தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரே துறையாக செயல்பட்டு வந்த வேளாண்மை துறை, விவசாயிகளின் நலன் கருதியும், பயிர் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், அதன் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தி விடலாம் என்ற நோக்கத்தில்
வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, விதை சான்றிப்புத் துறை, அங்கக வேளாண்மை துறை என 2007 ஆண்டுக்கு பின் பிhpக்கப்பட்டது. அவ்வாறு துறைகள் பிரிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்த நிலையிலம் அதன் நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை.
2022 – 23 ஆண்டு புள்ளியியல் துறை தரவுகளின் படி, தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 59 லட்சம் ஹெக்டேர். இதில் சுமார் 49 லட்சம் ஹெக்டேர் வேளாண்மை துறை உணவு தானிய பயிர் பரப்பாகவும், சுமார் 10 லட்சம் ஹெக்டேர் மட்டுமே தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் சாகுபடி பரப்பாகவும் உள்ளது.
2008–ல் சுமார் 6,75,000 ஹெக்டேர் ஆக இருந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு, தோட்டக்கலைத் துறை தனியாக பிரிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும், 2023–ல் சுமார் 5,89,000 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக குறைந்து உள்ளது.
அதே சமயம் 2007 – 08 –ல் சுமார் 4853 இலட்சமும், 2021 – 22–ல் சுமார் 202418 இலட்சமும் தோட்டக்கலைத்துறை மூலம் நிதி செலவாகியுள்ளது. ஆனால், துறை பிரிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை.
கர்நாடக மாநிலத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 80 % தோட்டக்கலை பயிர்களும், 20 % உணவு தானிய பயிர்களும் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 85 % உணவு தானிய பயிர்;களும், 15 % தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்படி 15 % சாகுபடி பரப்பிற்கு ஒரு தனித்துறையை ஏற்படுத்தி, அதில் 1 இயக்குனர், 2 கூடுதல் இயக்குனர்கள், 6 இணை இயக்குனர்கள், 43 துணை இயக்குனர்கள், 398 உதவி இயக்குனர்கள், 566 தோட்டக்கலை அலுவலர்கள், 1674 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 2694 தொழில் நுட்ப அலுவலர்கள் உள்ளனர்.
வேளாண் விற்பனை துறையில் 1 இயக்குனர், 1 துணை இயக்குனர், 3 இணை இயக்குனர்கள், 40 துணை இயக்குனர்கள், 19 உதவி இயக்குனர்கள், 217 வேளாண்மை அலுவலர்கள், 627 உதவி வேளாண்மை அலுவலர்கள் என மொத்தம் 907 தொழில் நுட்ப அலுவர்கள் உள்ளனர்.
விதை சான்றளிப்பு துறையில் 2 இணை இயக்குனர்கள், 16 துணை இயக்குனர்கள், 37 உதவி இயக்குனர்கள், 240 வேளாண்மை அலுவலர்களும் உள்ளனர். அங்கக வேளாண்மைக்கு சுமார் 50 வேளாண்மை அலுவலர்கள் உள்ளனர்.
இவ்வாறு துறை தனித்தனியே பிரிக்கப்பட்டதால், அலுவலர்களின் எண்ணிக்கையும், அலுவலகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
அதனால் ஒரு அலுவலகம் 9 அலுவலகங்களாக பிரிந்து 9 இடங்களில் வாடகை கட்டிடத்தில் மேலாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், எழுத்தர், தட்டச்;சர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மற்றும் வாகனங்கள் (ஜீப்) என்று உயர்ந்து அலுவலர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மட்டுமே உயர்ந்துள்ளது.
விவசாயிகள் வாழ்வு உயரவில்லை. விவசாயிகளில் வேளாண்மை துறை பயிர் விவசாயி என்றோ, தோட்டக்கலைத் துறை பயிர் விவசாயி என்றோ, வேளாண் வணிகத்துறை விவசாயி என்றோ, விதை சான்றளிப்புத் துறை விவசாயி என்றோ தனித்தனியாக இல்லை.
அனைத்துப் பயிர்களையும் ஒரே விவசாயி தான் உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகிறார். ஆனால், அந்த ஒரே விவசாயி இவ்வாறு பல துறை அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து, அரசு திட்டங்களை பெறுவதில் மிகுந்த சிரமப்பட்டு துன்பம் அடைகிறார்.
மத்திய, மாநில அரசுகள் வேளாண்மை உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் 80 % அலுவலக கட்டமைப்புகள், அலுவலர்களின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கே செலவாகிறது. மீதி 20 % மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
எனவே தமிழக அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, விதை சான்றளிப்புத் துறை, அங்கக வேளாண்மை என உள்ள அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரே வேளாண்மை துறையாக கட்டமைத்து, அரசு வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி விவசாயிகளுக்கு அதிக அளவில் கிடைக்குமாறு ஆவண செய்ய வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய வழிக்காட்டுதலுடன், மாண்புமினு தமிழக வேளாண்மை அமைச்சர் அவர்கள் தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு,
அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளின் கருத்தை கேட்டு அதனடிப்படையில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டமன்றத்தில் 21.03.2023 அன்று தாக்கல் செய்தது.
அறிவிக்கை எண் – 16–ன் மூலம் விவசாய சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய நான்கு துறைகள் அலுவலர்களை ஒருங்கிணைத்து, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற திட்டத்தை அறிவித்து,
இத்திட்டத்தின் மூலம் அல்லது 4 வருவாய் கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவார் என அறிவித்து, தமிழக விவசாயிகள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியினை கொடுத்தது.
அதை தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை எண் – 230 நாள் – 30.10.2023 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் இதுநாள் வரை செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை 01.07.2024 முதல் செயல்படுத்த எதிர்வரும் வேளாண்மை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகளை மட்டும் உற்பத்தி செய்து வழங்கி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ளது போல்; விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 5,000/- உற்பத்தி ஊக்குவிப்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டுகிறோம்.
அந்த உற்பத்தி ஊக்குவிப்பு மானியத்தைக் கொண்டு, விவசாயி தனக்குத் தேவையான இடுபொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
பயிர் சாகுபடி, உற்பத்தி, அறுவடை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்கள் மட்டுமே வேளாண்மை விரிவாக்க அலுவலர்களைக் கொண்டு நேரடியாக விவசாயிகளின் களத்தில் வழங்கிட வாய்ப்பு ஏற்படும்.
தற்போது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் அறுவடை முடிந்த பின்பு இடுபொருள்கள் விவசாய கிடங்கிற்கு வருகிறது.
இதனால் திரவ உயிர் உரங்கள் உட்பட அனைத்து இடுபொருள்களும், காலவதியாகி உரிய காலத்தில் விவசாயிகளால் பயன்படுத்த இயலாமல், அரசின் நிதி பயனற்றுப் போகிறது.
எனவே, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் காலநிலை, பயிர்களின் பருவநிலை மண் வகைப்பாடு, தண்ணீர் தேவை ஆகிறவற்றின் அடிப்படையில் சீரான பயிர்த் திட்டத்தை வடிவமைத்து, அதற்கான தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, சாகுபடி தொழில் நுட்பங்களை கள அளவில் வழங்கி, விற்பனைக்குரிய தளத்தையும், முறையாக கட்டமைத்து,
இவை அனைத்தையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் நாட்டின் வேளாண்மை பொருளாதாரமும் மேம்படும். தமிழக அரசு அவை அனைத்தையும் ஆய்வு செய்து திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள வேளாண்மை கல்லூரிகளில் நகரத்தில் படிக்கின்ற வேளாண்மைக்கு தொடர்பில்லாத மாணவ, மாணவிகளின் சேர்க்கை என்பது மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால் வேளாண்மை படித்து வேளாண்மை செய்யக்கூடிய கிராமத்து மாணவ மாணவியர்களின் கல்லூரி சேர்க்கைக்கு சிறப்பு முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
பல ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா இல்லை. இவர்களையும் மேற்கண்ட திட்டங்களில் பயனடைய சேர்த்துக் கொள்வதோடு உடனடியாக பட்டா வழங்கி வாழ்வாதாரம் காப்பற்றப்பட வேண்டும்.
இதேபோல் பல முக்கியமான கோரிக்கைகளை தீர்க்கக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக 21.06.2024 அன்று சென்னையில் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பு பத்திரிகையாளர் சங்கத்தில் நடைப்பெற்றது.
மாலை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்களை நேரடியாக சந்தித்து நீண்ட நேரம் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
– எம்.எஸ். செல்வராஜ்