மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று தான் யாழினிக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. காலை 8 மணிக்கு ஐந்து டிகிரி குளிரில் யாழினியை அழைத்துக் கொண்டு பள்ளி சென்றோம்.
இங்கே குழந்தைகளுக்கான கல்வியை… இங்கே இருக்கும் கவுன்சில் தான் முடிவு செய்கிறது. எனக்கு வட்டச் செயலாளர் வண்டு முருகனை தெரியும் என்ற கதை எல்லாம் லண்டனில் வேலைக்காகாது.
கவுன்சில்ல இருந்து மெயில் வந்ததுமே, குடும்பத்துடன் நம்ம ஊர் போல பள்ளிக்குச் சென்றோம். கேட்டைக் கூட திறக்கவில்லை.
விவரங்கள் கேட்டார்கள். உங்கள் குழந்தைக்கு எங்கள் பள்ளியில் கவுன்சில் இடம் ஒதுக்கி இருக்கிறது. மேலதிக தகவல்கள் எல்லாம் உங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்படும் என்று நாசுக்காக சொல்லி வாசலிலேயே நிற்க வைத்து அனுப்பி விட்டார்கள்.
மெயிலில் யாழினியை அழைத்துக் கொண்டு வர சொன்னார்கள். பள்ளியில் இடம் கிடைப்பது என்பது மூன்று மாத கால டென்ஷன் எங்களுக்கு. இடம் கிடைத்து விடும் என்றாலும் எந்தப் பள்ளி அருகில் இருக்கும், பள்ளி வெகு தூரமா என்ற குழப்பங்கள் எல்லாம் நிறையவே இருந்தது.
வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்கும் பள்ளியில் இடம் கிடைத்து விட்டது. காலையில் சென்றோம். கேட் திறக்கப்பட்டது.
1847 ஆம் ஆண்டு ஆரம்பித்த பள்ளி அது. ரிசப்ஷன் சென்றோம். டயானா புருஷன் ராஜா உடையில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு வரவேற்றார்.
பள்ளியின் பி.டி. மிஸ் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு பள்ளியை அங்குலம் அங்குலம் அதை சுற்றிக் காண்பித்தார்.
எல்லா வகுப்பு ஆசிரியர்களுக்கும் யாழினியின் பெயரை உச்சரிப்பதில் சிரமம் இருந்தது. ஒரு சிலர் மிகச் சரியாக உச்சரித்தார்கள். ஒரு சிலர் யாசினி என்று உச்சரித்தார்கள்.
எங்கள் பள்ளியில் படிப்பு இரண்டாம் பட்சம், டிசிப்ளின் தான் முதலில் என்று தெரிவித்தார். அதேபோல கல்ச்சுரல் ஷாக் கண்டிப்பாக இருக்கும்.
அது பற்றி எதுவாக இருந்தாலும் எங்களிடம் தாராளமாகப் பேசலாம் என்பதையும் ஆசிரியர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
ஒரு பெண் ஆசிரியர், கேஷுவலாக மேஜை மேல் உட்கார்ந்துகொண்டு ஸ்டைலாகப் பேசினார். கார் விளம்பரங்களில் புதிய கார் மீது மாடல்கள் ஒய்யாரமாக ஸ்டைலாக உட்கார்ந்தபடி பேசுவார்கள் அல்லவா, அதுபோல பேசினார்.
யாழினி ஒன்பதாவது என்பதால் எந்தெந்த கிளாசுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று வகுப்பெடுத்தார்.
உதாரணத்திற்கு ஜூனியர் பசங்கள் என்றால், அதாவது ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பார்கள். டீச்சர்கள் அவர்களின் வகுப்பு நோக்கிச் செல்ல வேண்டும்.
ஆனால் எட்டாம் வகுப்புக்கு மேலே, டீச்சர்கள் அவருடைய வகுப்பில் இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியருடைய வகுப்புக்குச் செல்ல வேண்டும்.
பி.டி. மிஸ் பள்ளியையும் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்திவிட்டு ரிசப்ஷனுக்கு வந்ததும் ஒரு புக்லட்டை கையில் கொடுத்தார்.
உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த புத்தகத்தில் விடையிருக்கிறது, படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, யூனிபார்ம் வாங்கி தைத்து, யாழினிக்கு அணிவித்து ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வர சொல்லி விட்டார்கள்.
வால்தனங்கள் அதிகமாக செய்வதால் என் அப்பா வடமலை, ஒரு வயதுக்கு முன்னதாகவே, எனக்கு ஆறு வயது ஆகிவிட்டது என்று சொல்லி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அக்கீல் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா பள்ளியில் என்னை சேர்க்க அழைத்துச் சென்றார்.
அது ஐயர் நடத்திய அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. பெரிய வாத்தியார். படையல் போடுவதற்கான பச்சனங்களுக்கு எதிரில் பெரிய புகைப்படத்தில் வெள்ளைத் தாமரையில் சரஸ்வதி சிரித்துக்கொண்டே வீணை மீட்டிக் கொண்டிருந்தார்.
எதிரில் வாழை இலையில் அரிசி கொட்டிப் பரப்பி வைக்கப்பட்டது.
பெரிய வாத்தியார் என்னுடைய பெயரைக் கேட்டார். சொன்னேன். தலையைச் சுற்றி காதைத் தொட சொன்னார். தொட்டேன்.
பக்கத்தில் அமர வைத்து அரிசியில் கைப்பிடித்து அ.. ஆ… என்று எழுத வைத்தார். எழுதினேன். அதையே ஸ்லேட்டில் பல்பத்தை வைத்து எழுத வைத்தார். எழுதினேன். அட்மிஷன் கிராண்டட்.
ஒரு பாக்கெட் ஆரஞ்சு மிட்டாய் கையில் கொடுத்து, வகுப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்க சொன்னார். பெண்கள் பக்கம், ஆண்கள் பக்கம் இன்று இரண்டு லைன்கள். எனக்கு கூச்ச சுபாபவம் காரணமாக ஆண்கள் பக்கம் உட்கார்ந்து கொண்டேன்.
முதல் நாளிலேயே அதிகமாகப் பிள்ளை படிக்க வேண்டும் என்பதால் அட்மிஷன் முடிந்த உடனேயே வகுப்பில் உட்கார வைத்து விட்டார்கள். இங்கே என்னடா வென்றால், ஒரு வாரம் கழித்துப் பள்ளிக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள்.
முதல் நாளே எதுக்கு குழந்தைய உடனே வீட்டுக்கு அனுப்புறீங்க? இன்னைக்கு சாயங்காலம் நாங்களே வந்து கூட்டிட்டு போறோம் என்று சொல்லக்கூடிய கதை எல்லாம் வேலைக்காகாது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு பள்ளி கிடைத்தது என்பதுதான் பெரிய விஷயம். எப்போதும் போல உங்கள் வாழ்த்துகள் வேண்டி…
– பத்திரிகையாளர் ஜாக்கி சேகர்
நன்றி: பேஸ்புக் பதிவு