பேரிடர் பாதுகாப்பிற்கு எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை!

தவெக தலைவர் விஜய் சாடல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே வெள்ள நிவாரண பாதிப்பு குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், பேரிடர் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில், “எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன்தான் மக்கள் இருப்பர்.

ஆனால், குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?

மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை.

எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு.

எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர்.

பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் முழுவதுமாக வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like