும் ஆனது. அவரவர் பொருளாரத்திற்கேற்றபடி வீடுகள் விசாலமாக இருந்தன அல்லது குறுகியிருந்தன.
செட்டிநாட்டு வீடுகளுக்குள் நுழைந்ததும் கண்ணில் படுவது நிலைக்கதவின் முகப்பில் உள்ள அழகான சூர்யப் பலகை. இதில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் நுட்பமான செதுக்கப்பட்டிருந்தன.
பொக்கிஷத்தைப் போல பலரும் உணர்ந்த அந்த சூர்யப்பலகை மட்டும் நாற்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பது வியப்பு.
இந்த வீடுகளில் நல்ல வசதியான ரகம், சுமாரான ரகம் என்று இரண்டு ரகமான வீடுகள் இருந்தாலும், இரண்டுமே தற்காலப் பார்வைப்படி பிரமாண்டம் தான்.
குளிர்ச்சியான திண்ணை. உள்ளே நுழைந்தால் அடுத்தடுத்து முதல்கட்டு, இரண்டாம் கட்டு என்று பல கட்டுகள். அப்புறம் ‘வளவுகள்’. நடுவில் விரிந்த முற்றங்கள். சாப்பிடுவதற்கென்றே தனியான ஹால்கள். பின்னால் கிணறு, ஆட்டுரலுடன் கூடிய சமையல்கட்டு. தனித்தனி அறைகள். சில வீடுகளில் முப்பது அறைகள் வரை இருக்கின்றன.
பெண்கள் அந்த மூன்று நாட்களில் ஒதுங்கக்கூடத் தனியறைகள். ஒரு தெருவில் துவங்கி பின்னிருக்கும் இன்னொரு தெரு வரை நீண்டிருப்பது பல வீடுகளின் பொதுவான அம்சம்.
மழையோ, வெயிலோ வீட்டிற்குள் வருகிறபடி அமைக்கப்பட்டிருக்கிற வீடுகள் நல்ல காற்றோட்டத்துடனும், பளிச்சென்ற வெளிச்சத்துடனும் இருக்கின்றன.
அப்போது கூட்டுக் குடும்பமாக இந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள் தற்போது பெரு நகரங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். கல்யாணம் பெரும்பாலும் சொந்த வீடுகளில் தடல்புடலாக நடக்கிறது.
கனமான தாலி செயினுடன் நீண்ட சீர்வரிசையுடன் நடக்கும் திருமணத்தை இன்னும் அவர்களுடைய மரபின் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
மறைந்த முன்னோர்களுக்குப் படைப்பு வைப்பதும் இங்கே நடக்கிறது. கானாடு காத்தான் கிராமத்திலிருக்கும் செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரின் வீடு இன்றும் நம் கண்ணிற்கு முன்னால் வியப்பு ஏற்படுத்தும்படி நிற்கும் ஓர் உதாரணம்.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயரான ராஜா சர் முத்தையா செட்டியார், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம், அழகப்பச் செட்டியார், நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், திரைப்படங்களில் கோலோச்சிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், கவிஞர் கண்ணதாசன், எஸ்.பி.முத்துராமன்.
பத்திரிகைத்துறையில் முத்திரை பதித்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணன், உலகம் சுற்றியான ஏ.கே. செட்டியார், தேனீயைப் போல பொக்கிஷத்தைச் சேகரித்த ரோஜா முத்தையா செட்டியார், பழ.கருப்பையா
–இப்படிப் பிரபலமான நீண்ட பட்டியலைக் கொண்ட நகரத்தார் சமூகத்தினரின் எண்ணிக்கையை மிகத்துல்லியமாகச் சொல்கிற அளவுக்குத் தொடர்புகளில் பலப்பட்டிருக்கிறது இந்தச் சமூகம்.
நகரத்தாரின் வீட்டில் நுழைந்தாலே நம் பார்வை அகலமாகிவிடுகிறது. அபூர்வமான பொருட்களைக் கொண்ட முன்னறை.
கறுப்பு வெள்ளைக் கட்டம் போட்ட வெளிநாட்டுப் பளிங்குக் கற்கள் பதித்த திண்ணைகள். இதில் வசித்தவர்களின் ஆளுயுரப் படங்கள். முற்றங்கள் என்று அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்து திரும்பினால் ‘’வாக்கிங்’’ சென்று வந்ததைப் போன்ற உணர்வு.
பல சினிமாப் படப்பிடிப்புகள் இங்கு நடந்திருக்கின்றன. பல தொலைக்காட்சி சீரியல்கள் சுற்றியுள்ள செட்டிநாட்டு வீடுகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன. காரைக்குடியில் இருக்கும் ஒரு வீட்டின் பெயரே ‘ஆயிரம் ஜன்னல்’வீடு.
இந்த வீடுகள் இவர்களுடைய வசிப்பிடம் மட்டுமல்ல – காங்கிரீட்டினால் ஆன இன்னொரு கருப்பை.
‘ஆச்சி’, ‘அப்புச்சி’ போன்ற ஏராளமான வழக்குச் சொற்கள் செட்டிநாட்டுத் தமிழுக்கு இவர்கள் தந்த கொடை.
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வீடுகள் ஏற்படுத்தும் வியப்பை அவர்களுடைய விரிந்த விழிகளில் உணரமுடியும்.
உபசரிப்புக்குப் பெயர் போன செட்டிநாட்டு வீடுகளில் நுழைந்ததும் – கேட்கிற பிரியமான ஒரு சொல்.
‘’பசியாறிட்டீகளா?’’
கேட்டதும் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடும் அனுபவத்தை நீங்களும் உணர முடியும்!
– மணா
(வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டு வரும் கதைசொல்லி காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரை.)