வயநாடு மண்சரிவைத் தொடர்ந்து முண்டக்கை பகுதியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தில் மேஜர் சீதா ஷெல்கே என்ற பெண் இராணுவப் பொறியியலாளர் வெற்றியுடன் நிற்பதுபோன்ற புகைப்படம் வைலாகி வருகிறது.
வயநாடு மீட்பு நடவடிக்கையில், சீதா ஷெல்கே தலைமையில் உருவாக்கப்பட்ட பெய்லி பாலத்தை கட்டுவதில் அவரது பங்களிப்பு அபாரமானது என்பதாலேயே இந்தளவுக்கு பேசப்படுகிறது.
மேஜர் சீதா அசோக் ஷெல்கே, மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் பர்னர் தாலுகாவில் உள்ள காதில்காவ் என்ற சிறிய கிராமத்தில் இருந்து ராணுவத்தில் சேர்ந்தார்.
600 பேர் மட்டுமே வசிக்கும் காதில்காவ் கிராமத்திலிருந்து சென்று அகமதுநகரில் உள்ள லோனியில் உள்ள பிரவாரா ரூரல் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த பிறகு ராணுவத்தில் சேர்ந்தார் ஷெல்கே.
ஆரம்பத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டு, நாளடைவில் அதுவே ராணுவப் பணியாக மாறி தனது மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார். இறுதியில் 2012 இல் இராணுவத்தில் சேர்ந்தார்.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) தனது பயிற்சியை முடித்த மேஜர் சீதா அசோக் ஷெல்கே, பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில், இராணுவ மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுவைச் சேர்ந்த 250 வீரர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்கினார்.
இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.
கனமழை மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்பாலத்தில் மீட்புப் பணிகளுக்கு அத்தியாவசியமான வாகனங்கள் இயங்கவும் தொடங்கியுள்ளது. இது அடுத்தகட்ட மீட்புப் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.
இக்கட்டான சூழலில் மீட்பு நடவடிக்கைக்கு ஏதுவாக செயல்பட்ட அசோக் ஷெல்கேவின் அர்ப்பணிப்பான பணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.