ஏற்றத் தாழ்வைத் தகர்க்கும் ஆயுதம் தான் கல்வி!

நூல் அறிமுகம் :

“உண்மையான கல்வி என்பது நம் சுற்றத்தை வலிமைப்படுத்துவதிலும், நாம் வாழ்ந்த சூழலிலிருந்து இவ்வுலகை சற்று மேன்மைப்படுத்துவதிலுமே இருக்கிறது”

– ஜோதிபா பூலே

தன்னுடைய 20வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்த ஜோதிபா பூலே, ஒரு நாள் நண்பரின் வேண்டுகோளின் பேரில் அவருடைய வீட்டு விழாவிற்கு செல்லும்போது, அங்கிருந்த ஆதிக்கச் சாதியினரால் அவமானப்படுத்தப்படுகிறார்.

அதை அவர் வீட்டில் சொல்லும்போது அவர் தந்தை, “அவர்கள் உயர்சாதியினர். நீ அங்கு போனது உன் தவறு” என சொல்ல, சமூகத்தின் நிலையையும், தந்தையின் அறியாமையையும் எண்ணி வருந்துகிறார்.

சமூகத்தில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வை தகர்க்கும் ஒரே விஷயம் கல்வி மட்டுமே என முடிவு பண்ணி, 1846ல் மஹர்வாடா எனும் இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பள்ளி ஒன்றை துவக்குகிறார்.

சாவித்திரியின் பள்ளிக்கு ஏன் இவருடைய கதை என்கிறீர்களா?

ஜோதிபாவுக்கும், சாவித்திரிக்கும் அவருடைய 13வது வயதிலேயே (சாவித்திரி பாய் அவர்களுக்கு 9 வயது) திருமணம் ஆகிவிட்டது.

ஜோதி பாவுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் தான் மனைவி சாவித்திரி பாய் பூலேவும், அவருடைய அத்தை சகுணா பாயும். தான் கற்ற கல்வியை மனைவிக்கும் போதித்த அவருக்கு, கல்வி பயில அத்தை சகுணாபாய் பேருதவி புரிந்திருக்கிறார்.

அதனால்தான் ஜோதிபா தான் எழுதிய ‘நிர்மிகச்சா சுத்’ (படைப்பாளரைத் தேடு) புத்தகத்தைத் தன் அத்தைக்கு சமர்ப்பித்துள்ளார்.

அவர்கள் தொடங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பள்ளி உயர்வகுப்பினரால் முடக்கப்பட்டது.

சாதிய அடுக்குகளில், பெண்கள் எந்த சாதியில் இருந்தாலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே இருக்கின்றனர். பெண்கள் எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என இங்கு எழுதப்படாத சட்டங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆணாதிக்கம் ஒரு பக்கம், சாதிய ஒடுக்குமுறைகள் மறுபக்கம் என பெண்கள் சிக்கித் தவிக்கின்றனர். முதலில் பெண்கள் விடுதலை பெற வேண்டும்.

அதற்கு அவர்கள் கல்வி பெற வேண்டும் என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி, பெண்களுக்கான பள்ளியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் ஜோதிபா. தன் செயல்களால் மக்களால் முதன்முதலாக மகாத்மா என அழைக்கப்பட்டவர்.

அஹமதாபாத்தில் மிஸ்.பரார் எனும் ஆங்கிலேயேப் பெண் (கிறித்துவ மிஷினரிகளால் கல்வி சார்ந்து செயல்பட அனுப்பப்பட்ட முதல் பெண்) நடத்தி வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியில், தன்னுடைய ஆசிரியர் பயிற்சியைப் பெற்ற சாவித்திரி பாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆகிறார். சாவித்திரி பாய் இரண்டு முறை ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்கிறார்.

இவர் ஆசிரியராகப் பொறுப்பேற்று அதில் அடைந்த இன்னல்கள் அனைத்தும் இந்நாள் குழந்தைகள் அனைவரும் அறிய வேண்டிய வரலாறு.

மற்ற பள்ளிகளில் சமயம் சார்ந்து கல்வி போதிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில்,இவர்கள் பள்ளியில் சமூகநீதி அடிப்படையில் கல்வி வழங்கப்பட்டது.

நம் நாட்டில் இன்றைக்குமே கோரிக்கையாக உள்ள கல்வி சம்பந்தப்பட்ட பல விஷயங்களை அப்போதே செயல்படுத்திக்காட்டியுள்ளனர்.

தொடர்ந்து மேல்வகுப்பினரால் துன்புறுத்தப்பட்ட இத்தம்பதியினர், ஒஸ்மான் சேக் எனும் நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுகின்றனர். அவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை பள்ளி நடத்த அனுமதி கொடுக்கிறார்.

இங்குதான் ஃபாத்திமாவின் நட்பு சாவித்திரிக்கு கிடைக்கிறது. இருவரும் இணைந்து சமூக மேம்பாட்டிற்கு நிறைய சேவைகளை செய்துள்ளார். அதில் ஒன்று ‘பேட்டி படோ!’ (மகளே படி) என்ற இயக்கம். வீடுதோறும் சென்று கல்வியின் தேவையை பெண்களுக்கு உணர்த்துவது இவர்களது வேலையாக இருந்துள்ளது.

தாராபாய், ஃபாத்திமா ஆகியோர் சாவித்திரி பாயுடன் இணைந்து சமூக மேம்பாட்டிற்கு உழைத்துள்ளனர்.

உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க இவர்கள் செய்த செயலை புத்தகத்தில் நீங்களே படித்து அறியுங்கள்.

*******************

நூலாசிரியர் பிரபு பற்றி :

சொந்த ஊர் தஞ்சாவூர். லண்டனில் வசித்து வருகிறார். பஞ்சுமிட்டாய் சிறார் இதழ், பஞ்சுமிட்டாய் இணையதளம், கதை சொல்லி என தொடர்ந்து பயணித்து வரும் இவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும் உள்ளார்.

இந்நூலுக்கு முன்னர், ‘எனக்கு பிடிச்ச கலரு’, ‘எலக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்’ ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார்.

*****

நூல் : சாவித்திரியின் பள்ளி
ஆசிரியர் : ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
பக்கங்கள் : 64
வெளியீடு : ஓங்கில் கூட்டம்
ஓவியம் : சுந்தரன் முருகேசன்
விலை : 57/-

You might also like