சமீபத்தில் அவினாசியில் ஒரு தனியார் பள்ளியில் ஐ.நாவின் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் ஜெனிவாவில் இயங்கும் ஐ.நாவில் மனித உரிமைக்காகச் செயல்படும் பேராசிரியர் மிலோன் கோத்தாரியும் ஐ.நா.வில் பணிபுரிந்து விட்டு உலக அமைதிக்காக தன்னார்வர்கள் குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் கனடா நாட்டுப் பெண்மணி ஜில் கேரிசும், இந்தியாவில் ஆதிவாசிகளுக்காக போராடி வரும் காந்தியப் போராளி பி.வி.ராஜகோபாலும் பங்கேற்றுப் பேசினர்.
நிகழ்வுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தமிழமெங்கும் தன்னார்வலர்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும் பெரும் தொழிலதிபர்களும், தன்னார்வலர்களும், காந்திகிராமப் பல்கலைக்கழக அமைதியல்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பாரதி சங்கர் தலைமை தாங்கி நடத்தினார். இதில் பங்கேற்ற 250 பேருமே முன்பதிவு செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், உரையாற்றிய ஜில் கேரிஸ், உலகம் – காலம் காலமாக ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடர் முயற்சியில் மக்கள் போராடி வருவதை வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு பதிவு செய்து கொடுத்து வருகின்றனர்.
மன்னராட்சியிலிருந்து விடுபட மனித சமூகம் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்து பல நூறு ஆண்டுகள் போராடி வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து காலணியாதிக்கத்திலிருந்து விடுபட சமூகம் போராடி விடுதலை பெற்றிருக்கிறது.
அதேபோல் மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் ஆதிக்கம் செலுத்தும்போது அதை எதிர்த்து மக்கள் போராடி தங்களை பாதுகாத்துக்கொண்டு வருகின்றனர்.
மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுதலை பெற போராடி வருகின்றனர்.
சாதிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற ஒடுக்கப்பட்டவர்கள் போராடி விடுதலையடைந்து வருகின்றனர்.
இன்று உலகம் சந்தையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறது. சந்தை அரசாங்கத்தையும் மக்களையும் கட்டுப்படுத்தும் நிலைக்கு சக்தி பெற்றதாக உருவெடுத்துவிட்டது. இதிலிருந்து விடுபட இன்று மக்கள் தயாராக வேண்டும்.
பன்னாட்டு அமைப்புக்கள் உயரிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தாலும் அவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒரு சில நாடுகளில் கைகளில் இருப்பதால் அந்த நாடுகளின் அரசு பொருளாதார பலத்தால் ஐ.நாவைக் கட்டுப்படுத்த முடிகிறது.
இந்த சூழ்நிலை மாற வேண்டும் என்றால் மக்கள் அமைப்புக்களும், நிறுவனங்களும், பொதுக் கருத்தாளர்களும் தொடர்ந்து புரிதலுடன் மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
ஐ.நா என்ற அமைப்பு மக்களுக்கானது நாடுகளுக்கானது அல்ல. அதில் மக்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த செயல்பாடுகளின் நாம் அனைவருமே பங்கு கொண்டு செயல்பட முடியும். அந்தப் புரிதல் நமக்கு வேண்டும் என்று தன் உரையை நிறைவு செய்தார்.
அடுத்து உரையாற்றிய பி.வி.ராஜகோபால், ஐ.நா என்ற நிறுவனம் ஆகாயத்தில் நடைபெறும் ஓர் அமைப்பு அல்ல. அதுவும் உலக சமூகத்தில் இயங்கும் அமைப்புதான்.
பொதுவாக சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை அமைப்புக்களும் நிறுவனங்களும் ஒரு சிறிய கிராமத்தில் இயங்கும் பஞ்சாயத்தில் துவங்கி ஐ.நா வரை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பாட்டில் இருந்தால் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய முடியும் உலகத்தில்.
பஞ்சாயத்து அளவில், தலைமைத்துவத்தை உருவாக்கி வளர்க்க பேரா.பழனித்துரை செயல்படுவதுபோல், பேரா.மிலோன் கோத்தாரி உலக நாடுகளின் தலைவர்களின் சிந்தனையில் மனித உரிமைகள் மற்றும் மனிதர்களின் மாண்பைக் காப்பதற்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்ற சிந்தனை உருவாக்குவதற்கு செயல்படுகிறார்.
ஐ.நா வடிவமைக்கும் திட்டங்களை உறுப்பு நாடுகளில் செயல்படுத்துவது அரசாங்கம் மட்டுமல்ல, மக்கள் அமைப்புக்களும்தான் என்பதை விளக்கினார்.
எனவே களச் செயல்பாடு என்பதுதான் முக்கியம். அந்தச் செயல்பாடுகளை ஐ.நாவுடன் இணைத்துக் கொள்வதில்தான் விளைவு அடங்கி இருக்கிறது என்று கூறி நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பேரா.மிலோன் கோத்தாரி தன் முக்கிய உரையில், ஐ.நா எப்படி உருவானது என்பதை விளக்கினார்.
ஐ.நா என்ற அமைப்பு உருவாக்க முனைந்தபோது, அதன் ஒட்டுமொத்த கருத்தாக்கத்திலும் காந்தியின் கருத்துகள் பதிந்திருப்பதை எடுத்துக் காட்டினார். அதற்கு காந்தியின் பங்களிப்பு என்ன என்பதையும் விளக்கினார்.
அது மட்டுமல்ல, காந்திபோல் பகவான் அரவிந்தரும் தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டி விளக்கியது அனைவரையும் வியக்க வைத்தது.
அடுத்து ஐ.நாவின் பங்களிப்பு என்பது உலகத்தில் சமாதானம் அமைதிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பணி செய்து வருகிறது என்பதை ஒவ்வொன்றாக பட்டியலிட்டார்.
உலகத்தில் மனித குலம் மேம்பட, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பல்வேறு பணிகளை பல்வேறு துணை இணை அமைப்புக்களை உருவாக்கிச் செய்து வருகிறது ஐ.நா என்று விளக்கினார்.
இந்திய அரசமைப்புச் சாசனம் எப்படி இந்தியர்களாகிய நாம் என்று ஆரம்பிக்கின்றதோ அதேபோல்தான் நாடுகளின் தொகுப்பாகிய ஐ.நா என்று ஆரம்பிக்காமல் உலக மக்களாகிய நாம் ஐ.நாவில் என்றுதான் மக்களை மையப்படுத்தி ஆரம்பிக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
பலர் ஐ.நாவை செயல்பட வைக்க நாடுகளும், நாட்டின் தலைவர்களால் மட்டுமே முடியும் என்று நினைக்கின்றனர். அது ஒரு அறியாமை, மக்கள் சமூகமாக எந்த வடிவத்தில் இயங்கினாலும், அவர்கள் ஐ.நாவை இயங்க வைக்க முடியும்.
அதற்கான பல்வேறு வழிமுறைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார். ஏன் கல்லூரியில் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை ஐ.நாவில் செலுத்தலாம் என்பதை அங்கு பங்குபெற்ற மாணவர்களுக்கு விளக்கினார்.
இன்று பக்கத்தில் நாடுகளுக்கிடையில் நடக்கும் போர், அடுத்து காலநிலை மாற்றத்தால் உருவாகும் தாக்கங்களை சமாளிக்க ஐ.நா பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து வருகின்றன.
இந்தியாவின் பங்களிப்பு என்றும் சிறப்பானதாகவே இருந்து வந்துள்ளதை இன்றுவரை எடுத்துக்காட்டினார்.
ஐ.நாவின் சாசனத்தை மிகக் கூர்ந்து கவனித்தால் காந்தியின் அகிம்சை, நம்பிக்கை, சர்வோதயம், தர்மகர்த்தா முறை, பல அடுக்குமுறைச் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கூறுகள் அனைத்தையும் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
1945 ஐ.நா உருவான காலத்தில் நாடுகளின் கூட்டாட்சியாக ஐ.நா அமைய வேண்டும் என்பதைத்தான் தன் கடிதத்தின் மூலம் காந்தி வலியுறுத்தினார் என்பதை விளக்கமாகப் பதிவு செய்தார்.
அடுத்து ஐ.நாவின் மன்றங்களை தற்காலத்திற்கேற்ப சீர்திருத்த வேண்டி பல்வேறு முன்னெடுப்புக்கள் நடந்து வருவதையும் எடுத்துக் காட்டினர்.
பாதுகாப்பு சபையில் ஐந்து நாடுகளுடன் இன்னும் பல நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வருவதையும், அதே நேரத்தில் அதைவிட ஐ.நாவின் பொதுச்சபையில் எல்லா உறுப்பு நாடுகளும் இருப்பதால், அதற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதை எடுத்துக் காட்டினார்.
இந்தியாவும் ஐ.நா சீர்திருத்தப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதை எடுத்துக் காட்டினார்.
இன்று உலகில் இளைஞர்கள் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து பல்வேறு நாடுகளில் செயல்படுவதையும், உலகத்தில் அமைதி நிலவிட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
ஐ.நா மட்டுமல்ல மக்கள் அமைப்புக்கள் சமூகத்தில் நம்பிக்கையுடன் மக்கள் மத்தியில் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபட்டு செயல்படுவதின் மூலம் தான் நாம் ஒரு அமைதியான சூழலை உருவாக்க முடியும் என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து தன் உரையை நிறைவு செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவினாசிலிங்கம் மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி ரவிசங்கர் உலக அமைதிக்கு உள்ளூர் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதையும், அதற்கு தனிமனித அளவில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை தன் தலைமை உரையில் விளக்கினார்.
நல்லோர் வட்டத்தின் சார்பாக பேசியபோது ஒரு சில கருத்துக்களை ஐ.நாவுக்கு, நம் வேளாண் விஞ்ஞானி தந்த அறிக்கையிலிருந்து ஒரு சில கருத்துக்களை எடுத்து வைத்தேன்.
உலக அமைதி என்பது 40% ஒட்டுமொத்த நாட்டு வருமானத்தில் இராணுவத்திற்குச் செலவிட்டு ராலணுவ பலத்தால் கூட்டுவதில் வருவதல்ல. மக்களின் பசியைப் போக்குவதில் இருக்கிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் இருக்கின்றது, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் இருக்கிறது.
அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் ஒரு உயிரோட்டமான தொடர்பு இருக்கிறது என்பதனை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த குடும்பம் கிராமம் அமைதியாக வாழும். அப்படித்தான் தனிமனித அமைதியிலிருந்து குடும்ப அமைதி, அடுத்து சமூக அமைதி, அடுத்து நாட்டின் அமைதி அடுத்து உலக அமைதியை ஏற்படுத்த முடியும்.
எனவே அமைதிக்கு ஐ.நா மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனும் பணியாற்ற வேண்டும். எனவே மக்களை அறிவார்ந்த மக்களாக உருவாக்கிச் செயல்பட வைப்பதன் மூலம் ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கி உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதைக் கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு.சந்திரன், திரு.வினாயகம், நல்லோர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், நவிலு சுப்ரமணியன் கலந்துகொண்டு வரவேற்புரை, பாராட்டுரை, அறிமுகவுரை, நன்றியுரையை நிகழ்த்தினர்.
பாரதிய வித்தியா பவன் தலைவர் காந்தியச் சிந்தனையாளர் வானவராயர் போன்ற பல ஆளுமைகள் கலந்து கொண்டது இந்த நிகழ்வுக்குப் பெருமை சேர்த்தது.
அதனைத் தொடர்ந்து காந்திகிராம பல்கலைக்கழக சாந்தி சேனை மாணவர்களிடம் பேரா.மிலோன் கோத்தாரியும், நாச்சம்மாள் பள்ளி மாணவர்களிடம் முனைவர் ஜில்ஹரிசும் உரையாடியது இந்த நிகழ்வுக்கு இன்னும் மெருகூட்டியது.
அந்த நிகழ்வு முடிந்து மதிய உணவுக்குப் பின் திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள உலக சமாதான நிறுவனத்தின் நிறுவனர் குருமகான் அங்கு வந்து, அந்த விழாவுக்கு வந்திருந்த சிறப்புப் பேச்சாளர்கள், முக்கிய ஆளுமைகளுடன் உலக அமைதிக்கு உலக சமாதான நிறுவனம் செய்யும் பணிகள் பற்றி விவாதித்து.
மேலும் என்னென்ன புது நடவடிக்கைகள் எடுத்து ஓர் உலக கூட்டாட்சியை எப்படி ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஒரு உரையாடல் உலகில் உருவாக்கப்பட வேண்டும் என்பதை விளக்கினார்.
அங்கு வந்திருந்த ஆளுமைகள், ஐ.நாவிலிருந்து வந்திருந்த பேரா.மிலோன் கோத்தாரி இது தொடர்பான பல்வேறு கருத்துக்களை எடுத்து வைத்து விவாதித்தார்.
இந்தக் கருத்தை முன்னெடுக்க நம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொதுக்கருத்தாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு இந்தியா பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும் என்று மிலன் கோத்தாரி விளக்கினார்.
ஒட்டுமொத்தத்தில் ஐ.நா தன் செயல்பாட்டில் தோற்றுவிட்டது என்ற பார்வை கொண்டவர்களுக்கு ஐ.நா வேறு ஒரு மேம்பாட்டுத் தளத்தில் எவ்வளவு மாபெரும் பணிகளைச் செய்து வருகிறது என்பதையும், அதில் ஒரு நாட்டின் குடிமக்களாகிய நமக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வை நல்லோர் வட்டமும், சென்னை சில்க்ஸ் நிறுவனமும் இணைந்து வடிவமைத்து செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.