பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்குப் பிறகு மிகவும் சீரியசான கதைகளில் மட்டுமே நடிப்பார் என்று எதிர்பார்ப்புக்கு ஆளானார் நடிகர் கார்த்தி. அதிலிருந்து வெகுவாக விலகி நின்று ஆச்சர்யம் தந்தது, லிங்குசாமியின் ‘பையா’.
மேற்சொன்ன மூன்று படங்களிலும் சண்டைக்காட்சிகளில் அவர் பிரமாதப்படுத்திருந்தார். ஆனாலும், அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த படம் ‘நான் மகான் அல்ல’.
அந்த வரவேற்பை முன்கூட்டியே கணித்தாற்போல, அப்படத்தில் அவரது பாத்திரத்தை வடிவமைத்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.
‘மூணு படம் ஜெயிச்சாலும், இந்த படம் தோத்தா அவ்வளவுதான்’ என்று திரையுலகில் ஒரு கூட்டம் உற்றுக் கவனித்த நேரத்தில், ‘திட்டமிடலும் செயலாக்கமும் மிகச்சிறப்பாக இருந்தால் வெற்றி உறுதி’ என்று களமிறங்கியது ‘நான் மகான் அல்ல’ குழு. அதற்கேற்ப பெருங்கவனிப்பையும் பெற்றது.
இன்றோடு அப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.
யதார்த்த சினிமா!
பாடல், ஆட்டம், சண்டை போன்றவற்றை இடம்பெறச் செய்தாலே, ஒரு திரைக்கதையை ‘யதார்த்தம்’ என்ற வரையறைக்குள் அடக்க முடியாது. அதையும் மீறிச் சில பாத்திரங்களின் பேச்சு, உடல்மொழி மற்றும் காட்சியமைப்பில் ‘நிஜம்’ போல உணரச் செய்வது மிக அற்புதமான உத்தி.
அதிலும், முழுமையானதொரு கமர்ஷியல் திரைப்படத்தில் அந்த உத்தியைப் பயன்படுத்துவதற்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும்.
அப்படியொன்றைச் சாதித்திருந்தார் இயக்குநர் சுசீந்திரன்.
தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.
இதில் தந்தை மகனாக ஜெயபிரகாஷும் கார்த்தியும் நடித்திருந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தென்பட்ட இயல்புத் தன்மை ரசிகர்களை எளிதாக ஆட்கொண்டது.
அது மட்டுமல்லாமல், சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைப் பிரதிபலிப்பதாக அவர்களது இருப்பு அப்படத்தில் தெரிந்தது.
இதில் கார்த்தியின் தாயாக லட்சுமி ராமகிருஷ்ணனும் தங்கையாக பிரியா அட்லீயும் நடித்திருந்தனர். நால்வர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் ஹைலைட்டாக இருந்தன.
போலவே, கார்த்தி தனது நண்பர்களோடு அரட்டையடிப்பதாக, சேட்டை செய்வதாக அமைந்த காட்சிகளும் ரசிகர்களை ஈர்த்தன. இப்படத்தில் கார்த்தியின் அறிமுகம்கூட அப்படியொன்றாகவே இருக்கும்.
இதில், கார்த்தியின் நண்பர்களாக சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். அக்காட்சிகளிலும் கூட பெரிதாகச் சினிமாத்தனம் தெரியாது.
இறுதியாக, நாயகி காஜல் அகர்வால், கார்த்தி பாத்திரங்கள் காதலில் விழும் காட்சி அருமையாக அமைந்திருந்தன.
நாயகனின் தோழியாக நீலிமா ராணியும், நாயகியின் தோழியாக மிஷா கோஷலும் காட்டப்பட்டிருந்த விதம், அது போன்ற பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குப் பெரிதாக நம்பிக்கை தந்தது.
மிரள வைத்த ‘சண்டைக் காட்சிகள்’
‘நான் மகான் அல்ல’ படத்தின் சிறப்பம்சமாக இருந்தது வில்லன்களாக வரும் வினோத் கிஷன், தஞ்சை மகேந்திரன் மற்றும் அவர்களோடு வரும் இரண்டு இளைஞர்கள்.
அவர்களைப் படத்தில் காட்டிய விதம் மண்டைக்குள் பெயர் தெரியாத பூச்சியொன்று ஊர்வதைப் போன்ற அனுபவத்தைத் தந்தது.
‘சதுரங்க வேட்டை’யில் பெரும் பெயரைப் பெற்ற ராமச்சந்திரன் துரைராஜ் இப்படத்தில்தான் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
ஒளிப்பதிவாளராக இருந்த அருள் தாஸ் முழுநேர நடிகராக மாறுவதற்கு ‘தென்மேற்கு பருவக்காற்று’ முன்னரே பிள்ளையார் சுழி இட்ட படம் இது.
இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளை அனல் அரசு வடிவமைத்திருந்தார்.
வழக்கமாக ஹீரோவோடு வில்லன் எப்படி மோதுவாரோ அவ்வாறில்லாமல், நாயகனை இந்த இளைஞர் கூட்டம் சுற்றி வளைக்கும் காட்சியை வடிவமைத்திருந்தார்.
அந்த இளைஞர்களை விட நாயகனை வலிமையானவர்களாகக் காட்டினாலும், அவர்களது உத்திகள் கணிக்க முடியாததாக இருப்பதாகக் காட்டியிருந்தார்.
விலங்குகள் குறித்த ஆவணப்படங்களில் ஒரு சிங்கத்தை சில ஓநாய்கள் சுற்றி வளைத்து தாக்கினால், குயுக்திகளைப் பயன்படுத்தினால் எப்படி உணர்வோம். அதே போன்றதொரு உணர்வை இதில் தந்திருந்தார் அனல் அரசு.
சுசீந்திரன் தந்த அதிர்ச்சி!
‘வெண்ணிலா கபடிக் குழு’வுக்குப் பிறகு மென்மையான இன்னொரு காதல் கதையைத் தருவார் என்று சுசீந்திரன் மீது திரையுலகமும் ரசிகர் கூட்டமும் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், ‘இது வேற மாதிரி இருக்கும்’ என்று அவர் ‘நான் மகான் அல்ல’ தந்தார்.
அது அதிர்ச்சியை விட ஆச்சர்யத்தையே அதிகமாக விதைத்தது.
மதியின் ஒளிப்பதிவு, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு, ராஜீவனின் கலை வடிவமைப்பு ஆகியன இப்படத்தின் காட்சியாக்கத்தைத் தூண்களாகத் தாங்கின.
அனைத்துக்கும் மேலே யுவன்சங்கர் ராஜாவின் இசை ‘நான் மகான் அல்ல’வின் உயரத்தை மேலும் உயர்த்தியது.
‘வா வா நிலவை பிடிச்சி’, ‘தெய்வம் இல்லை’ பாடல்களைத் தாண்டி ‘இறகைப் போல அலைகிறேனே’ பாடல் அப்போதைய இளம் தலைமுறையின் பொழுதுகளை ஆக்கிரமித்தது.
அதே மாயாஜாலத்தை பின்னணி இசையிலும் யுவன் நிகழ்த்தியிருந்தார்.
ஒரு திரைப்படத்திற்குரிய கூறுகள் நிறைந்திருந்தாலும் கூட, ’நான் மகான் அல்ல’ பார்க்கும்போது அதிலிருக்கும் பாத்திரங்களை நேரில் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. முன்பாதியைப் பார்த்தபோது உண்டான நெகிழ்ச்சி, பின்பாதியில் இருந்த சண்டைக் காட்சிகளின்போது பயத்தை உருவாக்குவதாக அமைந்தது.
அதனைக் காணச் சகிக்காமல், முன்பாதியோடு சிலர் தியேட்டரை விட்டு வெளியேறியதும் நிகழ்ந்தது. அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்தது.
அனைத்துக்கும் மேலே, ‘எங்கே விளிம்புநிலை மனிதர்களாகவே படத்தில் தோன்றுவாரோ’ என்று நினைக்க வைத்த கார்த்தியை ‘நம்ம வீட்டுப் பையனாக’ உணரச் செய்தது ‘நான் மகான் அல்ல’.
‘கொம்பன்’, ‘கைதி’ படங்களில் அப்படியொரு இயல்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, இது போன்றதொரு ‘லவ்வர் பாய்’ ஆக அப்படங்கள் இல்லை.
அப்படியொரு இமேஜ் தனக்கு வேண்டும் என்று சுசீந்திரனை இயக்குநராகத் தேர்வு செய்த கார்த்தி, பின்னாட்களில் அது போன்றதொரு கதையைத் தேர்ந்தெடுக்காமல் போனது நிச்சயம் வருத்தம் தரும் விஷயம்.
குறைந்தபட்சமாக, ‘நான் மகான் அல்ல’ படத்தை கார்த்தியோ, சுசீந்திரனோ மீண்டும் காண நேர்ந்தால், நமக்கு அதன் நிழலைப் போன்றதொரு திரை பிம்பம் இன்னொரு திரைப்படமாகக் கிடைக்கலாம்.
நிஜத்தில் அது நிகழுமா?
– மாபா