‘ரொமான்ஸ்’ படங்கள் இனிமேல் வருமா?

ஒரு படம் என்ன வகைமையில் அமைந்தது என்பதைப் பொறுத்து திரைப்படங்களைப் பார்க்கலாம் என்று நினைக்கும் ஒரு பெருங்கும்பலே இங்குண்டு. போலவே, அப்போதைய மனநிலையைப் பொறுத்து அதற்குப் பொருத்தமான படங்களைப் பார்க்கலாம் என்கிற கூட்டத்திலும் உறுப்பினர்கள் கணிசம். ஓடிடி தளங்களின் வரவேற்புக்குப் பிறகு, இவர்களுக்கான தேடல் அங்கே சிறப்பாகப் பூர்த்தி செய்யப்படுகிறது என்பதே உண்மை.

அது மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆக்‌ஷன், த்ரில்லர், ஹாரர், மிஸ்டரி, கேங்ஸ்டர், ட்ராமா வகைமையில் அமைந்த படங்களே பெருவாரியான வரவேற்பைப் பெறுவதால் ரொமான்ஸ், செண்டிமெண்ட் படங்களின் வரவு குறைந்துவிட்டது.

அதன் காரணமாக, ‘ரொமான்ஸ் படங்கள் இனிமேல் வருமா’ என்கிற கேள்வியும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு காலகட்டத்திலும் ரொமான்ஸ் வகைமை படங்களை ரசிப்பதற்கென்றே சில ரசிகர்கள் இருப்பார்கள். சினிமா உருவான காலம் முதலே உலகெங்கும் இந்த நிலைமை இருந்து வருகிறது.

அப்படியிருக்கச் சமீபத்திய திரைச்சூழல் அப்படிப்பட்ட ரொமான்ஸ் ரசிகர்களை ஏமாற்றத்தில் இருத்தியிருக்கிறது.

கார்த்தியின் பேச்சு!

சமீபத்தில் ராஜசேகர் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்த ’மிஸ் யூ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் கார்த்தி, ‘தமிழில் ரொமான்ஸ் படங்கள் குறைந்துவிட்ட காலகட்டத்தில் இப்படம் அந்த குறையைப் போக்க வந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் காதலே அதிகமும் பேசப்படுகிற பொருளாக இருந்து வரும் நிலையில், தமிழ் திரையுலகம் அதிகமாக அதனைத் தவறவிட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற ரொமான்ஸ் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார்.

தீவிர சினிமா ரசிகர்கள் மனதில் இருக்கும் எண்ணங்களைப் பிரதிபலிக்கிற வகையில் அவரது பேச்சு இருந்தது. இந்த கருத்து, நடுத்தர வயதில் இருக்கிற பெரும்பாலானோரிடம் நிறைந்திருப்பதைக் காண முடிகிறது.

காதல் படங்கள்!

ரொமான்ஸ் படங்களின் உள்ளடக்கம் சிறப்பாக, புதுமையாக, ஈர்ப்பதாக அமையும்போது அவை பெருவெற்றியைக் குவிக்கின்றன என்பதே உண்மை. இதற்கு தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு தமிழ் திரையுலகில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதன்பின்னர் எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம், ரஜினி, கமல் காலகட்டம், பின்னர் வந்த அஜித், விஜய்யின் ’மில்லினியம்’ காலம் என்று பல்லாண்டுகளாகப் பல காதல் படங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

2000-வது ஆண்டுக்குப் பிறகே, அந்த நிலையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்னர் ‘படையப்பா’வில் கூட ரஜினி, சௌந்தர்யாவிடம் காதல் வயப்படுகிற காட்சிகளில் நடித்திருந்தார். ‘இந்தியன்’ உட்படப் பல படங்களில் கமல் திரையில் காதலை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆசை, காதல் கோட்டை, அமர்க்களம் என அஜித் காதலில் உருகியபோது, இன்னொரு பக்கம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, நிலாவா வா என்று விஜய்யும் காதல் நாயகனாகத் திகழ்ந்தார்.

பிறகு அனைவருமே ஆக்‌ஷன் நாயகன் ஆகத் திசை திரும்ப, காதல் படங்களை எழுதுகிற, இயக்குகிற ஆசையும் படைப்பாளிகளிடத்தில் குறைந்துவிட்டது. அதையும் மீறிச் சில காதல் படங்கள் கடந்த இருபதாண்டுகளில் நம்மை மகிழ்வித்திருக்கின்றன.

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மயக்கம் என்ன’ படங்களில் காதல் அடிநாதமாகத் திகழ்வதைக் காண முடியும். பதின்பருவத்தினரின் காதலையும், அதன் தொடர்ச்சியாக நிகழும் ஆணவக்கொலைகளுக்கான மூர்க்கத்தையும் அழுத்தமாகச் சொன்னது பாலாஜி சக்திவேலின் ‘காதல்’.

’மின்னலே’ படத்தின் வழியே அறிமுகமான கௌதம் மேனன், நகர்ப்புற இளையோரின் காதலைத் திரையில் காட்டுவதில் தான் ஒரு ஜித்தன் என்று தனது அடுத்தடுத்த படங்களில் நிரூபித்தார். வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா என்று சில கிளாசிக் ரொமான்ஸ் படங்களைத் தந்தார்.

’சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’ என்று சினிமாத்தனமான காதலைச் சொன்ன இயக்குனர் சசி, ஒரு எளிய தமிழ் பெண்ணின் ஆழமான காதலை ‘பூ’ படத்தில் காட்டியிருந்தார்.

’மௌன ராகம்’, ‘பம்பாய்’ தந்த இயக்குனர் மணிரத்னமோ ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’ படங்களைக் கொடுத்தார்.

சேரனின் ‘ஆட்டோகிராப்’, ஜான் மகேந்திரனின் ‘சச்சின்’, பிரபு சாலமனின் ‘மைனா’, ராதாமோகனின் ‘மொழி’, அமீரின் ‘பருத்திவீரன்’, சற்குணத்தின் ‘களவாணி’, ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’, கிருஷ்ணாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ என்று பல படங்கள் தியேட்டரில் நம்மைக் காதலில் மூழ்கடித்திருக்கின்றன.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளியான படங்களில் ராஜா ராணி, காதலில் சொதப்புவது எப்படி, திருமணம் எனும் நிக்கா, காதலும் கடந்து போகும், சில்லுக் கருப்பட்டி, 96, ஒருநாள் கூத்து, திருச்சிற்றம்பலம், இறுகப்பற்று, பேச்சுலர், ஓ மை கடவுளே, டாடா, ஹே சினாமிகா, நித்தம் ஒரு வானம் என்று ஒரு பட்டியலிடும் அளவுக்குக் காதல் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இது போக நம் பார்வைக்குப் படாமல் விடுபட்ட படங்கள், சிறப்பான காதல் அத்தியாயங்களைக் கொண்ட வேறு வகைமைப் படங்கள் என்று இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

’நாயகனும் நாயகியும் காதலிப்பது தானே சினிமாவில் நடக்கும்’ என்ற எண்ணத்தை நோக்கி ரசிகனைத் திரும்பச் செய்யாத வகையில், திரையில் ஒரு இயல்பான காதலைக் காட்டும் எந்தப் படமும் எளிதில் ஈர்க்கும். சினிமாவுக்கான சுதந்திரத்தோடு கொஞ்சம் அதீதமாகக் காதலைச் சொல்கிற படங்களும் ரசிக்கப்பட்டிருக்கின்றன என்றபோதும், அதையே ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக்கொண்டு எல்லை மீறிய சமயங்களில் மட்டுமே ரசிகர்கள் அப்படங்களைக் கைவிட்டிருக்கின்றனர்.

மற்றபடி, ஒரு காதலை மிகச்சரியாகக் காட்டிய எந்தப் படமும் ரசிகர்களின் கவனத்தில் இருந்து விடுபடாது. அந்த வகையில், இன்றும் என்றும் காதல் படங்களுக்கு வரவேற்பு உண்டு.

ரொமான்ஸ் மட்டுமல்ல, இதர வகைமை படங்களும் சேர்ந்து வந்தால் மட்டுமே ரசிகர்கள் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுக்கிற உரிமையைச் செயல்படுத்த வழி ஏற்படும். திரையுலகம் அதனை மனதில் கொண்டு, காதல் உட்பட அனைத்து உணர்வுகளையும் ஏந்திப் பிடிக்கும் திரைக்கதைகளை ஆக்க வேண்டும். 

  • மா.பா
You might also like