சந்து சாம்பியன் – மறந்துபோன ஒரு சாதனையாளரின் வாழ்க்கை!

விளையாட்டை மையப்படுத்திப் படமெடுப்பதும், ஒரு சாதனையாளரின் வாழ்வைக் காட்சிப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட படக்குழுவினரை சிரமத்தில் ஆழ்த்தும் அனுபவங்களைக் கொண்டது.

அப்படியிருக்க, நாட்டு மக்கள் பலருக்கு அறிமுகமில்லாத, அதேநேரத்தில் காலத்தின் ஓட்டத்தில் மக்களால் மறக்கப்பட்ட ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளைத் திரைப்படம் ஆக்குவதென்பது மிகப்பெரிய சவால்.

அதனைத் திறம்படச் சாதித்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது ‘சந்து சாம்பியன்’ பட ட்ரெய்லர்.

கார்த்திக் ஆர்யன், விஜய் ராஸ், புவன் அரோரா, யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பிரீதம் இசையமைத்துள்ளார். கபீர்கான் இதனை இயக்கியிருக்கிறார்.

முரளிகாந்த் பேத்கர் எனும் முன்னாள் ராணுவ வீரரின் வாழ்வைச் சொல்கிறது சொன்னது ‘சந்து சாம்பியன்’.

அவர் நாட்டுக்காகக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றதையும், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் பிரிவில் கலந்துகொண்டதையும் உணர்த்தியது இதன் ட்ரெய்லர்.

அதுவே, அவரது வாழ்க்கை நிகழ்வுகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கையைத் தூண்டியது.

சரி, இந்தப் படம் எப்படியிருக்கிறது?

தோத்தாங்குளியின் கதையல்ல..!

ஒருவர் வெற்றியடைவதை முன்கூட்டியே உணர்த்த ‘வீரன்’ உள்ளிட்ட பல சொற்கள் பயன்படுத்தப்படும். அதேபோல, எப்போதும் தோல்வியுறுபவனைத் தோத்தாக்குளி என்பார்கள்.

அந்த வகையில், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படும் முரளிகாந்த் பேத்கரின் சிறு வயது வாழ்வைச் சொல்வதில் இருந்து ‘சந்து சாம்பியன்’ திரைக்கதை தொடங்குகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சங்கிலி எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் முரளிகாந்த் பேத்கர். அவரது தந்தை அந்த ஊரில் ஒரு தையல் கடை நடத்துகிறார்.

சிறு வயதில், ஒருநாள் மூத்த சகோதரருடன் சேர்ந்து அருகிலுள்ள ரயில் நிலையமொன்றுக்குச் செல்கிறார் முரளிகாந்த். அப்போது, குஸ்தி போட்டியொன்றில் கலந்துகொண்டு வெற்றியடைந்த ஒரு வீரருக்கு அவரது கிராமத்தினர் தரும் வரவேற்பைக் காண்கிறார்.

அதனைக் கண்டதும், நாட்டின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதன் மூலமாகத் தனக்கும் அப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் முரளிகாந்த். ஆனால், அதனை ஊரார் கிண்டலடிக்கின்றனர்.

ரொம்பவே பிரயத்தனப்பட்டு, அந்த ஊரில் மல்யுத்தம் கற்றுத்தரும் இடத்தில் பயிற்சியில் சேர்கிறார் முரளிகாந்த். அங்கு, அவருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படாவிட்டாலும், ‘நான் ஒரு மல்யுத்த வீரன்’ என்ற எண்ணம் மட்டும் அவரிடத்தில் புகுந்து கொள்கிறது.

சில ஆண்டுகள் கழித்து, பதின்ம வயதில் ஒருநாள் மல்யுத்த ஆசிரியரின் உறவினர் மகனோடு நடக்கும் மோதலில் கலந்துகொள்கிறார் முரளிகாந்த். ஒரு தேர்ந்த வீரனைப் போல, எதிரில் விளையாடும் அந்த நபரைப் பந்தாடுகிறார்.

மல்யுத்த ஆசிரியருக்கு மயக்கம் வராத குறை. அந்த வீரரின் தந்தைக்கோ ரத்தக்கொதிப்பே வந்துவிடுகிறது. அதனால், இரண்டு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்படுகிறது.

தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, அன்றைய தினம் ரயில் ஏறித் தப்பிக்கிறார் முரளிகாந்த். ரயிலில் அறிமுகமாகும் கர்னைல் சிங் (புவன் அரோரா) மூலமாக ராணுவத்தில் சேர்கிறார் முரளிகாந்த்.

அங்கு படைத்தலைவராக இருக்கும் உத்தம் சிங் (யஷ்பால் சர்மா) மூலமாக, குத்துச்சண்டை பயிற்சியாளராக விளங்கும் இன்னொரு ராணுவ அதிகாரியான டைகர் அலியிடம் (விஜய் ராஸ்) அறிமுகமாகிறார்.

டைகர் தரும் பயிற்சியினால் சிறந்த குத்துச்சண்டை வீரராக உருவெடுக்கிறார் முரளிகாந்த்.

ஜப்பானில் நடைபெறும் ராணுவ வீரர்களுக்கான சர்வதேசப் போட்டியில், குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கம் பெறுகிறார். அதில் தங்கப்பதக்கம் வெல்லாத காரணத்தால் டைகர் அலி அவரிடம் கோபித்துக் கொள்கிறார்.

இந்தச் சூழலில், 1965ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலில் பலத்த காயமடைகிறார் முரளிகாந்த். உடலில் ஒன்பது குண்டுகள் பாய்ந்தும் அவர் உயிர் பிழைக்கிறார். ஆனால், இடுப்புக்கீழ் கால்களை அசைக்க முடியாத நிலைமை.

சில ஆண்டுகள் கழித்து, புனே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முரளிகாந்த்.

உடலும் மனமும் தளர்ந்த நிலையில் இருகும் அவரை மீண்டும் சந்திக்கிறார் டைகர் அலி.

இந்த முறை அவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் ஆகலாம் என்று ஊக்கப்படுத்துகிறார்.

டைகர் சொன்னபடி முரளிகாந்த் பாரா ஒலிம்பிக் சாம்பியன் ஆனாரா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘சந்து சாம்பியன்’ படத்தின் மீதி.

பிளாஷ்பேக் நிகழ்வுகள் படம் முழுக்க வந்துபோனாலும், 2017இல் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியே திரைக்கதை தொடங்குகிறது.

தலை நரைத்து, தோல் சுருங்கி, தளர்ந்த குரலில் பேசும் முரளிகாந்த் தனது பேரனுடன் காவல் நிலையத்திற்கு வருவதையும், அங்கு முன்னாள் குடியரசுத்தலைவர்கள் மீது அவர் புகார் அளிக்க முன்வருவதையும் காட்டுகிறது.

முன்னாள் விளையாட்டு வீரரான தனக்கு ‘அர்ஜுனா விருது’ வழங்கப்படவில்லை என்பதே அவர் தரும் புகாரின் அடிநாதமாக இருக்கிறது.

அந்த விருது தனக்குக் கிடைத்தால், தான் சார்ந்த கிராமத்திற்குச் சாலை வசதி உள்ளிட்ட பலவற்றை அரசு செய்து தரும் என்று முரளிகாந்த் எண்ணுவதே அதற்குப் பின்னிருக்கும் காரணம்.

அந்த புகார் பதிவு செய்யப்பட்டதா, அரசாங்கம் முரளிகாந்தின் சாதனைகளை அங்கீகரித்ததா என்பதையும் சொல்கிறது இந்த ‘சந்து சாம்பியன்’. ஆதலால், இது ஒரு தோத்தாங்குளியின் கதையல்ல என்பது புரிந்து விடும்.

டைட்டிலில் உள்ள ‘சந்து’ என்ற வார்த்தைக்கு ‘தோத்தாங்குளி’ என்று அர்த்தம். முரண்மிக்க இரண்டு வார்த்தைகளை ஒன்றிணைத்த டைட்டிலுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தாக்கமே இப்படத்தின் பலம்.

நல்லதொரு அனுபவம்!

2021இல் வெளியான ‘83’ படமானது, இந்திய கிரிக்கெட் அணியானது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதைச் சொன்னது. அதனை நேர்த்தியாக உருவாக்கிய அனுபவத்தினால், ‘சந்து சாம்பியன்’ படத்தை இன்னும் சிறப்பானதாகத் தந்திருக்கிறார் இயக்குனர் கபீர்கான்.

அவரது சிறப்பான காட்சியாக்கமே, முரளிகாந்த் பேத்கர் எனும் ஒரு விளையாட்டு வீரரின் கடந்த கால வாழ்க்கையை நாம் நேரில் காணும் அனுபவத்தை பெறக் காரணமாக உள்ளது.

‘பியார் கா பஞ்சாமா’, ‘சோனு க் ஏ டிட்டு கி ஸ்வீட்டி’, ‘லவ் ஆஜ் கல்’, ‘பூல் புலையா 2’, ‘சத்யபிரேம் கி கதா’ போன்ற படங்களின் வழியே துறுதுறுப்பும் அப்பாவித்தனமும் கலந்த சமகால இளைஞனாகத் திரையில் வெளிப்பட்டவர் கார்த்திக் ஆர்யன்.

இந்த படத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாரா ஒலிம்பிக் சாம்பியனின் பாத்திரத்தை ஏற்று, திரையில் அதனைத் திறம்பட வெளிப்படுத்தி இருக்கிறார்.

டைகர் அலியாக வரும் விஜய் ராஸ், பல காட்சிகளில் நம் கைத்தட்டல்களைப் பெறுகிறார். போலவே, ராணுவ அதிகாரியாக வரும் யஷ்பால் சர்மாவும் வயிறு வலிக்கச் சிரிக்கக் காரணமாக விளங்குகிறார்.

புவன் அரோரா, ராஜ்பால் யாதவ், கணேஷ் யாதவ் உட்படப் பலர் இதிலுண்டு. ‘மே மாதம்’ சோனாலி குல்கர்னி, ஷ்ரேயாஸ் தல்பாதே, பாக்யஸ்ரீ போர்ஸே போன்றவர்கள் இதில் கௌரவ தோற்றத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.

இது போக சக ராணுவ வீரர்கள், போர் பின்னணியில் இடம்பெறுபவர்கள், குத்துச்சண்டை மற்றும் பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என்று பெருங்கூட்டமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது.

ஜுலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசையானது, வெவ்வேறு காலகட்டத்தில் நடப்பதாகச் சொல்லப்படும் காட்சிகளை ‘பவர்ஃபுல்’லாக நாம் உணரக் காரணமாக உள்ளது.

போலவே, பிரீதம் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளலை விதைப்பதாக இருக்கின்றன.
சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவானது டிஐ, விஎஃப்எக்ஸுக்கு இடம் கொடுத்து, ஒரு கிளாசிக் திரைப்படம் பார்க்கும் உணர்வைப் பெற வைக்கிறது.

பிளாஷ்பேக் மற்றும் சமகால நிகழ்வுகளை அடுத்தடுத்து காட்டினாலும், திரைக்கதையின் ஓட்டம் பாதிக்காத வகையில் படத்தொகுப்பில் சீர்மையைக் கையாண்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் நிதின் பெய்த்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடந்த விளையாட்டுப் போட்டிகளைத் திரையில் மறு ஆக்கம் செய்வதென்பது எளிதான காரியமல்ல.

அதனைச் சாதித்திருக்கிறது கோர்காங்கர் தேஜாஸின் கலை வடிவமைப்பு.

முரளிகாந்த் பேத்கரின் வாழ்க்கையைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையை இயக்குனர் கபீர் கான் உடன் இணைந்து சுமித் அரோரா மற்றும் சுதீப்தோ சர்கார் எழுதியுள்ளனர்.

எழுத்தாக்கத்தில் தென்பட்ட உலகைத் திரையில் திறம்பட வடிவமைத்துள்ளார் கபீர் கான் என்று சொல்வது நிச்சயம் ‘க்ளிஷே’வாகத்தான் தெரியும். ஆனால், அவ்வாறே சொல்ல வைத்திருக்கிறது அவரது பங்களிப்பு.

நினைவூட்டும் ஆவணம்!

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக நம் நாட்டுக்குத் தனிநபராகத் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தவர் முரளிகாந்த் பேத்கர்.

கால ஓட்டத்தில் அதனை மறந்துவிட்ட அரசும் மக்களும், அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தரவில்லை.

பத்திரிகைகளில் வெளியான செய்திகளும் கட்டுரைகளும் மீண்டும் அதனை நினைவூட்ட, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து ‘பத்மஸ்ரீ’ விருது முரளிகாந்துக்குத் தரப்பட்டிருக்கிறது. அவர் அந்த விருதைப் பெறுவதுடன் படம் நிறைவடைகிறது.

உண்மையைச் சொன்னால், ‘இப்படியொரு விளையாட்டு வீரர் இருந்தார் என்பதைக் கால ஓட்டத்தில் மறந்துவிட்டோம்’ என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஒரு காட்சி ஆவணமாக அமைந்துள்ளது ‘சந்து சாம்பியன்’.

ஊரார் கிண்டல் கேலி பேசினாலும், நாம் தீர்க்கமாக ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொண்டு செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என்று சொல்கிறது இத்திரைப்படம். குழந்தைகளைச் சாதிக்கத் தூண்டுகிற, அவர்களை வெற்றிப்பாதைக்கு மடைமாற்றிவிடுகிற ஒரு படமாக இது நிச்சயம் இருக்கும்.

அதனால், குடும்பத்துடன் இந்தப் படத்தைக் காணலாம். அதற்கேற்றவாறு, முகம் சுளிக்காத வகையில் நேர்த்தியானதொரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இந்த ‘சந்து சாம்பியன்’!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like