மனிதர்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது மிக முக்கியம். அது நமது கடந்த காலத்தை மட்டுமல்லாமல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் சொல்லிச் செல்ல வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறது.
அதேநேரத்தில், அந்த உரையாடலை நாம் சார்ந்த அனைவருக்கும் கடத்த வேண்டியதும் அவசியமாகிறது.
ஒரு தகவலைத் தெரிவிப்பது அல்லது பரஸ்பரம் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது என்பது குறைந்தபட்சத் தேவையாக உள்ளது. அந்த வகையில், தகவல் தொடர்பு என்பது மனிதனின் அத்தியாவசியமாகிப் பல நூற்றாண்டுகள் ஆகின்றன.
குகைகளில் ஓவியங்களாக வரைந்தது, உடல் சைகைகள் மூலமாக எண்ணங்களை வெளிப்படுத்தியது போக, தாம் வாழும் சுற்றத்தில் புகையை உருவாக்கியும் தொலைதூரத்தில் இருக்கும் சகாக்களுக்கு தகவல்களைத் தெரிவித்த காலமொன்று இருந்தது.
பிறகு மனிதர்களைத் தூது அனுப்பும் வழக்கம் உண்டானது. அதில் பல தடைகள் வந்தபோது புறாக்கள் உள்ளிட்ட சில பறவைகள் மற்றும் சில விலங்குகள் அப்பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது வரலாறு.
அரசுப்பூர்வமாக ஒரு தகவலை அனுப்ப, குறிப்பிடத்தக்க ஒரு முறையை முதன்முதலாகப் பயன்படுத்தினர் பெர்சியர்கள். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அது நிகழ்ந்தது.
வெகுகாலம் கழித்து ஐரோப்பிய நாடுகளில் காலனியாதிக்கத்திற்குப் பிறகு, உலகம் முழுவதும் அஞ்சல் சேவைகள் பரவலாயின.
அச்சு இயந்திரத்தின் வருகை, தந்தி மற்றும் தொலைபேசி கண்டுபிடிப்பு, பிறகு வந்த வானொலி, தொலைக்காட்சி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு, இணைய வசதி என்று கடந்த சில நூற்றாண்டுகளில் மலையளவு முன்னேற்றம் தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், அவற்றின் நடுவே இருக்கும் அஞ்சல் சேவை என்பது இன்றளவும் ஒரு ‘கிளாசிக்’ அந்தஸ்தை வகிக்கிறது.
ஏனென்றால், போக்குவரத்து என்பதே கேள்விக்குறியாக இருந்த காலகட்டத்தில் அது மனிதர்களை ஒன்றிணத்தது தான்.
இந்தியாவில் அஞ்சல் சேவை!
கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் மிகுந்தபோது, அவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.
கி.பி.1727ஆம் ஆண்டு அதற்கான விதை விழுந்தது. பின்னர் 1764, 1766ஆம் ஆண்டுகளில் சென்னை, கொல்கத்தாவில் அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன.
ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் பிரெஞ்சுகாரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் உட்படப் பல ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிழக்காசிய நாடுகளில் இச்சேவைகளைப் பயன்படுத்தினர் என்பது வரலாறு.
அது மக்கள் பயன்படுத்தத்தக்கதாகவும் இருந்ததால், பல சமூக மாற்றங்களும் சாத்தியமாகின. இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமான காலகட்டத்தில் தகவல் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வழிகளில் ஒன்றாக அஞ்சல் சேவையும் இருந்தது.
தொடக்கத்தில் தபால் அட்டை மூலமாகவும், தபால் தலை ஒட்டப்பட்ட கடிதங்கள் மூலமாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டன.
பின்னர் பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ‘மணி ஆர்டர்’ வசதி ஏற்படுத்தப்பட்டது. தந்தி சேவையும் எளிய மனிதர்களுக்கான சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக விளங்கியது.
இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு கிராமங்களை உயிர்ப்புடன் செயல்பட வைத்ததில் இவ்விரண்டும் முக்கியப் பங்காற்றின என்றால் அது மிகையில்லை.

தந்தி வந்தது கண்டு அஞ்சி நடுங்கிய காலமொன்று உண்டு; போலவே, தபால்காரர்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த காலமும் உண்டு. அந்த காலம் தான் ‘அஞ்சல் சேவையின் பொற்காலம்’.
பிற்பாடு துரித அஞ்சல் சேவையை தனியார் நிறுவனங்கள் துவக்கி வெற்றிகரமாகச் செயலாற்றியபோது, அஞ்சலகங்களின் நிலை கேள்விக்குறியானது.
செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இணையச் சேவை வரவால் அவற்றின் இருப்பு தீர்ந்துபோனதாக உணர்ந்தனர் சிலர். ’கணினிமயமாக்கம் வந்தபிறகு, இதற்கென்ன தேவை இருக்கிறது’ என்ற கேள்வி பலமானது.
ஆனால், 2005-க்குப் பிறகு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வங்கிச்சேவை, காப்பீட்டு சேவைகளை ஆற்றுகிற ஒன்றாகவும் வளர்ந்தன அஞ்சலகங்கள்.
அந்த மாற்றம், அஞ்சல் சேவைக்கான இருப்பு என்றும் மாறாததாக ஆக உதவியது.
நினைவில் கொள்ளலாம்!
‘பின்கோடு’ என்பது இன்றளவும் அஞ்சல் சேவையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. 1972-ம் ஆண்டு ஸ்ரீராம் பிகாஜி வெலங்கர் என்பவர் இதனை அறிமுகப்படுத்தினார்.
நாட்டின் குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட மண்டலம், அங்கு அஞ்சலகம் உள்ள பகுதி என்பதைக் குறிப்பிடும் வகையில் இந்த ‘பின்கோடு’ அமைக்கப்பட்டது.
எத்தனையோ நுட்பங்கள் வந்தபோதும், இதன் கண்டுபிடிப்பை மிஞ்சுகிற ஒன்று இதுவரை வரவில்லை.
உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் சேவையைக் கொண்டதாக இந்தியா விளங்குகிறது. நாடு முழுவதும் சுமார் 1,64,972 அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை 23 அஞ்சல் வட்டங்களின் கீழ் செயல்படுகின்றன.
கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தைத் தாண்டி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், இச்சேவை 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அஞ்சல் சேவையைக் கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதியானது ‘உலக அஞ்சல் தினமாக’ கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்த நாளான்று ‘தேசிய அஞ்சல் தினத்தை’ கொண்டாடுகிறது இந்தியா.
அஞ்சல் சேவையின் சிறப்புகளை உணர்ந்து கொண்டாடுவதும், அதன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 முதல் 13-ம் தேதி வரை ‘தேசிய அஞ்சல் வாரமாகவும்’ கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தபால்தலை தினம், கடிதம் & பார்சல் தினம் உள்ளிட்டவை அக்டோபர் 11, அக்டோபர் 12 அன்று கடைபிடிக்கப்படுகின்றன.

இணையத்தின் வரவால், இன்று நம் கை நுனியில் உலகம் இருக்கும் தோற்றம் ஒவ்வொருவர் மனதிலும் படிந்திருக்கலாம்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதற்கு நேரெதிரான சூழலே நிலவியது என்பது நிஜம்.
அந்த காலகட்டத்தில் அஞ்சல் சேவை என்பது நம்மை உயிர்ப்புடன் இருக்க வைத்தது; நம்மை இந்த உலகத்தோடு இணைத்தது. தபால்காரர்களைத் தெய்வமாகப் போற்ற வைத்தது.
அந்த போற்றுதல் தேவையில்லை என்று கருதினால் கூட, அச்சேவையைத் தந்த உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பது நமது கடமை.
அந்த வகையில், நம் நாட்டில் போக்குவரத்து வசதியற்ற இடங்களிலும் அஞ்சல் சேவையைக் கொண்டு சென்ற ஒவ்வொருவரையும் நினைவில் கொள்ள வேண்டியது நம் கடமை. அதனை நினைவூட்டுகிறது ‘தேசிய அஞ்சல் தினம்’!
- மாபா