2கே லவ் ஸ்டோரி – நட்பா, காதலா எனும் ஊசலாட்டம்!

‘திரைப்படங்களில் காதல்’ என்பது ஆய்வுக்குரிய விஷயங்களில் ஒன்று. அது பற்றிப் பல மணி நேரம் விவாதிக்க முடியும், பல நூல்கள் எழுத முடியும்.

சில சமயங்களில் காதல் திரைப்படங்கள் அப்போதிருந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன. சில திரைப்படங்கள் அச்சமூகம் செல்கின்ற திசையில் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்திருக்கின்றன.

அதனாலேயே, காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் திரைப்படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு படரும். அதற்கேற்றவாறு சில படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன.

’அந்த வரிசையில் இடம்பெறுமா’ என்ற எண்ணத்தை உண்டாக்கியது சுசீந்திரன் இயக்கிய ‘2கே லவ் ஸ்டோரி’ பட ட்ரெய்லர். தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

புதுமுகம் ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், துஷ்யந்த் உட்படப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை தருகிறது இப்படம்?

இதுவும் ‘காதல்’ கதையே!

‘2கே லவ் ஸ்டோரி’யின் கதை கோவை வட்டாரத்தில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கார்த்திக்கும் (ஜகவீர்) மோனிகாவும் (மீனாட்சி கோவிந்தராஜன்) சிறு வயது முதலே நட்பாகப் பழகி வருகின்றனர். பருவ வயது வந்தபோதும், அதனைக் கடக்கும்போதும் கூட, அவர்களிடத்தில் சிறு மாற்றம் கூட நிகழவில்லை.

ஆனால், அவர்களது பெற்றோர் முதல் நண்பர்கள், சுற்றத்தினர் என்று அனைவருமே ‘அவர்களது நட்பு காதலில் முடியுமோ’ என்று நினைக்கின்றனர்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், உடனிருக்கும் நண்பர்களுடன் இணைந்து கார்த்திக்கும் மோனிகாவும் ஒரு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர்.

திருமண விழாவில் புகைப்படங்கள், வீடியோ எடுப்பது என்றிருக்கும் அந்நிறுவனத்தில் தொடர்ந்தாற்போல ‘ஆர்டர்கள்’ குவிகின்றன.

இந்த நிலையில், கல்லூரியில் படித்துவரும் ஜூனியர் பவித்ரா (லத்திகா பாலமுருகன்) கார்த்திக்கைத் தேடி வருகிறார். அவரைக் காதலிப்பதாகக் கூறுகிறார்.

‘எதுவானாலும் மோனி தான் முடிவெடுப்பா’ என்று பவித்ராவின் பக்கம் பந்தைத் திருப்பியனுப்புகிறார் கார்த்திக்.

கூடவே, ‘இப்படிச் சொன்னா, அவ இப்படிப் பதில் சொல்லுவா’ என்று சொல்லி அனுப்புகிறார். அவரும் அவ்வாறே சொல்கிறார். அப்போது, கார்த்திக் சொன்னதை அச்சுப்பிசகாமல் திரும்பச் சொல்கிறார் மோனிகா.

அப்போது, அதனைக் கண்டு பவித்ரா மகிழ்ச்சியடைகிறார். ஆனால், நாளாக ஆக அந்த மகிழ்ச்சி சோகமாக மாறுகிறது.

தங்களது காதலில் மோனிகா எல்லை மீறித் தலைநீட்டுவதாக நினைக்கிறார். கார்த்திக்கிடம் அதனைச் சொல்கிறார். கேட்டவுடனேயே, பவித்ரா மீது அவர் ஆத்திரப்படுகிறார்.

அப்போதும் மோனிகா தான் இருவரையும் அழைத்துச் சமாதானம் பேசுகிறார். மீண்டும் மகிழ்ச்சி பிறக்கிறது.

அதனைத் தொடர்ந்து, காதல் ஜோடி தனியாகக் கோயம்புத்தூரில் இருந்து குன்னூருக்கு பைக்கில் பயணிக்கிறது. செல்லும் வழியில் விபத்து நிகழ, பவித்ரா மரணமடைகிறார்.

காயமடைந்த நிலையில் மீட்கப்படும் கார்த்திக், மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைக்கிறார்.

அதன்பிறகு, கார்த்திக்கின் வாழ்க்கை வெறுமையோடு கழிகிறது. அதிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்குகிறார் மோனிகா. அது ஓரளவுக்குப் பலனளிக்கிறது. மெல்ல இயல்புக்குத் திரும்புகிறார் கார்த்திக்.

இந்த நிலையில், மோனிகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்குகிறது. அப்படி வரும் ஒரு வரனை கார்த்திக் நிராகரிக்கிறார். அது மோனிகாவின் பெற்றோரைக் கோபப்படுத்துகிறது. ‘நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறீங்களா’ என்கின்றனர். அவர்களது கோபம் தணியச் சில நாட்கள் ஆகின்றன.

அப்போது, ‘நீ கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று அவர்கள் மோனிகாவிடம் கேட்கின்றனர்.

அதன்பிறகு என்னவானது? கார்த்திக், மோனிகா இடையே இருப்பது நட்பா, காதலா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘2கே லவ் ஸ்டோரி’யின் மீதிப்பாதி.

உண்மையைச் சொன்னால், இப்படத்தில் காதலுக்கு நிறையவே இடமிருக்கிறது. ஆனால், அதற்குத் தரப்பட்ட முக்கியத்துவம் நட்பைச் சொல்வதில் பெரிதாக இல்லை.

’அதனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ’ என்று யோசிக்கிற வகையில் சில காட்சிகளும் சில பாத்திரங்களின் வார்ப்பும் மேலோட்டமாக அமைந்திருக்கின்றன.

முக்கியமாக, மையப் பாத்திரங்கள் இடையே இருப்பது நட்பா, காதலா என்ற ஊசலாட்டத்தை நம்மில் விதைக்கப் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. அதுவே இப்படத்தின் பலவீனம்.

ரசிக்கத்தக்க அம்சங்கள்!

புதுமுகம் ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் இருவரும் ‘ஓகே’ எனும்படியான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

இன்னொரு புதுமுகமான லத்திகா இருவரையும் ’அலேக்’காக தாண்டி நிற்கிறார். அவர் வரும் காட்சிகள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன.

’வாங்க 90’ஸ் கிட்ஸ்’ என்று ஆண்டனி பாக்யராஜை ‘கலாய்க்கும்’ இடங்களில் சிரிக்க வைக்கிறார் பாலசரவணன்.

ஒருவரோடு ஒருவர் பேசும்போது, திரைக்கதையில் திருப்பம் வருவதாகக் காட்டியிருக்கும் உத்தி அருமை. ஒருகட்டத்தில் அது நின்றுவிடுகிறது. அதனை இரண்டாம் பாதியிலும் பயன்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இரண்டாம் பாதியில் சிங்கம்புலி, முருகானந்தம், கவின் ஆகியோரின் இருப்பு கிச்சுகிச்சு மூட்டுகிறது.

வினோதினி வைத்தியநாதன், அவரது கணவராக நடித்தவர், நக்கலைட்ஸ் சாவித்திரி, ஜெயபிரகாஷ், துஷ்யந்த், நிவேதிதா ராஜப்பன் மற்றும் சில யூடியூப் பிரபலங்கள் என்று சுமார் இரண்டு டஜன் பேர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளை அதிகப்படுத்தாமல், நாயகன் நாயகியை மட்டுமே பிரதானமாகக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அதனைச் சரிப்படுத்தி திரைக்கதையில் சமநிலை பேணியிருந்தால், இப்படத்தின் கனம் இன்னும் கூடியிருக்கும்.

வி.எஸ்.அனந்தகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, தியாகுவின் படத்தொகுப்பு, இமானின் பின்னணி இசை உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு ஒன்றிணைந்து இயக்குனர் காட்ட விரும்பிய உலகுக்கு உருவம் தந்திருக்கிறது.

’பீல்குட் டிராமா’ வகைமை படம் பார்க்கிற உணர்வை அதிகப்படுத்துகிறது.

இமானின் இசையில் ‘வேதாளக் கதை இந்தக் கதையோ’ பாடல் சுவாரஸ்யமூட்டினாலும், ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருகிறது.

எதுவரை உலகமோ, அம்புலி அம்புலி பேபி பாடல்களும் சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்கின்றன.

நட்போடு பழகும் ஒரு ஆண், பெண் பற்றி எத்தனையோ தமிழ் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றின் சாயல் ‘2கே லவ் ஸ்டோரி’யில் நிறையவே உள்ளது.

அந்த நினைப்பையும் மீறிச் சில காட்சிகள் இதில் ஈர்க்கின்றன. ஜகவீர், லத்திகா இடையே சமாதானம் பேச மீனாட்சி முயற்சிக்கும் காட்சி அதற்கொரு உதாரணம்.

போலவே, கிளைமேக்ஸில் ‘தங்களுக்குள் இருப்பது காதலா, நட்பா’ என்று ஜகவீர் விளக்கம் தருவது சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதே கவனத்தை இதர பாத்திரங்களுக்கும், திரைக்கதையில் தவறவிடப்பட்டிருக்கிற காட்சிகளுக்கும் தந்திருந்தால், இன்றைய தலைமுறையின் பிரதிபலிப்பாக இருந்திருக்கும் இந்த ‘2கே லவ் ஸ்டோரி’.

‘நட்போடு பழகும் ஆண், பெண் இடையே செக்ஸுக்கு இடமுண்டா’ என்ற கேள்வி 2கே தலைமுறையை ஆட்டிப் படைக்கிறது.

‘துள்ளுவதோ இளமை’ காலத்திலேயே இது உண்டென்றபோதும், தற்போது அக்கேள்வி விஸ்வரூபமெடுத்திருக்கிறது. லவ்வர், பாய் பெஸ்டி என்று பல பதங்களை உருவாக்கியிருக்கிறது.

இப்படம் அந்த திசையில் எட்டிப் பார்க்கக் கூட இல்லை. அதனால், ரசிக்கத்தக்க அம்சங்கள் கணிசமாக இருந்தும் ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆகிற வாய்ப்பு பறி போயிருக்கிறது.

அதையும் மீறித் தான் கற்ற வித்தைகளைக் கொண்டு, திரையில் சுவாரஸ்யம் கூட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ‘அது போதுமே’ என்பவர்களை ‘2கே லவ் ஸ்டோரி’ திருப்திப்படுத்தலாம். மற்றவர்களுக்கு இது ‘க்ரிஞ்ச்’ ஆகத் தெரியவே வாய்ப்புகள் அதிகம்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like