தொண்ணூறுகளில் தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன ‘இதுதாண்டா போலீஸ்’, ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ உள்ளிட்ட சில தெலுங்கு ‘டப்பிங்’ படங்கள்.
சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர் என்று அப்போதிருந்த முன்னணி நாயகர்களைத் தாண்டி நடிகை விஜயசாந்தியின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடங்கிவைத்த படம் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’. அதே பெயரில் தற்போது புதிய திரைப்படமொன்றில் விஜயசாந்தி தோன்றுகிறார் எனும்போது எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கும்.
அதுவே கல்யாண்ராம் நாயகனாக நடிக்கிற ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’ மீது கவனத்தைப் பெருமளவில் குவிய வைத்தது.
பிரதீப் சிலுகுரி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். சாயி மஞ்ச்ரேகர், ஸ்ரீகாந்த், இந்தி நடிகர் சோஹைல் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’ தருகிற திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
’போலீஸ் வெர்சஸ் கேங்க்ஸ்டர்’ கதை!
எப்படிப்பட்ட ஆபத்தான சூழல்களை எதிர்கொள்ளும்போதும், ஒரே மகன் அர்ஜுன் என்ன ஆவானோ என்று பதைபதைப்பை மட்டுமே மனதில் சுமப்பவர் போலீஸ் அதிகாரி வைஜெயந்தி (விஜயசாந்தி).
அதேநேரத்தில், தன்னைப் போலவே மகனும் தைரியமாக, துணிச்சலாக வாழ்வை எதிர்கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்.
வைஜெயந்தியின் கணவர் (ஆனந்த்) கடற்படையில் பணியாற்றுகிறார். அவரும் மனைவியைப் போல நேர்மையானவர். இருவரது வளர்ப்பும் அர்ஜுனைச் சிறப்பான மனிதனாக மாற்றுகிறது.
தாயைப் போலவே, அர்ஜுனும் (கல்யாண்ராம்) ஐபிஎஸ் அதிகாரி ஆகத் தேர்வுகள் எழுதுகிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியையும் பெறுகிறார். ஆனால், முழுமையாகத் தயாராவதற்குள் சில நிகழ்வுகள் அந்த விருப்பத்தைக் கலைத்துப் போடுகின்றன.
சந்தர்ப்ப சூழ்நிலையால், ஒரு கடற்கரையோரக் கிராமமொன்றில் இருந்துகொண்டு ‘தனி சாம்ராஜ்யம்’ நடத்துகிற கேங்க்ஸ்டர் ஆக மாறுகிறார் அர்ஜுன்.
‘சட்டத்திற்கே முன்னுரிமை’ என்றிருக்கிற தாய், அவருக்கு எதிரில் நிற்கிறார். அவர் தாயைப் பாசத்தோடு அணுகினாலும், தாய்க்கு அந்த மகன் ‘எதிரி’யாகவே தெரிகிறார்.
இந்தச் சூழலில், தாய் வைஜெயந்தியைத் தாக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று உண்மை அறிகிறார் அர்ஜுன்.
‘யார் அவர்கள்’ என்ற கேள்விக்குப் பதில் தெரியும்போது, பழைய நினைவுகள் அவர் கண் முன்னே நிழலாடுகின்றன.
உண்மை அறிந்தபிறகு, அந்த எதிரிகளை அர்ஜுன் என்ன செய்தார்? மகன் பக்கமிருக்கும் நியாயங்களை அறிய விரும்பாத வைஜெயந்தி தனது மனதை மாற்றிக் கொண்டாரா?
தாயும் மகனும் ஒன்றாகச் சேர்ந்தார்களா என்று சொல்கிறது ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’யின் மீதி.
கலக்கும் விஜயசாந்தி!
இந்தப் படத்தின் நாயகன் கல்யாண்ராம், ஜுனியர் என்.டி.ஆரின் சகோதரர்களில் ஒருவர் என்பது நாம் அறிந்ததே. அவரைப் போலவே, இவரும் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுவதிலும் நடனமாடுவதிலும் சூரர்.
சொல்லப்போனால், அவருக்கு சீனியர்.
ஆனால், கல்யாண் ராம் நடிக்கிற படங்கள் அடுத்தடுத்து நான்கைந்து அடி வாங்கினால், பிறகு வரும் ஒரு திரைப்படம் ‘ப்ளாக்பஸ்டர்’ ஆகும்.
கல்யாண் ராமின் உழைப்புக்கு ஏற்ற பலன் திரையில் தெரிய வரவில்லை என்பதில் இருந்து இப்படத்தின் வெற்றி எத்தகையது என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
விஜயசாந்திக்கு இப்போது வயது சுமார் 58. முகத்தில் லேசாக சுருக்கங்கள் தெரிகின்றன. இறுக்கமான முகத்தோடு சில காட்சிகளில் வசனம் பேசுவது செயற்கையாகத் தெரிகிறது.
ஆனால், சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ இல்லாமல் அவர் நடித்திருக்கிற விதம் ‘கலக்கல்’ ரகம். இன்றும் தானொரு ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்பதை அவர் இதில் நிரூபித்திருக்கிறார்.
அவரது ஆக்ஷன் அவதாரம் ஓரளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது என்றாலும், முழுதாக அதனை ரசிக்கிற அளவுக்குத் திரைக்கதை சுவைபட அமைக்கப்படவில்லை.
வில்லனாக வரும் சோஹைல் கானுக்கு நடிக்கப் பெரிதாக வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால், ‘பத்தான் யார் தெரியுமா’ என்று அவரைச் சுற்றியிருக்கும் பாத்திரங்கள் தரும் பில்டப்புக்கு குறைச்சல் இல்லை.
நாயகியாக இதில் சாயி மஞ்ச்ரேகர் வந்து போயிருக்கிறார். அவர் அழகாக இருக்கிறார் என்பதைத் தவிர, அவரைப் பற்றிக் குறிப்பிட வேறு எந்த விஷயமும் இதில் இல்லை.
இது போக ஸ்ரீகாந்த், ’கேஜிஎஃப்’ அவினாஷ் உட்படச் சில கலைஞர்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் இரு பாடல்கள் சட்டென்று நம்மை ஈர்க்கின்றன.
அதேநேரத்தில், அவர் அமைத்திருக்கும் பின்னணி இசை முன்பாதி பரபரவென்று நகர்வது போன்ற மாயையை உருவாக்கியிருக்கிறது. பின்பாதியில் உண்மையாகவே அதனை நிகழ்த்த முயன்றிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத், கலை இயக்குனர் பிரம்ம கதலி, படத்தொகுப்பாளர் தம்மிராஜு, ஸ்டண்ட் இயக்குனர்கள் பீட்டர் ஹெய்ன், ரவிவர்மா, ராமகிருஷ்ணா மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தில் உள்ளது.
ஆனாலும், அவற்றால் ‘ஒரு பழைய படம் பார்க்கிற’ உணர்வை மாற்ற முடியவில்லை.
ஸ்ரீகாந்த் விசா என்பவர் இயக்குநர் பிரதீப் சிலுகுரி உடன் இணைந்து திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார்.
விஜயசாந்தி, கல்யாண்ராம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வசனங்கள் உரக்க ஒலிக்கும் வகையில் இருக்கின்றன.
ஆனாலும், படத்தில் நிறைந்திருக்கும் சத்தமும் சண்டையும் ‘ப்ரெஷ்’ஷான உணர்வைப் பெறவிடாமல் தடுக்கின்றன.
’சிங்கம் மாதிரி என் மகன் வருவான் பாரேன்’ என்கிற ரேஞ்சில் இதில் விஜயசாந்தி பேசுகிற வசனம் கிளைமேக்ஸில் வருகிறது.
’க்ளிஷே’ என்றாலும், அது போன்ற இடங்கள் ரசிகர்களை உணர்வெழுச்சிக்கு ஆளாக்க வேண்டும்.
அதற்கு, முந்தைய காட்சிகள் அழகியல் நிறைந்ததாக, இதர பல உணர்வுகளைத் தூண்டுவதாக, மகிழ்ச்சியூட்டுகிற உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, ‘அடிச்சான்.. அடிச்சான்.. யார் வந்தாலும் அடிச்சுகிட்டே இருந்தான்..’ என்று வீடியோகேம் பாணியில் அமைந்த நாயக பாத்திரத்தின் வார்ப்பும், பலவீனமான திரைக்கதையும் ‘தாய் – மகன்’ சென்டிமெண்ட் காட்சியைக் கூடச் சிலாகிக்க விடாமல் நம்மை துரத்தியடிக்கின்றன.
தியேட்டரை விட்டு வெளியேறுகையில், ‘ஒரு தெலுங்கு படத்தைப் பார்க்க எதுக்கு வர்றாங்கன்னு ரசிகர்கள் பல்ஸ் தெரியாம இப்படி எடுத்து வச்சிருக்காங்களே’ என்று நொந்துகொள்வதைத் தவிர வேறேதும் மனதில் தோன்றுவதில்லை.
‘போதும்பா உங்க புராணம்.. ஓடிடியில டப் வெர்சன் வர்றப்போ படத்தை முழுசா பார்த்துட்டு நாங்க முடிவு பண்ணிக்கறோம்’ என்கிறீர்களா? அவ்வாறு நினைப்பவர்கள், அப்போது இந்த விமர்சனத்தைப் படித்து, பார்த்து, உங்கள் எண்ணத்தோடு பொருந்துகிற விஷயங்களை ‘டிக்’ செய்துகொள்ளலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்