மலேசிய மண்ணில் பசுமையை விதைத்தவர்கள்!

மணா

ஊர் சுற்றி குறிப்புகள்:

வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியாவுக்கு இந்திய மண்ணில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சென்ற இடத்தில், அந்த மண்ணை வளப்படுத்தியதில் அவர்களுக்கும் கணிசமான பங்குண்டு.

அப்படி சென்ற தமிழர்களில் குறிப்பிட்டத்தக்கபடி இயங்கியவர்களில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை மலேசிய மண்ணில் உருவாக்கிய முகமது இத்ரிஷ்-க்கும் முக்கிய பங்குண்டு.

தமிழ்நாட்டில் கீழக்கரையிலிருந்து சென்று மலேசிய மண்ணில் வணிக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தன்னை வளப்படுத்திக் கொண்டு இறுதிவரை சமூக நேசத்துடன் வாழ்ந்தவர்களில் ஒருவர் முஹம்மது இத்ரிஷ்.

அவரோடு இணைந்து செயல்பட்டவர் பி.வி.சுப்பராவ். இருவரும் மலேசியாவில் பல்வேறு கருத்தரங்குகளை, பயிற்சி முகாம்களை நடத்தியதோடு மற்ற நாடுகளுக்கும் சென்று நடத்தி இருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பினாங்கில் என்னுடைய புத்தக வெளியீட்டு விழா நடந்தபோது, அதை முன் நின்று நடத்தியவர்களில் இருவருடைய பங்கும் இருந்தது.

அப்போது முகமது இத்ரிஷ் அவர்களை சந்தித்தபோது, மிகுந்த பாச உணர்வுடன் தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் தமிழ் இன உணர்வுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், வாழ்க்கையில் அவர் அடைந்த உயரங்கள், மற்ற தமிழர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்கின்ற அக்கறையோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவற்றை எழுத்தாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற முனைப்போடும் இருந்தார்.

அப்போது அது குறித்து இரண்டு முறைக்கு மேல் என்னிடம் பேசியும் கூட, அதை செயல்படுத்த முடியாத நிலையில் அவர் காலமாகிவிட்டார்.

தற்போது அதே பயனீட்டாளர் சங்கத்தை, அதே உயிர்ப்புடன் நடத்தி வருபவரான பி.வி.சுப்பாராவ் அண்மையில் விஜயவாடாவில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த ஒரு பயிற்சி முகாமிற்காக வந்திருந்தவரை சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்தேன்.

இரண்டரை மணி நேர அளவிற்கு மிக விரிவாக, மலேசிய தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். சுற்றுச்சூழல் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

பல்வேறு திசைகளில் நீண்டது, அவருடனான பேச்சு. நிறைவாக முஹம்மது இத்ரிஸ் பற்றியும் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தைப் பற்றியும் தன்னுடைய செயல்பாடுகள் பற்றியுமான ஒரு எழுத்துபூர்வமான பதிவு உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற முனைப்புடன் அவர் உற்சாகத்துடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அவருடைய கனவு மெய்ப்பட, நீண்ட நாள் நண்பர் என்கின்ற முறையில், அதை சாத்தியப்படுத்த வேண்டும். காலம் அதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுக்கும். பல வருடங்களாக அலுப்பில்லாமல் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையோடு செயல்படும் நண்பர் பி.வி.சுப்பாராவ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

You might also like