மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!

ஏப்ரல் 23 – உலக புத்தக தினம்:

சமீபத்தில் பார்த்த வீடியோ ஒன்றில், ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியை ஒருவர் ‘கற்றலில் இருக்கும் நான்கு வழிகள்’ பற்றிக் கூறுவதைக் கண்டேன்.

வாசிப்பது / எழுதுவது, உள்ளடக்கத்தைக் காண்பது, காதால் கேட்பது, உடல் அசைவு செயல்பாடுகளின் வழியே பாடங்களைப் புரிந்துகொள்வது என்று அவை நான்கு வகைப்படுகின்றன. இவை நாம் ஏற்கனவே அறிந்தது தான்.

ஆசிரியர் பாடம் நடத்தும்போது புத்தகத்தை வாசிப்பதும், பிறகு குறிப்புகள் எழுதிக்கொள்வதும், அவர் வரைகிற படங்கள் உள்ளிட்டவற்றைக் காண்பதும், அவர் சொல்கிறவற்றைக் கேட்பதும் நம் மனதில் பதிவது அந்த வகையில்தான்.

நாம் கற்பனையாக ஒரு விஷயத்தை அனுமானித்துச் சம்பந்தப்பட்ட பாடங்களை அவற்றோடு பொருத்திப் பார்ப்பதையே, இப்போதிருக்கும் ‘செயல்வழிக் கற்றல்’ வேறுவிதமாக வெளிப்படுத்துகின்றன.

இப்படிப் பலவகையாகக் கற்றல் செயல்பாட்டை மேற்கொண்ட நம்மில் பலர், இப்போது அன்றாட நிகழ்வுகளில் எழுதுவதையும் வாசிப்பதையும் அறவே கைவிட்ட நிலையில் வாழ்கிறோம்.

‘எதற்கெடுத்தாலும் மொபைல்’ என்று சொல்லத்தக்க வகையில் கேட்பது, பார்ப்பதோடு நமது ‘விஷய ஞானம்’ முடிந்துவிடுகிறது.

மற்ற இரண்டுக்கும் வேலையே இல்லை. குறிப்பாக, வாசிப்பது என்பது வெகுவாக அருகி வருகிறது.

வாசிப்பது இன்றியமையாதது!

’புத்தகத்தை வாசிக்கிறதைவிட ஆடியோ ஃபைலா டவுன்லோட் பண்ணிக் கேட்டுரலாம்’ என்கிறவர்கள் இப்போது அதிகமிருக்கின்றனர்.

கேட்பது காதுகளுக்கு நல்ல பயிற்சிதான். ஆனால், வாசிப்பதே மூளைக்கும் கண்களுக்கும் இதர உடல் பாகங்களுக்கும் நன்மையளிப்பது.

முக்கியமாக, தொடர்ச்சியாக வாசிக்கிறபோது உண்டாகிற அயர்ச்சி சிறிது நேரத்தில் நீங்கிவிடும். ஆனால், தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி, மொபைல், கம்ப்யூட்டரை பார்ப்பதால் வருகிற சுணக்கம் தூங்கினாலும் முழுதாகத் தொலையாது.

அதனால், அவற்றைத் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பது கோளாறுகளைத்தான் வரவழைக்கும்.

புத்தகங்களை வாசிக்கிறபோது மூளை செயல்பாடு தொடர்ந்து நடைபெறும். அதனால் மறதி ஏற்படும் அளவு குறையும். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளை உற்றுநோக்குகிற போது கவனிப்புத்திறன் அதிகமாகும்.

பல விதமான புத்தகங்களைப் படிக்கிறபோது, பல கோணங்களில் சிந்திக்கிற மனப்பாங்கு கைவரும்.

அது எதையும் ஆராய்ந்து தெளிகிற வழக்கத்தைத் தோற்றுவிக்கும்.

ஆங்கிலமோ, தமிழோ, இதர மொழியோ, புதிய சொற்கள் அறிமுகமாகும்.

வாசிப்பது வேகமாகும்போது எழுதுகிற வழக்கம் இன்னும் அதிகமாகும்.

முக்கியமாக, நமது மனச்சோர்வு நீங்கும்.

குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

மனதுக்கு இதமளித்து ஒருவரை மாண்பாக்குவதில் புத்தகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அது இயல்பைச் சிறிதுசிறிதாகப் பெருமளவில் மாற்றங்களை விளவிக்கவும் இவை உதவும்.

’இதை வாசிக்கணும், அதைப் படித்தாக வேண்டும்’ என்று பிறர் சொல்கிறவற்றைப் பின்பற்றுவதைக் காட்டிலும், நமக்குப் பிரியமான புத்தகங்கள் எதுவென்று வாசிக்கத் தொடங்குவது நல்லது.

ஒருகட்டத்தில், அதுவே நமது விருப்பங்களைத் தாண்டி வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைப் படிக்கவும் உந்துதலைத் தரும்.

குழந்தைகளுக்குத் தேவை!

செயல்வழிக் கற்றல் காரணமாக, இன்று குழந்தைகள் அதிகமாகக் கேட்பது, பார்ப்பது போன்றவற்றையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர்.

அது போக, வளர்ப்புச் சூழலோடு கலந்திருக்கிற மொபைல், தொலைக்காட்சிகளின் பயன்பாடு இயல்பாகவே அவர்களது வாழ்வோடு ஒட்டிக் கொள்கிறது.

அதனால், பாடப் புத்தகங்கள் தவிர்த்து வேறு நூல்களின் மீது அவர்கள் கவனம் கொள்வதில்லை.

மீறிப் புத்தகங்களைத் திணித்தாலும், ‘இதை படிக்கிற டைம்ல வீடியோவா அந்த இன்பர்மேஷனை பார்த்துடுவேன்’ என்கிற போக்கே அவர்களிடத்தில் உயர்ந்து நிற்கிறது.

ஒருகாலத்தில் ‘கால்குலேட்டர் எல்லாம் இப்போ கிடையாது’ என்று ‘கறார்’ காட்டுகிற பெற்றோர்கள் அதிகம்.

இன்றோ, ‘எனக்கு கிடைக்காதது என் புள்ளைக்கு கிடைக்கணும்’ என்ற பெயரில் பல பெற்றோர்கள் ‘முட்டாள்தனங்களையே’ அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றனர்.

மின்னனு சாதனங்களைக் குவித்து, அச்சிடப்பட்ட காகிதங்கள் வழி கிடைக்கும் தகவல் குவியல்களைப் புறந்தள்ளுவதும் அப்படியொன்றுதான்.

’புத்தகங்களைப் போல உற்ற நண்பன் ஒருவரும் இல்லை’, ’சொர்க்கம் என்பது நிச்சயம் நூலகத்தைப் போலத்தான் இருக்கும்’, ‘சிறந்த புத்தகங்களை வாசிக்கிறபோது பலவிதமான வாழ்வை வாழ்ந்து தீர்த்த அனுபவங்கள் கிடைக்கும்’ என்று எர்னெஸ்ட் ஹெமிங்வே உட்படப் பலரும் வாசிப்பைச் சிலாகித்திருக்கின்றனர்.

பதின்ம வயதுகளில் புத்தகங்கள் வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துவது, வாழ்நாள் முழுவதுக்குமான தெளிவை வழங்குவதற்குச் சமம்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிற பல குணாதிசயங்களை, நாம் நேரடியாகப் புகட்டாமலேயே பிள்ளைகள் கைக்கொள்ள அவை மட்டுமே பலன் தரும்.

இன்று பல பெற்றோர்கள் அதற்குத்தான் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

என்ன, தங்கள் கைகளில் மொபைலையும் லேப்டாப்பையும் வைத்துக்கொண்டு அதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதனால், பல குழந்தைகள் அதனை ஏற்று நடக்கத் தயங்குகின்றனர்.

கற்பனை சக்தியைத் தூண்டிவிட்டு, அதன் வழியே பலவிதமான திறமைகளைப் பெருக்க நிச்சயம் புத்தகங்களே சிறந்த வழி.

அதனாலேயே, வாசிப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று ‘உலக புத்தகங்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் ‘புத்தக காப்புரிமைகள் தினமும்’ அனுசரிக்கப்படுகிறது.

1995ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் இதனைச் செயல்படுத்தி வருகிறது ஐநாவின் யுனெஸ்கோ.

வில்லியம் ஷேக்ஸ்பியர், மைக்கேல் டி செவாண்டிஸ் உட்படப் பல அறிஞர்கள் மறைந்த தினம் அதுவே. அதனை நினைவூட்டும் விதமாகவும் இத்தினம் பின்பற்றப்படுகிறது.

இந்த கொண்டாட்டத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ‘உலக புத்தகத் தலைநகரம்’ என்று ஓரிடம் தேர்வு செய்யப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டுக்கான ‘உலக புத்தக தின’ கருப்பொருளாக ‘உங்களது வழியில் வாசியுங்கள்’ என்பது கூறப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறையிடம் வலிந்து திணிக்காமல், ’நீங்களாக உங்க இஷ்டப்படி வாசியுங்கள்’ என்கிறது.

அதாகப்பட்டது, ஒவ்வொருவருக்குமான விருப்பம், தேர்வுக்கு முக்கியத்துவம் தருகிறது. ‘எப்படியாவது வாசிச்சா போதும்’ என்கிற பெற்றோரின் மனப்பாங்கு அதில் ஒளிந்திருக்கிறது.

இந்தியாவில் வாசிப்பு மற்றும் புத்தகம் பதிப்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் ‘உலக புத்தக தினம்’ பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தன்று நமது குழந்தைகளிடம் புத்தகங்கள் குறித்து உரையாடுவோம். சில சிறார் இதழ்களை வீட்டிற்கு வாங்குவோம்.

நூலகங்களுக்கு அழைத்து செல்வோம். எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்போம். வாசிப்பதனால் உடலும் மனமும் அடையும் புத்துணர்வு குறித்துப் புரிய வைப்போம்.

இப்படிப்பட்ட முயற்சிகளைத் தொடர்வதன் வழியே, ‘உலக புத்தக தினம்’ கொண்டாடுவதற்கான இலக்குகளைப் பூர்த்தி செய்வோம்!

  • மாபா
You might also like