ஒரு பஸ் டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடுகிற அளவுக்கு ஒரு கதையைக் கொண்டது கடந்த ஆண்டு வெளியான ‘ஆவேஷம்’ மலையாளத் திரைப்படம். அப்படத்தைத் தனது நடிப்பினால் தாங்கி நின்றார் பகத் பாசில்.
அதற்கேற்றாற் போல இதர பாத்திரங்களையும் காட்சிகளையும் புதிதாகத் தெரியும் வகையில் படைத்திருந்தார் இயக்குநர் ஜித்து மாதவன்.
இவர்கள் இருவரது உழைப்பையும் தாண்டி, அம்பான் எனும் பாத்திரத்தில் நடித்த சஜின் கோபுவின் பங்களிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அந்த சஜின் கோபுவை நாயகனாகக் கொண்டு பகத் பாசிலும் ஜித்து மாதவனும் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பைங்கிளி’.
காதலர் தின வெளியீடாக வந்திருக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் பாபு இயக்கியிருக்கிறார். ஜித்து மாதவன் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை அமைத்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜஸ்டின் வர்கீஸ்.
இதில் அனஸ்வரா ராஜன், ரோஷன் ஷாநவாஸ், சந்து சலீம்குமார், ரியாஸ் கான், அபு சலீம், ஜிஸ்மா விமல், அஸ்வதி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
‘பைங்கிளி’ காதலர் தினத்திற்கு ஏற்ற காதல் படைப்பாக இருக்கிறதா?
‘பைங்கிளி’ கதை!
ஊரார் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து தன் இயல்பைத் தொலைத்து நிற்பவர் சுகு (சஜின் கோபு). பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் சுமா (ஜிஸ்மா விமல்) இவரை விரும்புகிறார்.
அது தெரிந்தும், அப்பெண்ணின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருக்கிறார் சுகு. காரணம், அவரது வீட்டார் தனக்கு நன்கு அறிமுகமானவர்களே என்பதே. நண்பர்கள் அது பற்றிக் கேட்டால், ‘சுதாகரன் பெண் எனக்கு தங்கைதானே’ என்பதே அவரது பதிலாக இருக்கிறது.
அதே வட்டாரத்தில் வாழ்ந்து வருகிறார் இளம்பெண் ஷீபா (அனஸ்வரா ராஜன்).
தன்னை யாருமே புரிந்துகொள்ளவில்லை என்பதே அவரது வருத்தம்.
உயர் கல்வி கற்க வேண்டும் என்பது அவரது ஆசை.
ஆனால், வீட்டில் இருக்கும் தாய் தந்தையோ அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர்.
அதில் இருந்து தப்பிக்க, என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் ஷீபா.
அப்போது, யாராவது ஒரு ஆணைக் காதலித்து, அவருடன் ஊரை விட்டுப் போய்விடு என்று சொல்கிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி.
அதனை சீரியசாக எடுத்துக்கொண்டு, சில நபர்கள் மீது காதல் வலை வீசுகிறார் ஷீபா. யாரும் அதில் சிக்குவதாக இல்லை.
ரவுடி, காமப்பித்தன் என்று எந்த வேறுபாட்டையும் பற்றிச் சிந்திக்காமல் ஏதாவது ஒரு ஆணைப் பிடித்தால் போதும் என்றிருக்கிறார்.
இந்த நிலையில், அவரது திருமணத் தேதி நெருங்குகிறது.
எந்நேரமும் பிறர் என்ன நினைப்பார்களோ என்று பயந்து ஒடுங்குகிற ஒரு ஆண். எவரைப் பற்றியும் துளி கூடக் கவலைப்பட விரும்பாத ஒரு பெண்.
இவ்விருவருக்கும் இடையே காதல் மலருமா? குறைந்தபட்சமாக, யாரேனும் ஒருவரைக் காதல் தொற்றுமா?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்விதமான சூழல் திடீரென்று உருவாகிறது.
ஒரு கொலை வழக்கில் இருந்து தப்பிக்க, பைத்தியம் போல நடித்து சான்றிதழ் பெற முயல்கிறார் சுகு. அந்த விஷயம் ஊராருக்குத் தெரிய வர, அவரைப் பைத்தியம் என்று நினைக்கத் தொடங்குகின்றனர்.
அதையடுத்து ஊர் மக்களின் பரிதாபத்தையும் இரக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார் சுகு. அந்த நேரத்தில், நண்பன் செய்த ஒரு செயலால் ஷீபாவைத் தன் வீட்டுக்கு அவர் அழைத்து வர வேண்டியதாகிறது.
வந்த இடத்தில், சுகுவைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தப் போவதாகச் சொல்கிறார் ஷீபா.
ஷீபாவின் பேச்சு சுகுவிடத்திலோ, அவரைச் சார்ந்தவர்களிடத்திலோ ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியதா? ஷீபா ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறார்? அதன்பிறகு என்னவானது? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறைவடைகிறது ‘பைங்கிளி’.
‘ஒரு கமர்ஷியல் படத்தில் முதல் திருப்பம் இந்த இடத்தில் வர வேண்டும். இடைவேளை இங்கு இருக்க வேண்டும். கதையில் வரும் பிரச்சனைக்கான தீர்வு,
இந்தக் கட்டத்தில் நிகழ்வதாகத் திரைக்கதை அமைக்க வேண்டும்’ என்ற வரையறைகளை உடைத்து, தன் மனதில் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்தாக்கம் செய்திருக்கிறார் ஜித்து மாதவன். அதனால், இப்படம் தரும் திரையனுபவம் வேறுபட்டதாக உள்ளது.
அதுவே இதன் பலமும் பலவீனமுமாக இருக்கிறது.
கலக்கும் சஜின் கோபு!
‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்லக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தினாலும், வழக்கத்திற்கு மாறான பாத்திரப் படைப்புக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் சஜின் கோபு.
இரவில் உணவு கொண்டு வரும் ஜிஸ்மா விமலைப் பார்த்து பயந்தவாறே, வீட்டினுள் அனஸ்வரா இருப்பதை மறைப்பதற்காக ‘மோனோ ஆக்டிங்’ என்ற பெயரில் அவர் செய்யும் சில விஷயங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
முதல் பாதியில் பைத்தியம் போல நடித்து நம்மைச் சிரிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் நிஜமாகவே அவ்வாறு ஆகிவிடுவாரோ என்று பதைபதைக்க வைக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ‘ஒன் மேன் ஷோ’ என்று சொல்லும்படியாகத் தோன்றியிருக்கிறார் சஜின் கோபு.
‘தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தில் இளமைத் ததும்பும் பதின்ம வயதுச் சிறுமியாகத் தோன்றிய அனஸ்வரா ராஜன், இதில் ‘கார்ட்டூன்’ பாத்திரங்கள் போன்று நடித்திருக்கிறார். ஆனாலும், ஷீபா எனும் பாத்திரத்தை ரசிக்குமாறு செய்திருக்கிறார்.
சஜின் நண்பர்களாக வரும் ரோஷன் ஷாநவாஸ், சந்து சலீம்குமார் இருவருமே இரு வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் வரும் காட்சிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
பக்கத்து வீட்டுப் பெண்ணாக வரும் ஜிஸ்மா விமல், இயல்பு வாழ்வில் எதிர்வருகிற பல சாதாரணப் பெண்களின் பிரதிநிதியாகத் தெரிகிறார். ‘ஹார்ட் அட்டாக்’ பாடலில் தான் ஏற்ற பாத்திரத்தின் மனப்பாங்கினை வெளிப்படுத்தும் வகையில் அவர் நடனமாடும் இடம் ‘ஆஹா’ ரகம்!
இவர்கள் தவிர்த்து லிஜோ ஜோஸ் பெலிசேரி, நாயகனின் தந்தையாக வரும் அபு சலீம், தாயாக வருபவர், பாட்டியாக நடித்தவர், மனநல மருத்துவராக வருபவர் என்று சுமார் ஒன்றரை டஜன் பேர் இதில் வந்து போயிருக்கின்றனர். அனைவரது பாத்திரப் படைப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன.
சிலருக்கு இப்படத்தில் வரும் பாத்திர வார்ப்புகள் செயற்கையாக, யதார்த்தம் அற்றதாகத் தென்படலாம்.
போலவே, இரண்டாம் பாதியில் நாயகனுக்குத் திடீரென்று நாயகி மீது காதல் வருவதற்கான கால இடைவெளி மிகவும் குறுகியதாகத் திரைக்கதையில் உள்ளது.
ஒருவேளை ஜித்து மாதவனே இப்படத்தை இயக்கியிருந்தால், அந்த குறைகளைச் சரி செய்திருக்கக் கூடும். ‘ஆவேஷம்’, ‘ரோமாஞ்சம்’ படங்களிலும் கூட இது போன்ற குறைகளை நாம் கண்டிட முடியும்.
அப்படங்களின் பிரதான பாத்திரங்கள் சிறிதும் யதார்த்தம் அற்று ‘கார்ட்டூன்’ நாயகர்களாகவே காட்டப்பட்டிருக்கும்.
‘பைங்கிளி’ படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு அபாரமானதாக உள்ளது. அதில் முதலிடம் வகிப்பவர் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் சேது.
சாதாரண மனிதர்கள் கண்களால் பார்க்கிறவற்றைத் திரையில் அழகாகக் காட்டுவது போன்ற ஆக்கத்தை இதில் அவர் கையாண்டிருக்கிறார். அதனால், பெரும்பாலான பிரேம்கள் புகைப்படச் சட்டகங்கள் போலத் தோற்றம் தருகின்றன.
ரொம்பவே சாதாரணமான கிராமப்புற வீடுகளையும் அங்குள்ள வெளிகளையும் காட்டும்விதமான காட்சிகளுக்குத் தகுந்தவாறு கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் க்ரிபேஷ் ஐயப்பன்குட்டி.
அடுத்தடுத்த காட்சிகளுக்கு இடையே ‘துண்டு’ விழுந்து விடாமல் கவனமாகக் கோர்த்திருக்கிறது கிரண் தாஸின் படத்தொகுப்பு.
இந்தப் படத்தில் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உட்படப் பல நுட்பங்கள் கதை நிகழும் களத்திற்குப் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கின்றன.
அனைத்துக்கும் மேலே இப்படத்திற்காக ஜஸ்டின் வர்கீஸ் தந்திருக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கொண்டாடத்தை விதைக்கவல்லது.
முக்கியமாக, அவர் தந்த ‘ஹார்ட் அட்டாக்’ பாடலுக்கு கொரியோகிராஃபர் வேதா அமைத்திருக்கும் நடனம் ‘ஆவ்சம்’ ரகம்.
‘வாழ்க்கை என்பதே அன்பினில்’ பாடல் முழுக்கத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. ஐம்பதுகளில் வந்த பாடலைக் கேட்ட அனுபவத்தைத் தரும் இப்பாடல், திரைக்கதையில் வரும் முக்கியத் திருப்பத்தை நமக்கு முன்னுணர்த்துவதாக உள்ளது.
கிராமத்துக் கதை என்றபோதும், ஜஸ்டின் இதில் அமைத்திருக்கும் பின்னணி இசை மிக வித்தியாசமானதாக உள்ளது; ‘நகர்ப்புறம் சார்ந்த திரைக்கதைகளுக்கே அது பொருத்தமாக இருக்கும்’ என்ற வாதத்தைப் பின்னுக்குத் தள்ளும்விதமான அனுபவத்தைத் தருகிறது.
அனஸ்வராவை விரட்டுவதற்கான ஐடியாவை கண்டறிந்ததும் உற்சாகத்தோடு சஜின் கோபு வீட்டுக்கு வரும் ஷாட்டில் நண்பர்களும் அவர் பின்னே வருவார்கள். அந்த ஷாட்டின் பின்னணியில் ஒலிக்கும் இசை இருக்கையில் சரிந்திருந்த நம்மை எழுந்து அமர வைக்கும் தன்மை கொண்டது.
சிலர் இதனை ‘முரண்’ ஆக உணரக்கூடும். ‘வாழ்க்கை’ பாடலும் கூட அந்த ரகம் தான். ஆனால், அப்படிப்பட்ட அம்சங்களே ‘பைங்கிளி’யை இருண்மை நகைச்சுவை கொண்டதாக ஆக்குகிறது.
போதைப்பொருட்களை மூட்டை மூட்டையாகத் தூக்கிக் கொண்டு திரியும் ‘கேங்ஸ்டர்’ கதைகளில்தான் ‘பிளாக் ஹ்யூமர்’ காண முடியும் என்று நம்புபவர்களுக்கு இந்த சித்தரிப்பு எரிச்சலைத் தருவதில் ஆச்சர்யமில்லை.
‘பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.
அந்தக் குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், சாதாரண மனிதர்களின் வாழ்வில் காதலுக்குத் தரப்படும் இடம் எத்தகையது என்று சொன்ன வகையில் தனித்துவம் பெறுகிறது ‘பைங்கிளி’.
அதற்கேற்றவாறு காட்சிச்சூழல்களை, கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் நடிப்பைத் திரையில் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீஜித் பாபு.
அது மட்டுமல்லாமல், ஒருதலையாகக் காதலிக்கிற ஆண்கள், அவர்களை எதிர்கொள்கிற பெண்களின் மனோபாவத்தை இத்திரைப்படம் அழகாகச் சித்தரித்திருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, ‘ஆவேஷம்’ படத்தில் அம்பான் ஆக வந்த சஜின் கோபுவின் நடிப்புத்திறமையைக் காட்டும் வகையில் அவரை ‘பைங்கிளி’யில் நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறது பகத் பாசில் – ஜித்து மாதவன் கூட்டணி. அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை சரியே என்பதை உணர்த்துகிறது ‘பைங்கிளி’.
ஓடிடி தளத்தில் வெளியாகும் தருணத்தில், மேற்சொன்னது சரியா இல்லையா என்பது நிச்சயம் தெரியவரும்.
-உதயசங்கரன் பாடகலிங்கம்