பல ஆண்டுகளுக்கு முன்பு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய சங்கர்.
பாப்புலர் நடிகரான ஜெய்சங்கரின் மகனான இவரை திரை உலகம் நடிக்க அழைத்தபோதும், சில முக்கியமான இயக்குநர்களிடமிருந்து அழைப்பு வந்தபோதும் அந்த வாய்ப்புகளை மறுத்து தன்னுடைய தொழிலை மட்டும் நேசித்து செய்கிறவராகவே இருந்திருக்கிறார் விஜய சங்கர்.
பல்லாயிரக்கணக்கான கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை அளித்துவருகிற விஜயசங்கர், சோ அவர்களைப் பார்க்க வரும்போது, வெகு கேஷுவலாக சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருப்பார் சோ.
அந்தப் பேச்சில், ஒருவித நெருக்கம் இருக்கும். இதமான அன்பும் இருக்கும். விஜய சங்கர் விடைபெற்றுச் செல்லும்போது, சோவின் கைகளைப் பிடித்து, அவரது விரல்களில் மென்மையான முத்தத்தைக் கொடுத்துவிட்டுப் போவார்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் முகத்தில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு படுக்கையில் இருந்த சோ அவர்களை பார்த்தபோது, பேச முடியாத நிலையில் இருந்த அவர், பக்கத்தில் சிலேட் மாதிரி இருந்த ஒரு வெள்ளைப் பேடில் மார்க்கர் பேனாவில் அவர் பார்க்க விரும்பிய நபர்களில் முதலாவது பேராக எழுதிக் காட்டியது விஜய சங்கரின் பேரைத்தான்.
சோ, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோதும், அவரது கையில் விஜயசங்கர் முத்தமிட்டு போனபோது, அருகிலிருந்த என்னிடம் புன்னகையோடு சோ சொன்னார், “விஜய் எனக்குப் பிறக்காத பிள்ளை”.

சோவின் இறுதி நாட்களில் அவரைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி அவருடைய வீட்டிற்கு வந்தபோது, சோ விரும்பி அழைத்ததும் விஜய சங்கரைத்தான்.
சினிமா மற்றும் அரசியல் என்று பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு கண் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிற விஜய சங்கர், சென்னையில் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம், எழும்பூர், நுங்கம்பாக்கம் என்று மூன்று இடங்களில் கண் மருத்துவமனைகளை வைத்துப் பராமரிக்கிறார்.
நீண்ட நாட்கள் பழக்கமான அவரிடம் காட்ராக்ட் சிகிச்சையை நான் செய்திருப்பது ஒருவிதத்தில் நெகிழ்வாகவும், நேசமிக்கதாகவும் அமைந்திருக்கிறது.
நட்புக்குரியவர்களே நமக்கான மருத்துவர்களாகவும் அமைவது ஒருவிதத்தில் மனதுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
****
சோவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ததும் இவர்தான். அந்த சிகிச்சை முடிந்ததும், சோ டாக்டர் விஜய சங்கரைப் பற்றி பகிர்ந்துகொண்ட அன்பான அனுபவப் பகிர்வின் காணொளிக் காட்சி கீழே முதல் கமெண்டில்…