சிறுகதை:
“வாசப்பக்கம் கதவு தொறக்குற சத்தம் கேக்குது… என்னன்னு பாருடா ஏலேய்…” என்று சத்தமிட்டார் செல்வி.
“என்ன இந்த வருசம் இப்படிக் கொளுத்துது வெயிலு… ஒரு பொட்டு தூத்தல் போட மாட்டேங்குதே… ஸ்ஸு…” என்றபடி உள்ளே நுழைந்து இரும்பினாலான முன்புறக் கதவை தாழிட்டார் ராசு தாத்தா.
அங்கே வாசலில் கொப்பரைத் தேங்காய்களும் மா வத்தல்களும் சோற்று வடகமும் என வெவ்வேறு நாடாக் கட்டில்களில் வெள்ளை வேட்டிகளின் மேல் படுத்துக்கொண்டு அப்போது தான் எட்டிப்பார்க்கத் தொடங்கிய சூரியக் கதிர்களைப் பருகிக் காய்ந்து கொண்டிருந்தன.
அவர் வருவதைப் பார்த்ததும் உள்ளே ஓடி, “ராசு தாத்தா வந்துருக்காவம்மோவ்” என்றபடி அம்மாவைக் கூட்டி வந்தான் சங்கர்.
அரனாகயிறு அரைக்கால் சட்டை மேல் பதிந்து அது விழாமல் பிடித்துக்கொண்டு இருந்தது.
“மாமா வாங்க வாங்க… நா ஊருக்கு வந்தனைக்கு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அவ்வொள காரு வர்ற நேரத்துக்கு ரோட்டுக் கரைக்கு வரச்சொல்லிருப்பனே…” என்ற இளஞ்செல்விக்கு நீண்ட நாள் கழித்து தன் வீட்டுக்கு வந்திருக்கும் சின்ன மாமனாரைக் கண்டதும் கைகால் ஓடவில்லை.
திண்ணையில் அமரச்சொல்லி மண்பானையிலிருந்து சொம்பில் நீர் மோந்து தந்தார்.
“இப்போ வயக்காட்டுல நிக்கிறவோ… கூட்டியார சொல்றேன். ஏலே தம்பி… தாத்தா வந்திருக்கொவன்னு சொல்லி உங்கப்பாரை கூட்டிகிட்டு வா ராசா…” பெரியவரிடம் தொடங்கிய பேச்சை மகனிடம் கெஞ்சலாய் முடித்தார் செல்வி.
“அட இருக்கட்டும் ஆயா… இன்னைக்கு இங்கன தான இருக்கப்போறேன். நீ பைய போ, நா கொஞ்சம் இந்த திண்ணையில அப்புடியே கட்டைய சாய்க்கிறேன்.. நீ அடுப்படியில வேல கெடந்தா பாரு.. அத்தாச்சி எங்க ஆளக் காணும்” என்றார்.
“அவ்வொளும் வயல்ல தா மாமா… இன்னைக்கு உளுந்து அரிக்கிறது… ஆளும் பேருமா நின்னா சடுதியா முடிச்சுட்டுடலாம்…
நாங்களும் அங்கன தான் நின்னோம். இப்போ சோறாக்க தா வந்தோம். செத்த நேரம் இருங்க, அடுப்ப பாத்துட்டு வரேன்” என்றவர், வியர்வையை முந்தானையில் துடைத்தபடி முன்கொட்டகையிலிருந்து சமையலறைக்குள் புகுந்தார்.
அங்கும் வியர்வை பொங்கிக் கவிந்தது. புழுக்கம் தாளாமல் ‘இந்த பய மவன் வெயிலு என்ன இப்புடி கொளுத்துது’ என்று சலித்துக் கொண்டு வேலையில் மூழ்கினார்.
திண்ணையில் படுத்திருந்த ராசு தாத்தாவின் நிலையும் அதுதான்.
‘இந்த மானம் ரெண்டு பொட்டு தூத்த போட்டா கொறைஞ்சா போவும்’ என்று பெருமூச்சுவிட, இவற்றையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சூரியன் மிகுந்த மனவருத்தம் கொண்டது.
மக்கள் தன்மேல் உமிழும் வெறுப்பில் சூரியனுக்கே கழிவிரக்கம் பிறந்தது. எப்படியாவது ஒருவர் வாயிலும் விழாமல் ஒருநாளாவது தள்ளிவிடலாம் என்று நினைத்திருந்த கதிரவனின் கதி யாருக்கும் வரக்கூடாது.
இப்படி இருவர் புலம்புவதைக் கேட்டுதான் நேற்று கருமேகங்கள் சிலவற்றை தென்மேற்கிலிருந்து கூட்டிவந்து மழை பெய்ய வைத்தது.
ஆனால், இதே செல்வி தான் ‘வெளங்காம போற மானம்.. நாளன்னைக்கு பெஞ்சா கொறஞ்சா போவும்.. ஒருநாள் இருந்திருந்தா உளுந்து அரிச்சிருக்கலாம்..’ என்று திட்டிக்கொண்டிருக்க,
கொல்லை வாசல் வழி கை-கால் அலம்பிவிட்டு உள்ளே வந்த அவர் கணவர் சண்முகமோ “இங்கன தான் தூரிருக்கு. அங்கிட்டுலாம் வெயிலு பொளந்து எடுக்குது” என்று சொன்னபோது ‘நல்ல… வேள’ என்று ஆசுவாசப் பட்டுக்கொண்டாரே தவிர வானத்தைத் திட்டியதற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவே இல்லை.
சூரியனுக்கு சுள்ளென்று வந்த கோபத்தில் இன்னும் கொஞ்சம் வெப்பம் கூடியது. இன்று காலை கூட இப்படித்தான். நேற்று பலபேரின் வசவுகளுக்கு ஆளானதால் இன்றாவது கொஞ்சம் குளுமை காண்பிக்கலாம் என்று நினைத்த சூரியன் மேகப்போர்வை போர்த்திக் கொள்ள ஆயத்தமான போது,
“இன்னைக்கு தான் இந்த வத்தல் வடவத்தை எல்லாம் எடுத்து காய வைக்கலாம்னு வந்தேன். காலையிலேயே இந்த மானம் இப்படி மூடுதே” என்ற செல்வியின் அங்கலாய்ப்பு காதில் விழுந்து தன் சுக உறக்கத்தை கலைத்துக்கொள்ள முடிவு செய்தது சூரியன்.
திண்ணையில் படுத்திருந்த ராசு தாத்தாவுக்கு கசகசப்பில் முழிப்பு தட்டியது. கைவிசிறியோடு வாசலுக்கு வந்து அமர்ந்த சண்முகம் அவர் அசைவைக் கண்டு “சித்தப்பா..! முழிச்சாச்சா… தூங்கிட்டு இருந்தியளேன்னு எழுப்பல.
சௌக்கியந்தானே…? சின்னவன் வந்தான் நீங்க வந்திருக்கியள்னு சொல்லி… வாங்களேன் ஒரு எட்டு போயி எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துருவோம். வெயிலு உச்சிக்கு போச்சுன்னா அப்பறம் வெளிக்கெளம்ப முடியாது” என்று சொன்னார்.
“ஆயா செலுவி.. இந்த கொடய கொண்டாரியா..! வயசானதுல வெயிலு கண்ண மறக்கிது. மூர்த்த ஓலை எழுத தான… ரொம்ப சொல்லல தம்பி. கல்யாணத்துக்கு பெருசா சொல்லிக்கலாம். இப்போ பங்காளிக்கும் மாமன் மச்சானுக்கும் சொன்னா போதும்.
அங்க என்கூடப் பொறந்தவளுக்கு, பங்காளிக்கெல்லாம் சொல்ல உங்க சின்னாயியும் மாப்பிள்ளைக்காரனும் போயிருக்காவ. சட்டுன்னு முடிவாயிருச்சுல்ல. நேரம் வேற கம்மியா இருக்கு. பொண்டுவள கூப்பிடல. ஆம்பளையாளு மட்டுந்தான்” என்றவர் எழுந்து தன்னை சரிசெய்துகொண்டார்.
அடுத்த வீடான சண்முகத்தின் பெரியப்பா வீட்டிற்குச் சென்று விஷயத்தை சொன்னபோது “என்ன தம்பி மழைக் கெடுவுன்னுல்ல பஞ்சாங்கத்துல சொல்லிருக்கு. இந்த நேரத்துல போய் கல்யாணம் வைக்கிறீயளே.?” என கேட்க,
“இந்த மானம் மனசு வச்சு நம்மள காப்பாத்தி விட்டா உண்டு. இல்லனாலும் பாத்துக்கிடுவோம் வாங்க” என்று பதில் சொன்னார் ராசு.
“என்னப்பா சம்முவம்… ஏதோ மழை கிழைன்னு பயமுறுத்துறவளே..!” என்று சோகமாக கேட்டவரிடம், “ஆமா வெயில் போட்டு மண்டைய பொளக்குது. இதுல மழை வேறயா.. நீங்க வேற சித்தப்பா” என்று சொல்லிக் கொண்டே குடையை விரித்தார் சண்முகம்.
பக்கத்து வீட்டிற்கு செல்ல அவர்கள் நடையைக் கட்டியபோது தூரல் ஒன்றிரண்டாய் விழ ஆரம்பித்தது. மெல்ல வீசிய சாரலில் ராசு தாத்தாவின் முகத்தில் ஒட்டியிருந்த களைப்பு மறைந்து விட்டிருந்தது.
அனைத்து வீடுகளுக்கும் சொல்லி முடித்து வீட்டிற்கு வரையில் “நடுவுல தூத்த போட்டு மானம் வேற கொஞ்சம் எடக்கு பண்ணிருச்சு.
காஞ்ச வத்த வடவத்தல்லாம் உள்ள அள்ளி வீசிட்டு இப்பதான் சாப்பாடு எடுத்து வச்சேன். நீங்களும் வந்துட்டீங்க…” என்றாள் தலையில் தூரல் படாமல் இருக்க முக்காடிட்டுக் கொண்டிருந்த செல்வி.
அவர்கள் உள்ளே செல்லவும் அச்சிறுமழை நிற்கவும் சரியாக இருந்தது.
“தல நனைகிற அளவு கூட மழை பெய்யல. இதுக்கு எதுக்கு இந்த மானம் தூத்த போடணும்?” என்றபடி சாமான்களை எடுத்து கூடத்தில் வைத்துக் கொண்டிருந்தாள் செல்வி.
“தல நனையிற அளவுக்கு இப்போ தூரி இருந்தா நம்ம உளுந்து ஊத்தி மூடி இருக்கும். எல்லாத்துக்கும் புலம்பாம சோத்தை போடுற வழிய பாரு” என்ற சண்முகம் தான் அறுத்துக் கொண்டு வந்திருந்த வாழை இலைகளைப் பரப்பி ராசு தாத்தாவுடன் சாப்பிட அமர்ந்தார்.
“சின்னவன் என்ன பண்றான் அவனை வர சொல்லு” என்று சொல்ல, “எலே தம்பி… சாப்புட வா” என்று செல்வி இரைய, எழுந்து சென்று அழைத்து வந்து அவனையும் அமர வைத்து கொண்டார் சண்முகம்.
“நீங்க கூப்பிட்டா தான் வருவான். என் பேச்சை எங்க கேக்குறான்” என்று அதற்கும் செல்வி அங்கலாய்த்துக்கொண்டாள்.
“அத்தைக்கும் பெரியவனுக்கும் சோறு குடுக்கணும்” என்று சொல்லி குண்டு வாளியைக் கொண்டுவந்து திண்ணையில் வைத்துவிட்டு தான் சாப்பிட உள்ளே செல்ல நினைத்த செல்வியிடம் “ஆயா நான் கிளம்புறேன். இப்ப போவலன்னா கடேசி பஸ்சு போயிரும். வரட்டா..!” என்றார்.

“இருந்துட்டு போலாமே மாமா..” என்று புன்னகையோடு கேட்ட செல்வியிடம் “வேல கெடக்குல்ல நமக்கு. வேற நேரன்னா தங்கலாம். திருநாளுக்கு ஒங்க அத்தையையும் கூட்டிகிட்டு வரேன். அப்புடியே தோப்புல உங்க அத்தகிட்டயும் சொல்லிட்டு கெளம்புறேன். பாக்கலாம் யா..” என்று விடைபெற்றுச் சென்றார்.
செல்வி வத்தல், வடவங்களை மீண்டும் நாடாக் கட்டிலில் பரப்பி வைத்துவிட்டு சாப்பிட அமர்வதைக் கண்ட சூரியன், அவர் மீதிருந்த கோவத்தைக் குறைத்துக்கொண்டது.
அடுப்படியில் வெந்து எல்லோரும் உண்டு முடித்த பிறகு சாப்பிடும் செல்வியின் இந்த சில நிமிட ஓய்வைக் குலைக்க விரும்பாது மேகப் போர்வையை விலக்கியது.
சண்முகத்தின் மாட்டுவண்டி வாசலை விட்டு அகன்றது. அது மெல்ல அசைந்து புளிய மரத்தடியின் பக்கம் வளைந்து சாலையோடு சேர்ந்தபோது மீண்டும் வெயில் தலை காட்டியது.
அன்று மாலை நேரம் வீடு திரும்பிய சண்முகம், “கடைசி உளுந்து மூட்டைய கொட்டாயில போட்டு மூடவும் மழை வெளுக்கவும் சரியா இருந்துச்சு போ! பத்து நிமிசம் முன்ன வந்துருந்தாலும் மொத்தமா போயிருக்கும். உன் வசைக்கு பயந்து கெடக்கு மானமும்!” என்று சிரித்தார்.
****
இக்கதையின் ஆசிரியர் பிரதீபா சந்திரமோகன் ஒரு M.E பட்டதாரி. சென்னையில் வசிக்கும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
எழுத்தின் மீது கொண்ட காதலால் 2015 முதல் www.pratheba.com என்னும் வலைத்தளத்தில் கவிதை மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இவரின் ‘இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்’ என்னும் வரலாற்றுப் புனைவுப் புதினம் 2023இல் நூலாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.