விவசாயிகளின் வலிகளைக் கூற யார் வரவேண்டும்?

நூல் அறிமுகம்:

ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி.

சங்க இலக்கியங்களில் “வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும் என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்போது என்ன ?

‘சேற்றில் மனிதர்கள்’ என்ற இந்தப் புதினத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நிலச்சுவன்தார்களையும் அந்த ஆண்டைகள் தங்கள் பாதுகாப்பிற்காக எற்படுத்தி வைத்திருக்கும் மதம், சாதி என்ற சாக்கடைகளையும் அழகாக பிம்பப்படுத்தியிருக்கிறார்.

நாகரிகத்தின் தோற்றத்திற்கு காரணம் பயிர்த்தொழிலே அதன் காரணமாக நிலையான குடியிருப்பு ஆரம்பமாகியபோது கூடவே “நில உடமை” என்ற நில ஆதிக்கம் பிறந்தது. அது மனிதர்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தது.

மனித சமூதாயத்தை கூறுபோடும் எல்லா பிளவுகளும் இங்கிருந்து தான் பிறந்தன. நில உடைமை பாராட்டுபவர் உழைப்பிலிருந்து விடுபட்டு, பிறர் உழைப்பை உரிமையாக்கிக் கொள்ளும் நியாயத்தைத் தோற்றுவித்தனர்.

கூடவே தங்கள் பாதுகாப்பிற்காக வருணாசிரமத்தையும் தோற்றுவித்தனர். விவசாயிகள் நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது.

கரும பயன் – அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை – ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

உழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கௌரவிக்கப் பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக் கூடச் சாத்தியமில்லை என்பது தான் உண்மை.

தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர் சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இத்தனை ஆண்டுகள் வரை துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு சென்றிருப்பதன் உண்மையும் உணர்ந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களால் படைக்கப்பட்டது தான் இந்நாவல்.

*****

புத்தகம்: சேற்றில் மனிதர்கள்
ஆசிரியர்: ராஜம் கிருஷ்ணன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கங்கள்: 278
விலை: 280/-

You might also like