கடந்த ஆண்டு வெளியான ‘போர்தொழில்’, நடிகர் சரத்குமாரின் முக்கியத்துவத்தைத் திரையுலகில் மீண்டும் முன்னிறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டில் மட்டும் ஹிட் லிஸ்ட், மழை பிடிக்காத மனிதன், நிறங்கள் மூன்று படங்கள் அவர் நடிப்பில் வெளியாகின.
அந்த வரிசையில், அவர் நடித்த 150ஆவது படம் என்ற சிறப்பைத் தாங்கி வந்திருக்கிறது, ஷ்யாம் – பிரவீன் இயக்கியுள்ள ‘தி ஸ்மைல்மேன்’.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இந்த ‘தி ஸ்மைல்மேன்’?
இரு போராட்டங்கள்!
காவல் துறை அதிகாரி சிதம்பரம் நெடுமாறன் (சரத்குமார்) ஒரு விபத்தில் சிக்குகிறார்.
அதனால், ஐந்தாண்டுகள் ஓய்வில் இருக்கிறார். ஓரளவு நல்ல உடல்நலத்தை அவர் அடைந்தப்பிறகு, ‘உங்களுக்கு அல்சைமர்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறது’ என்கிறார் மருத்துவர்.
அதனால், ஓராண்டு வரை மட்டுமே அவர் நினைவுகளைத் தாங்கி வாழ முடியும் என்கிறார்.
மேற்சொன்ன விபத்தின்போது தான், ‘தி ஸ்மைல்மேன்’ எனும் சைக்கோ கொலைகாரனை சிதம்பரம் நேரில் கண்டிருக்கிறார்.
ஆனால், அவரது முகத்தைக் காணவில்லை. தனக்கும் அந்தக் கொலைகாரனுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு உள்ளதை அவர் உணர்கிறார்.
ஏனென்றால், அந்த விபத்துக்குப் பிறகு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த சிதம்பரத்திடம் ‘நீ வெளிச்சத்திற்கு வந்தா, நானும் என் பாணியில கொலைகளைச் செய்ய ஆரம்பிப்பேன்’
எனும் தொனியில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் அந்த ‘ஸ்மைல்மேன்’.
சிதம்பரம் தனது காவல் துறை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிடுகிறார். அது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகிறது. அதனைக் காண்கிறார் அந்தக் கொலைகாரன்.
மீண்டும் சிதம்பரத்தைத் துரத்த தயாராகிறார்.
இந்த முறை, அவரைத் தன்னை நோக்கி வரவழைக்கத் திட்டமிடுகிறார் சிதம்பரம். தண்டனையில் இருந்து தப்பி, சமூகத்தில் உலவும் சில குற்றவாளிகளோடு வலியச் சென்று நட்பு வளர்க்கிறார்.
அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து அந்த ‘சைக்கோ’ கொலைகாரனுக்கு இரையாகின்றனர். அவர்கள் குறித்து தகவல் தந்த ஒரு ஓய்வுபெற்ற காவலரும் (ஜார்ஜ் மரியான்) கொல்லப்படுகிறார்.
அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, அவரது வீட்டுக்குச் செல்கிறார் சிதம்பரம். ஆனால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.
காரணம், நினைவுகளோடு சிதம்பரம் நடத்தும் போராட்டம். அதனுடன் அந்தக் கொலைகாரனைக் கண்டறியும் போராட்டத்தையும் மேற்கொள்கிறார்.
இரு வேறு போராட்டங்களையும் சிதம்பரம் வெற்றிகரமாக எதிர்கொண்டாரா? ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட அந்தக் கொலைகாரனைப் பிடித்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
சரத்குமாரின் இருப்பும், த்ரில்லர் கதையும் தானாகவே இப்படத்தை ‘போர்தொழில்’ உடன் ஒப்பிட வைக்கும். ஆனால், அது போன்று இப்படம் இல்லை. அந்த ஒப்பீடே இப்படத்திற்கான பெரும்பலவீனம்.
தவறிய இடங்கள்!
‘போர்தொழில்’ போன்று ஏன் ‘தி ஸ்மைல்மேன்’ இல்லை? இந்தக் கேள்வியே தவறானதுதான். ஏனென்றால், எந்தவொரு இயக்குநராலும் தனது முந்தையப் படத்தின் வெற்றியைப் போன்று மீண்டும் ஒன்றை ஆக்க இயலாது.
அந்த ஒப்பீட்டையும் மீறிச் சில இடங்களில் தவறியிருக்கிறது இப்படம்.
சிறப்பாக எழுதப்பட்ட காட்சிகள், நறுக்கு தெறித்தாற் போன்று அமையப் பெற்ற காட்சியாக்கம், காட்சிகளுக்கு இடையேயான வெளியை இறுக்குதல், பிரேம்கள் முழுக்க ஒரே மாதிரியான வண்ணக் கலவையை நிரப்ப முயற்சித்தல், அதன் வழியே படத்திற்கான ‘மூடு’ பார்வையாளர்கள் மனதில் உருவாதல் போன்றவற்றைத் தவறவிட்டிருக்கிறது ‘தி ஸ்மைல்மேன்’.
அதேநேரத்தில், ‘இது ஒரு சிறப்பான முயற்சி’ என்ற வகையில் நம் மனம் கவர்கிறது.
படத்தின் முன்தயாரிப்பிலும், படப்பிடிப்பின்போதும் கொஞ்சம் அதிகக் கவனத்தைச் செலுத்தியிருந்தால், தவறிய இடங்களைச் சரி செய்திருக்கலாம்.
இயக்குனர்கள் ஷ்யாம் – பிரவீன், திரைக்கதையாசிரியர் கமலா அல்கெமிஸ் கூட்டணி அதனைத் தவறவிட்டிருக்கிறது.
நாயகன் சரத்குமார் இதில் ‘சூப்பராக’ நடித்திருக்கிறார். என்ன, அவரது ஒப்பனை தான் சரிவர அமையவில்லை.
அவரோடு சிஜா ரோஸ், இனியா, பேபி ஆலியா, சுரேஷ் மேனன், குமார் நடராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்படச் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
குமார் நடராஜன், ராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால், தியேட்டரில் ஆங்காங்கே சிரிப்பலைகள் எழுந்திருக்கும்.
இந்தக் கதையில் கலையரசனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இதுவரை இந்த விமர்சனத்தைப் படித்தவர்களுக்கு அது என்னவென்று தானாகப் பிடிபடும்.
இதில் சரத்குமாரின் ஜுனியராக ஸ்ரீகுமார் என்பவர் நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரமும், அதற்கான நடிப்பும் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ரவி பாண்டியன், ஒப்பனையாளர் வினோத் சுகுமாரன் உட்படப் பலர் இதில் தொழில்நுட்பப் பணிகளைக் கையாண்டிருக்கின்றனர்.
ஆனால், சிறப்பான வெளிப்பாடு அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
அதற்குப் படக்குழு பல பதில்களை வைத்திருக்கும்.
பார்வையாளர்களுக்கு அந்தக் காரணங்கள் எல்லாம் ஆறாம்விரலாகவே தெரியும்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ், தனது பின்னணி இசை மூலமாகக் காட்சிகளுக்கான இடைவெளியை நிறைக்க முயற்சித்திருக்கிறார்.
அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இக்கதையில் சில லாஜிக் மீறல்கள் தலைகாட்டும். அது தியேட்டரில் படம் பார்க்கையிலேயே வெளியே தெரிவதுதான் ‘தி ஸ்மைல்மேன்’னின் மைனஸ்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா – திரைக்கதையாசிரியர் ஆல்ப்ரெட் பிரகாஷ் கூட்டணியின் ’போர்தொழில்’ படத்தில் அவை அறவே தென்படாது. அந்த வேறுபாட்டைப் பார்வையாளர்கள் உணர்வதும் இப்படத்தின் பலவீனம்.
அதேநேரத்தில், ’எத்தனை குறைகள் இருக்கட்டும், நான் த்ரில்லர் படம் பார்க்கணும்ங்க’ என்று தியேட்டருக்கு வருபவர்களை ஈர்க்கும் ‘தி ஸ்மைல்மேன்’.
– உதயசங்கரன் பாடகலிங்கம்.
#தி_ஸ்மைல்மேன் #The_smileman #விமர்சனம் #Review #சரத்குமார் #Sarathkumar #ஜார்ஜ்_மரியான் #George_mariyan #ஷ்யாம்_பிரவீன் #Syam_praveen #கமலா_அல்கெமிஸ் #Kamala_Alchemis #சிஜா_ரோஸ் #Sija_rose #இனியா #Iniya #பேபி_ஆலியா #Baby_alia #சுரேஷ்_மேனன் #Suresh_menon #குமார்_நடராஜன் #Kumar_nataraj #பிரியதர்ஷினி_ராஜ்குமார் #Priyadharashini #ஸ்ரீகுமார் #Srikumar #ஒளிப்பதிவாளர்_விக்ரம்_மோகன் #Cameraman_Vikram_mohan #படத்தொகுப்பாளர்_சான்_லோகேஷ் #Editor_San_lokesh #கலை_இயக்குநர்_ரவி_பாண்டியன் #Art_Director_Ravi_pandian #ஒப்பனையாளர்_வினோத்_சுகுமாரன் #இசையமைப்பாளர்_கவாஸ்கர்_அவினாஷ் #Musicdirector_Gavaskar_avinash