நகைச்சுவை நடிகனாக அறிமுகமான ஒருவர் குணசித்திர பாத்திரங்களில் சோபித்து, மெல்ல நாயக நாற்காலி நோக்கி நகர்வது புதிய விஷயமல்ல. உலகின் எல்லா மூலையிலும் அப்படியொரு நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
டி.ஆர்.ராமச்சந்திரன், சந்திரபாபு, நாகேஷ் தொடங்கி கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி என்று தமிழ் திரையுலகில் அப்படியொரு சிறப்பைப் பெற்றவர்களைத் தனியாகப் பட்டியல் இடலாம். தெலுங்கு, மலையாளத் திரையுலகில் அந்த எண்ணிக்கை இன்னும் பெரியது.
மலையாளத்தில் அப்படிச் சமீபகாலமாகப் பல ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டிருப்பவர் சூரஜ் வெஞ்சாரமூடு. ஒன்றுக்கொன்று வேறுபட்ட பல பாத்திரங்களை மிக இயல்பாகத் திரையில் வெளிப்படுத்துபவர்.
அப்படிப்பட்டவர் ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார் எனும்போது நமது எதிர்பார்ப்பு பன்மடங்காகும் அல்லவா? அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ குழு.
ஆறு எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸ், தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் தலா 35 நிமிடங்கள் கால அளவைக் கொண்டவை.
நிதின் ரெஞ்சி பணிக்கர் இதனைத் தயாரித்து இயக்கியுள்ளார். ரஞ்சின் ராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.
சரி, எப்படியிருக்கிறது ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’?!
அப்பாவி செய்த காரியம்!
எழுபதுகளில் நிகழ்வது போன்று ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ரொம்பவே சிறிய ஊர் ஒன்றில் பிறந்த நாகேந்திரனுக்கு (சூரஜ் வெஞ்சாரமூடு) தாய் மட்டுமே ஒரே ஆதரவு. எந்த வேலையும் செய்யாத, அதனை விரும்பாதவராக அவர் இருக்கிறார்.
தாய் நானியம்மா (பானுமதி) தான் அவருக்காகக் கூலி வேலை பார்த்துச் சம்பாதிக்கிறார். ஒரு திருமணம் ஆனால் நாகேந்திரனின் இயல்பு மாறிவிடும் என்பது அந்தத் தாயின் எண்ணம்.
தனது அண்ணன் மகள் ஜானகியை (ஆல்பி பஞ்சிகரன்) மகனுக்கு மணம் முடிப்பதே அவரது லட்சியம். ஆனால், நாகேந்திரனுக்கோ அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ‘சோறு கண்ட இடமே சொர்க்கம்’ என்பது அவரது பாதை.
நாகேந்திரனை உள்ளங்கையில் வைத்து தாங்கக்கூடிய நண்பராக இருக்கிறார் சோமன் (பிரசாந்த் அலெக்சாண்டர்). பால்காரர் ஆக வேலை செய்தாலும் நாடக நடிப்பு, ஊரிலுள்ள விலை மாதுவுடன் சகவாசம், போதாக்குறைக்கு மது போதை என்றிருக்கிறார். அவருடனே சதா சர்வகாலமும் சுற்றும் நாகேந்திரனுக்கு அவற்றில் ஒன்று கூட உவப்பானது அல்ல.
ஒருநாள் குவைத்தில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பால்ய நண்பன் பௌலோஸை (ரமேஷ் பிஷரோடி) இருவரும் சந்திக்கின்றனர்.
நண்பனின் வாழ்க்கை மாற்றத்தைக் கண்டவர்கள், அது போன்றதொரு வாழ்வு நமக்கும் வாய்க்காதா என்று ஏங்குகின்றனர். நாகேந்திரனுக்கு அதற்கான வாய்ப்பு கனிகிறது.
ஒருமுறை விலைமாதுவின் வீட்டில் இருக்கும் பௌலோஸை பெரிய பணக்காரர் ஒருவர் கொல்ல வர, அங்கிருந்து அவரைத் தப்பிக்க வைக்கிறார் நாகேந்திரன்.
அதற்கான நன்றியாக, நாகேந்திரனுக்கு குவைத்தில் தான் செய்த முதலாளியிடமே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறார் பௌலோஸ். ’அதற்கான விசாவைத் தயார் செய்ய மட்டும் பதினாறாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும்’ என்கிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் நாகேந்திரன் சோமனிடம் ‘ஐடியா’ கேட்கிறார். அவரோ, ‘உன்னோட மாமன் பொண்ணை கட்டிக்கோ; வரதட்சணைய வாங்கிட்டு எஸ்கேப் ஆகிடு’ என்கிறார். அவ்வாறே செய்கிறார் நாகேந்திரன்.
ஆனால், திருமணமான சில மணி நேரங்களிலேயே ஜானகியின் வீட்டில் வரதட்சணை எதுவும் கொடுக்க இயலாது என்ற உண்மை தெரிய வருகிறது. அதனைக் கேட்டதும், என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்துப் போகிறார் நாகேந்திரன்.
அந்தச் சூழலில், முகம் தெரியாத ஒரு ஊருக்குச் சென்று அனாதரவான பெண்ணொருத்தியைத் திருமணம் செய்து, வரதட்சணையாக்க் கொடுக்கும் பணத்தையும் நகையையும் கொண்டு குவைத் பயணத்தை மேற்கொள்ளலாம் என்கிறார் சோமன். நாகேந்திரனும் அதற்குத் தயார் ஆகிறார்.
ஆனால், அவர்களது திட்டம் எதுவுமே நிறைவேறுவதாக இல்லை. அடுத்தடுத்து லில்லி (கிரேஸி ஆண்டனி), லைலா சுல்தானா (ஸ்வேதா மேனன்), சாவித்திரி (நிரஞ்சனா அனூப்), தங்கம் (கனி குஸ்ருதி) ஆகிய நான்கு பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுகிறார் நாகேந்திரன்.
அவர்களிடம் இருந்து கொஞ்சம் பணத்தையும் நகைகளையும் ‘அபேஸ்’ செய்கிறார். மனநல பாதிப்புக்குள்ளானவர், கொலைக் குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர், வேறொரு ஆணால் கர்ப்பமுற்றவர், விலைமாது என்று அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பின்னணியைக் கொண்டவர்கள்.
ஐந்து பேரைத் திருமணம் செய்தபிறகு, கேரளாவில் இருந்து நாகேந்திரனைப் பழனிக்கு அழைத்து வருகிறார் சோமன். அங்கு மொழி (அம்மு அபிராமி) என்ற பெண்ணைப் பார்க்கின்றனர் இருவரும்.
அந்தப் பெண்ணின் தந்தை சில மாதங்களில் புற்றுநோயால் இறக்கவிருப்பதாகத் தகவல் வேறு சொல்லப்படுகிறது.
அதுநாள்வரை வெறுமனே விதவிதமான உணவில் மட்டுமே ருசி கொண்டவராக இருந்த நாகேந்திரனுக்கு மொழியைக் கண்டதும் மனம் சஞ்சலமடைகிறது. அந்தப் பெண்ணின் அழகு அவரை வாட்டுகிறது.
‘இந்தப் பெண்ணை என்னால் ஏமாற்ற முடியாது’ என்று சோமனிடம் திட்டவட்டமாகச் சொல்கிறார் நாகேந்திரன். அவரோ, ‘உனக்காகத்தானே இதுவரை இந்த வேலைகளைச் செய்தேன்’ என்கிறார்.
இறுதியில், வேறு வழியில்லாமல் சோமனின் வற்புறுத்தலால் மொழியைத் திருமணம் செய்கிறார் நாகேந்திரன். அன்றிரவு முதன்முறையாக மது அருந்துகிறார்.
நேராக வீட்டுக்குள் சென்று மொழியிடம் நடந்த உண்மைகளை விவரிக்கிறார். அதனைக் கேட்கும் மொழி, ‘இனிமேலாவது மனம் திருந்தி என்னோட சேர்ந்து வாழ்வியா’ என்று கேட்கிறார். அதற்கு ‘சரி’ என்கிறார் நாகேந்திரன்.
அடுத்த நாள் காலையில் அவர் விழித்தெழும்போது, அந்த இடத்தில் எவரும் இல்லை. அவர் கைவசமிருந்த பணமும் நகைகளும் கூட இல்லை.
என்ன நடந்தது? அந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தவிக்கிறார் நாகேந்திரன். அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதோடு முடிவடைகிறது ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’.
’அப்பாவி மாதிரி மூஞ்சை வச்சுகிட்டு என்ன காரியம் பண்ணியிருக்கான் பாத்தியா’ என்ற வசனத்தைப் பழைய தமிழ் திரைப்படங்களில் கேட்டிருப்போம்.
கிட்டத்தட்ட அப்படியொரு முகத்தோடு வலம் வருவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது நாகேந்திரன் பாத்திரம். தலைப்பைக் கண்டதும் நாம் என்ன யோசித்தோமோ, அவற்றில் பெரும்பாலானவை காட்சிகளாக இதில் இடம்பெற்றுள்ளன.
’கிளாசிக்’ நிலையை எட்டியிருக்கலாம்!
சூரஜ் வெஞ்சாரமூடு இதில் பெரும்பாலான காட்சிகளில் தோன்றியிருக்கிறார். ‘இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா’ என்று சொல்லத்தக்க வகையில், ‘இவன் நல்லவனா, கெட்டவனா’ என்று பகுத்தறிய முடியாத விதத்தில் அவரது பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மம்முட்டி, திலீப், வினீத், பிரதாப் போத்தன் உட்படப் பல நடிகர்கள் இது மாதிரியான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட, இப்படியொரு கதையமைப்பில் அவர்கள் தோன்றியதில்லை.
அதனால், ‘அல்வா சாப்பிடுவது போல’ நாகேந்திரனாகத் தோன்றி அதகளம் செய்திருக்கிறார் சூரஜ். வெறுமனே பார்வை, உடல்மொழி மூலமாக அதனைச் சாதித்திருப்பது அற்புதம்.
பிரசாந்த் அலெக்சாண்டருக்கு இதில் குயுக்தி நிறைந்தவராகத் தோன்றும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. மனிதர் அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
மனநல பாதிப்புக்குள்ளானாலும், கல்யாண வேட்கையோடு திரியும் பாத்திரத்தில் கிரேஸி ஆண்டனி.
நம்மூர் மனோரமா, கோவை சரளா வரிசையில் இடம்பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடத்தில் காணக் கிடைக்கின்றன.
கனி குஸ்ருதி இதில் தங்கம் என்ற விலைமாதுவாக நடித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சிகள் அனைத்துமே வழக்கத்திற்கு மாறானவை.
அதே நேரத்தில் வாய்வழியாகச் சொல்லப்படும் பாலியல் கதைகளில் நாம் கேட்கும் ரகத்தில் அமைந்தவை.
அப்படிப்பட்ட காட்சிகளில் அவரது இருப்பு அமைந்தது நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், தொடர்ந்து இப்படிப்பட்ட காட்சியமைப்புகளில் அவர் இடம்பெறுவது ’க்ளிஷே’வாக தெரிகிறது.
அம்மு அபிராமி தனது கண்கள், அப்பாவித்தனமான பாவனைகளால் சட்டென்று ஈர்க்கிறார். கிளைமேக்ஸ் திருப்பத்தை நாம் எதிர்பார்த்தாலும் கூட, அதனை மனதில் மேலெழவிடாமல் பார்த்துக்கொள்கிறது அவரது நடிப்பு.
’ரதி நிர்வேதம்’ ரீமேக் வழியே இளையோரின் மொபைல் திரையை ஆக்கிரமிக்கும் ஸ்வேதா மேனனுக்கு திரைக்கதையில் போதிய இடம் தரப்படவில்லை. நிரஞ்சனா அனூப், ஆல்பி பஞ்சிகரனுக்கும் அதே நிலைதான்.
மூத்த கலைஞர்கள் ஜனார்த்தனன், நானியம்மா போன்றவர்களோடு கலாபவன் சாஜன், ரமேஷ் பிஷ்ரோடி, ஸ்ரீஜித் ரவி, ஷாலின் ஜோயா, ரேஷ்மி போபன், ஸ்ரீகாந்த் முரளி போன்றவர்களோடு தமிழ் நடிகர் அப்புக்குட்டியும் இதில் ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘நான் அவனில்லை’ சாயலில் பல படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளன.
’பல பேரைத் திருமணம் செய்து மோசடி’ எனும் செய்திகளையும் தொடர்ந்து நாம் கண்டு வருகிறோம். ஆண்களை ஏமாற்றும் சில பெண்கள் குறித்தும் அப்படிப்பட்ட செய்திகள் வருவதைக் காண்கிறோம்.
’நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ கூட அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வையே முன்வைக்கிறது. ஆனால், வேறொரு கோணத்தில் சொல்கிறது.
இந்தக் கதையில் நாகேந்திரன் சில பெண்களை ஏமாற்றினாலும், அவர்களது பெண்மையைச் சீர்குலைக்க முயற்சிக்கவில்லை. தன்னளவில் கொஞ்சம் நேர்மையோடு அந்தப் பெண்களைக் கடந்து வருகிறார். அவர்களைப் பெரிய பொருளாதார சீரழிவில் தள்ளவில்லை. போஜனப் பிரியனாக, மகா சோம்பேறியாக, செக்ஸில் சிறிதும் ஆர்வமற்றவராக, அப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நிதின் ரெஞ்சி பணிக்கர்.
இது போன்ற கதைகளில் நாயக பாத்திரத்தைப் பெண்களால் வஞ்சிக்கப்பட்டவராகச் சித்தரிப்பார்கள் சில இயக்குனர்கள். ஆனால், இதில் அது நிகழவில்லை.
மற்றபடி எழுபதுகளின் பின்னணியும், இயற்கை சார்ந்த வாழ்வும், தொழில்நுட்பத்தின் ஆக்டோபஸ் கைகள் படராத வாழ்க்கை முறையும் இதில் நிறைந்திருப்பது ‘பசுமையான காட்சியனுபவத்தை’ தருகின்றன. நிகில் பிரவீன் ஒளிப்பதிவு, அதனைச் சாதித்துக் காட்டுகிறது.
படத்தொகுப்பாளர் மன்சூர் முத்தூட்டி காட்சிகளின் நீளத்தில் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.
கதை நிகழும் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாக உணர்ந்தால் போதுமென்று எண்ணியிருப்பது நன்றாகத் தெரிகிறது.
இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ், பாத்திரங்களின் பாவனைகளைத் தாண்டி தனது இசை மூலம் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கலை வடிவமைப்பு, ஒலிக்கலவை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று இதில் பல தொழில்நுட்ப அம்சங்கள் ஐம்பதாண்டுகளுக்கு முந்தி நிகழ்வதாக அமைந்துள்ள காட்சிகளுக்குப் பலம் சேர்க்கின்றன.
நிதின் ரெஞ்சி பணிக்கர் தனது படைப்பு ஒரு ‘டார்க் ஹ்யூமர்’ வகைமையில் அமைய விரும்பியிருக்கிறார். ஆனால், ’ஆங்காங்கே சிரிக்கிறோம்’ என்பதைத் தவிர அப்படியொரு தன்மை இதில் எங்கேயும் காணக் கிடைக்கவில்லை.
தான் திருமணம் செய்யும் பெண்களால் நாகேந்திரன் அனுபவிக்கும் கஷ்டங்கள் இதில் விலாவாரியாகச் சொல்லப்படாதது அதற்கொரு காரணம்.
போலவே, ‘எப்படிய்யா இவங்க ரெண்டு பேரையும் பொண்ணுவீட்டுக்காரங்க நம்புறாங்க’ என்ற கேள்விக்கும் திரைக்கதையில் பதில் இல்லை.
முக்கியமாக, ‘இந்த அப்பாவி அடப்பாவியா ஆயிட்டானே’ என்று விழிகள் விரிக்கும்விதமான சம்பவங்கள் இதில் கிடையாது.
மேற்சொன்னது போன்ற குறைகளைத் தவிர்த்துவிட்டால் சூரஜ் மற்றும் பிரசாந்தின் ‘அடிபொலி’ நடிப்புக்காக மட்டும் இந்த ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ சீரிஸை ரசிக்கலாம்!
-உதயசங்கரன் பாடகலிங்கம்