மாநில உரிமைகளை மீட்டெடுக்கக் குழு!

பேரறிஞர் அண்ணாவின் நெஞ்சுறுதி

“என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” – தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1968-ம் ஆண்டு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றி, இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய முதலமைச்சர் அண்ணா, அதன்பின் சென்னையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் துணிச்சலோடு முழங்கினார்.

ஏறத்தாழ 57 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை மாறவில்லை.

1969-ல் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து மைய-மாநில உறவுகள் குறித்து அறிக்கையைப் பெற்ற முதலமைச்சர் கலைஞர், அதனை பிரதமர் இந்திரா காந்திக்கும் அனுப்பி வைத்ததுடன், 1974-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அந்தத் தீர்மானத்தை பிற மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்து, மாநில உரிமைகளின் பாதுகாவலராகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் தேசிய கீதம்போல தமிழ்நாட்டுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்களிடமிருந்த தேசியக் கொடி ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்குப் பெற்றுத் தந்தது,

பொது நுழைவுத் தேர்வு ரத்து, தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி.சிங் அமைத்த இன்டர்-ஸ்டேட் கவுன்சில், ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தி.மு.க முன்னெடுத்த த.மா.கா, தெலுங்குதேசம், அசாம் கண பரிஷத் கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி (Federal front), வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியில் மதவாதக் கொள்கைகளுக்கு கடிவாளம் போட்டு –

மாநில நலன்களை முன்னிலைப்படுத்திய குறைந்தபட்ச பொது செயல்திட்டம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு இவை எல்லாமும் கலைஞரின் மாநில சுயாட்சிக் கொள்கையின் படிப்படியான விளைவுகளே.

ஆளுநர் பதவி என்பது பெயரளவிலான அதிகாரம்தான் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முடிவுகளே வலிமையானவை -இறுதியானவை என்பதையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவையின் அடிப்படையில் அதற்கானத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்து,

ஒன்றிய – மாநில உறவுகள் மற்றும் மாநில உரிமைகள் மீட்டெடுப்பு தொடர்பாக ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வரதன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பில், “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” என்ற பேரறிஞர் அண்ணாவின் நெஞ்சுறுதி வெளிப்பட்டுள்ளது.

– பத்திரிகையாளர் கோவி லெனின் முகநூல் பதிவு

You might also like