தமிழ் திரையுலகில் தனித்துவமான பயணத்தை மேற்கொள்ளும் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் ஜெயம் ரவி, இனி தனது பெயரை ரவி மோகன் என்றே அழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெளியீட்டையொட்டி, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரவியின் ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் இதில் டி.ஜே. பானு, வினய், யோகிபாபு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன், ரோகான் சிங் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னை இழுக்குதடி’ பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி விட்டது.
அதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் தியேட்டரில் வெளியானது.
இப்படத்தின் விமர்சனத்தைச் சுடச்சுட வெளியிட முடியாததில் வருத்தம் தான்.
அதையும் தாண்டி ரொமான்ஸ், காமெடி, ட்ராமா வகையில் இப்படம் அமைந்திருப்பது,
இதனை எந்தக்காலத்திலும் ரசிக்க மக்கள் தயாராக இருப்பார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
எல்லாம் சரி. ‘ஏற்கனவே ஸ்ரீதர் இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற கிளாசிக்கான காமெடி ரொமான்ஸ் படமொன்று இருக்கிறது.
அப்படியிருக்க, அதே வகைமையில் இப்படம் உள்ளதா’ என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழலாம். அதனுடன் இதனை ஒப்பிட முயலலாம்.
அக்கேள்விக்கு இப்படம் என்ன பதில் சொல்கிறது? இது தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?
பிரிவும் சேர்தலும்..!
காதலில் பிரிவும் சேர்தலும் நிரந்தரமல்ல. அனுபவத்தில் உணர்ந்த எவரும் இதனைச் சொல்லிட முடியும். அதனைச் சொல்லச் சில கதாபாத்திரங்கள் வலுவாகப் படைக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், ‘காதலிக்க நேரமில்லை’ படம் எப்படிப்பட்ட கதையை, கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கிறது?
கரண் (ஜான் கொக்கன்) உடனான காதலில் உண்மையல்ல என்றுணரும் ஸ்ரேயா (நித்யா மேனன்), விந்து வங்கியில் தானம் பெற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராகிறார்.
அந்தக் காலகட்டத்தில், காதலி நிரூபமாவை (டி.ஜே. பானு) விட்டுப் பிரிந்து தனியே இருக்கும் சித்தார்த்தை (ரவி) சந்திக்கிறார். அப்போது, அவரது வயிற்றில் கரு இரண்டு மாதங்களை எட்டியிருக்கிறது.
பார்த்தவுடனேயே, ஸ்ரேயா மீது சித்தார்த்துக்குக் காதல் பிறக்கிறது. ஆனால் அதனை ஏற்பதில் பெரிதாகத் தயக்கம் காட்டுகிறார் ஸ்ரேயா. தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அது.
அந்த நேரத்தில், தனது வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்பதை அறியவே ஸ்ரேயா சென்னையில் இருந்து பெங்களூரு சென்றிருக்கின்றனர்.
அப்போதுதான், இருவரும் சந்திக்கின்றனர்.
அதன்பிறகு, எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சித்தார்த்தும் ஸ்ரேயாவும் சந்திக்கின்றனர்.
அப்போது, ஸ்ரேயா உடன் அவரது மகன் பார்த்திவ் (ரோகன் சிங்) இருக்கிறார். சித்தி (வினோதினி) உடன் இருவரும் வசித்து வருகின்றனர்.
ஸ்ரேயா மீதான தனது காதல் கொஞ்சமும் குறையவில்லை என்பதை உணர்கிறார் சித்தார்த். அதனைச் சொல்ல முடிவதில்லை.
அதற்கேற்ற சூழல் அமைந்ததா? சித்தார்த்தை தனது தந்தையாகப் பார்த்திவ் ஏற்றுக்கொண்டாரா? ஸ்ரேயாவின் வயிற்றில் பிறந்த குழந்தை யாருடையது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீண்ட காட்சியமைப்போடு விவரிக்கிறது ‘காதலிக்க நேரமில்லை’யின் மீதி.
காதலர்கள் பிரிவதும் சேர்வதும் ‘ரொமான்ஸ்’ படங்களின் அடிப்படை. இதில் இரண்டு காதல் ஜோடிகள் இருக்கின்றன. அதனைக் காட்டிய வகையில், ஒரு மேற்கத்திய படம் பார்க்கும் தாக்கத்தைக் கிடைக்கச் செய்கிறது இப்படம்.
நல்ல பெர்பார்மன்ஸ்!
நித்யா மேனன், ரவி மோகன் இருவருமே நல்ல நடிப்புக் கலைஞர்கள் என்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.
நித்யா அதில் கூடுதல் கவனத்தைப் பெற்றாலும்,
மிகச்சன்னமாகத் தனது பாத்திரத்தை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ரவி.
இவர்கள் தவிர்த்து யோகிபாபு, வினய் ராய், ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன் என்று பலர் வந்து போகின்றனர்.
சென்டிமெண்ட் காட்சிகளோடு நகைச்சுவையையும் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கின்றனர்.
இவர்களை மீறி நிரூபமா ஆக வரும் டி.ஜே. பானுவும், குழந்தை பார்த்திவ் ஆக வரும் ரோகன் சிங்கும் நம்மை ஈர்க்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி, தயாரிப்பு வடிவமைப்பாளர் லதா, கலை இயக்குனர் சண்முகராஜா, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களின் சீரிய உழைப்போடு திரையில் நல்லதொரு வண்ணச் சித்திரமாக மலர்ந்திருக்கிறது இப்படம்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ‘என்னை இழு இழு.. இழுக்குதடி’ போலவே ‘பேபி சிகி சிகி’, ‘லாவண்டர் நிறமே’ உள்ளிட்ட இதர நான்கு பாடல்களும் நம்மைத் திரையை நோக்கி இழுக்கின்றன.
பின்னணி இசையானது ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் ட்ராமாவை பார்க்கும் உணர்வைத் தருகிறது.
இந்தப் படத்தை ‘ரொமான்ஸ் காமெடி’ வகையில் முழுமையாக அமையுமாறு வடிவமைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அவ்வாறில்லாத காரணத்தால், ‘இது மாதிரியும் மனுஷங்க இருப்பாங்க போல’ என்கிற எண்ணமே மனதில் மேலெழுகிறது. அதுவே, ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ‘அப்பர் மிடில்கிளாஸ்’ ரசிகர்களுக்கானதாக மாற்றியமைக்கிறது.
விந்து வங்கியில் விந்துக்களை ‘ப்ரீஸ்’ செய்யும் நடைமுறை இன்னும் நம் நாட்டில் பரவலாகவில்லை. அதற்கான தேவையும் எழாது என்ற சிந்தனையே பலரிடத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, இந்தக் கதை அந்தச் சிந்தனைக்குளத்தில் கல்லெறிந்திருக்கிறது.
ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் கழித்து அப்படியொரு சூழல் அமையும் நிலை வரலாம். அப்படியான சூழலில், இந்தப் படம் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படலாம்.
தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதேநேரத்தில், தொடர்ந்து வரவேற்பை அதிகம் பெறுவதற்கான உள்ளடக்கம் இதில் உள்ளது என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்கள், யோகி மற்றும் வினய்யின் காமெடி வசனங்கள், நித்யா மற்றும் ரவியின் அருமையான நடிப்பு உள்ளிட்ட சில அம்சங்கள் அதன் பின்னணியில் இருக்கும்.
அவற்றை ரசிப்பவர்களுக்கு, ‘காதலிக்க நேரமில்லை’ நல்லதொரு அனுபவத்தைத் தரும். மற்றவர்களுக்கு இப்படத்தின் பாடல்களும் சில நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளும் மட்டுமே நினைவில் இருக்கும்.
-உதயசங்கரன் பாடகலிங்கம்