‘என்னய்யா இது, பாலா படம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க’ என்று ரசிகர்கள் ‘கமெண்ட்’ அடித்த காலமொன்று உண்டு.
அதே ரசிகர்கள் ‘என்ன பாலா இப்படிப் படம் எடுத்திருக்காரு’ என்று சொன்னதும் நிகழ்ந்தது.
‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன் என்றிருந்த அவரது ஏற்றம், ‘நாச்சியார்’ படத்தில் பெரும் சரிவைக் கண்டது. அவரது தீவிர ரசிகர்கள் மட்டுமே அப்படத்தைக் கொண்டாடினர்.
அந்த வரிசையில், சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது அவர் இயக்கியுள்ள ‘வணங்கான்’.
இது வழக்கமான பாலா படம் போல இருக்கிறதா? அல்லது பாலா தானாக முன்வந்து ‘இது என்னுடைய படம் தான்’ என்று விளம்பரப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறதா?
‘வணங்கான்’ கதை!
கோபாவேசம் நிறைந்து நிற்கிற ஒரு இளைஞன் கோட்டி (அருண் விஜய்). அவருக்கு ஒரு தங்கை. அவரது பெயர் தேவி (ரிதா).
கண்ணை இமைக் காப்பது போல தேவியைக் காக்கிறார் கோட்டி.
அதேநேரத்தில், அவரைத் துரத்தித் துரத்தி காதலிக்கிறார் டீனா (ரோஷினி பிரகாஷ்).
அடுத்தவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ரௌத்திரம் அடைவதே கோட்டியின் வழக்கமாக இருக்கிறது.
அவருக்கென்று ஒரு வேலை இருந்தால் தான், பிற பிரச்சனைகளில் தலையிட மாட்டார் என்று அவரது நலம் விரும்பிகள் நினைக்கின்றனர்.
அதனால் மாற்றுத்திறனாளிகள் இல்லமொன்றில் காவலாளியாக வேலைக்குச் சேர்கிறார் கோட்டி.
அங்கு இன்னொரு பிரச்சனை வந்து சேர்கிறது. அங்குள்ள இளம்பெண்கள் சிலர் சில பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் கோட்டியின் உதவியை நாடுகின்றனர்.
அதன்பின் என்னவானது? அந்த இளம்பெண்களுக்குப் பிரச்சனை தந்த நபர்கள் என்னவானார்கள் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், இது நாம் பார்த்துச் சலித்த கமர்ஷியல் படக் கதை தான். ஆனால், இதனைத் திரையில் பாலா எவ்வாறு கையாண்டார்? நடிப்புக் கலைஞர்களுக்கு எத்தகைய முக்கியத்துவத்தைத் தந்துள்ளார் என்பதில் வேறுபட்டு தெரிகிறது ‘வணங்கான்’.
சிறப்பான உழைப்பு!
‘பிதாமகன்’ விக்ரம் போன்று தோற்றம், நடிப்பை வெளிப்படுத்துகிற பாத்திரத்தை ஏற்றாலும், அந்தச் சாயல் தெரியாதவாறு பார்த்துப் பார்த்து நடித்திருக்கிறார் அருண்விஜய்.
நாயகனின் தங்கையாக நடித்துள்ள ரிதா அருமையான புதுவரவு. பல கடினமான காட்சிகளில் அவரது இருப்பு நமக்கு கொஞ்சம் கூட துருத்தலாகத் தெரியவில்லை. அது ஆச்சர்யம் தருகிறது.
பாலா படங்களில் நாம் பார்த்த லைலா, சங்கீதா, மதுஷாலினி, காயத்ரி உள்ளிட்டவர்களின் நடிப்பை நினைவூட்டுகிறது நாயகி ரோஷினி பிரகாஷின் இருப்பு.
கொஞ்சம் முதிர்ந்த முகத்தோடு தோற்றமளிக்கிற இவர் குறும்பான செயல்களில் ஈடுபடுவதாகக் காண்பித்திருப்பது, எண்பதுகளில் வெளியான படங்களைப் பார்ப்பது போலிருக்கிறது.
சமுத்திரக்கனி, மிஷ்கின் ஏற்றிருக்கிற பாத்திரங்கள் புதிதில்லை என்றபோதும், அவர்களது வரவு திரைக்கதையில் உற்சாகத்தை ஏற்படுத்துவது உண்மை. அதிலும் பின்பாதியில் மிஷ்கின் பேசுகிற வசனங்களுக்கு தியேட்டர் அலறுகிறது.
சண்முகராஜன், அவரது மனைவியாக வருபவர், பிருந்தா சாரதி, பாதிரியாராக வரும் பாலசிவாஜி, பாண்டி ரவி, அருள்தாஸ் என்று பலர் இதில் தோன்றியிருக்கின்றனர்.
ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு இரண்டாம் பாதியில் நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்துவிடுகிறது.
சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு, வழக்கமான பாலா படம் பார்க்கிற உணர்வைத் தரவில்லை.
தொடக்கத்தில் வரும் காட்சிகள் இறுக்கமாகத் தொகுக்கப்பட வேண்டுமென்று அங்கு கொஞ்சம், இங்கு கொஞ்சம் என்று மொத்தமாக ஷாட்களை திரட்டி நிற்கின்றன. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
கலை இயக்குநர் ஆர்.கே. நாகுவின் உழைப்பானது காவல் நிலையம், நீதிமன்றம் போன்ற செட்களில் பிரமிப்பைத் தருகிறது. அவற்றில் தெரிந்த யதார்த்தம் இதர இடங்களில் தெரியவில்லை.
ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையில் இறை நூறு, முகிலின் மேலே பாடல்கள் மெல்ல நம்மைக் கடக்கின்றன.
ஆனால், அவரது பின்னணி இசையானது திரைக்கதையில் வேகம் கூட்டப் பாடுபட்டிருக்கிறது.
இன்னும் இப்படத்தின் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி நுட்பம் உட்படப் பல அம்சங்கள் குறித்து பேச விஷயங்கள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் தாண்டி, இதன் திரைக்கதையைக் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது.
மிகச்சிறிய கதை, அதிலுள்ள பாத்திரங்கள், அவற்றை விவரிக்கிற காட்சிகள், அதனைத் திரையில் காட்டிய வகையில் வசீகரிக்கிற பாலாவின் ஆக்கம் ஆகியனவே அவரது படங்களின் சிறப்பு.
‘வணங்கான்’ படத்தில் அந்தப் பிரமிப்பு கிடைக்கவில்லை. சின்னச்சின்னதாய் காட்சிகளைக் குவிப்பது அவரது பாணி. ‘நாச்சியார்’ படத்திலேயே அந்த மாஜிக் நிகழவில்லை. இதிலும் அப்படியே.
பாலாவின் முத்திரைப்படங்கள் அனைத்தும் இதே போன்ற கதையம்சத்தைக் கொண்டவை தான். ஆனால், அவற்றில் ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னணியையும் விலாவாரியாக விவரிக்கிற காட்சிகள் உண்டு.
இதில் அருண் விஜய்யையும் அவரது தங்கையாக வரும் ரிதாவையும் நாயகி ரோஷினியையும் அறிமுகப்படுத்துகிற, அவர்களது இயல்பை விளக்குகிற காட்சிகள் இருக்கின்றன.
ஆனால், பாலாவின் கதை சொல்லலோடு அவை பொருந்தி நிற்கவில்லை.
கதைக்களத்தை விட்டு ரொம்பவே விலகி நிற்கின்றன.
உதாரணமாக, பெருங்கிணற்றுக்குள் இருந்து சுனாமியால் சிதைந்துபோன பொருட்களை அருண் விஜய் எடுத்து வருவதாக வரும் காட்சி இன்னொரு படத்தில் இருந்தால், நாம் அந்த இயக்குநரை விமர்சனங்களால் குதறியிருப்போம்.
அப்போது, ஒரு கையில் பெரியாரையும் இன்னொரு கையில் பிள்ளையார் சிலையையும் அருண் விஜய் வைத்திருப்பதாக வேறு காட்டியிருக்கிறார்.
அதற்கான விளக்கம் ஏதும் திரைக்கதையில் இல்லை. ஒரு ‘ஷாக் வேல்யூக்காக’ என்கிற இடத்தோடு அந்த ஷாட் முடிந்துவிடுகிறது.
இது போன்ற குறைகள் பாலாவின் ‘கிளாசிக்’ படங்களில் இருக்காது. அதனால், முன்பாதி ஒட்டாமல் நிற்கிறது. நல்லவேளை, பின்பாதி அந்தக் குறையைக் களைந்துவிடுகிறது.
பாலாவின் படங்களில் வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். சாலையில் எதிர்ப்படும் மனிதர்கள் போன்று கதையில் அவர்கள் இடம்பெற்றாலும், அந்த முக்கியத்துவத்தில் மாற்றம் இருக்காது.
‘வணங்கான்’ படத்தில் வில்லத்தனத்திற்கான இடம் ரொம்பவே பலவீனமாக வெளிப்பட்டிருக்கிறது.
அதனால், முழுக்க நாயகனின் பராக்கிரமங்களைக் காட்டுகிற படமாகவே உள்ளது ‘வணங்கான்’.
பாலா இயக்கிய ‘பிதாமகன்’ கொஞ்சம், ‘நந்தா’ கொஞ்சம், அப்புறம் ‘நான் கடவுள்’ கொஞ்சம் என்று பிய்த்துப் போட்டு ‘கொத்து பரோட்டா’ அடித்தாற் போலிருக்கிறது இப்படம் தரும் தாக்கம்.
‘பாலா படம் பார்க்குறோம்’ என்கிற ‘கூஸ்பம்ஸ்’ உள்ளவர்கள் இப்படம் பார்த்து புளகாங்கிதம் அடையலாம்.
அவரது கிளாசிக் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்பவர்கள் இதனை பார்த்துவிட்டு ‘இது பாலா படம் தானா’ என்று ‘அப்செட்’ ஆகலாம்.
இவ்விரண்டிலும் நாங்கள் சேர்த்தி இல்லை என்று பாலாவைப் பற்றி எதுவுமே அறியாமல் படம் பார்க்க வருபவர்கள், ‘சுமாரா இருக்குல்ல’ என்று சொல்லவே வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமே ‘வணங்கான்’ படத்தின் பலம்.
-உதயசங்கரன் பாடகலிங்கம்