வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ் நடித்த ‘பேட் பாய்ஸ்’ படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. காரணம், முதல் படத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது கதாபாத்திரங்களின் வார்ப்பு. லாரல் – ஹார்டி, நம்மூர் கவுண்டமணி – செந்தில் போன்று இருவரும் ஒருவரோடு ஒருவர் ‘லந்து’ கொண்டாலும் காமெடியும் ஆக்ஷனும் கலந்த தருணங்கள் அப்படங்களில் அதிகம் இருந்தன. அதனாலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
இந்த நிலையில், முதல் பாகம் வெளியாகிக் கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து நான்காம் பாகமான ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ வந்திருக்கிறது. அடில் & பிலால் இணை இப்படத்தை இயக்கியிருக்கிறது.
எப்படியிருக்கிறது இத்திரைப்படம்?!
மீண்டும் அதகளம்!
டிடெக்டிவ்களான மைக் லோரியும் (வில் ஸ்மித்) மார்கஸ் பர்னெட்டும் (மார்ட்டின் லாரன்ஸ்) சேர்ந்து பணியாற்றுபவர்கள்.
தொடர்ந்து இணை பிரியாமல் பணியாற்றும் இவர்கள், தங்களைச் சுற்றி வளைக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் இணைந்தே எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.
அந்த வகையில், இக்கதையிலும் ஒரு பிரச்சனை வருகிறது.
மைக், மார்கஸின் மேலதிகாரியான கேப்டன் கான்ராட் ஹோவர்ட் இறந்து போகிறார். அவரைச் சுட்ட நபர், மைக்கின் மகன். அதாகப்பட்டது, அவரோடு தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணின் மகன். அதனால், கான்ராட்டின் மகளுக்கு மைக் மீது வெறுப்பு அதிகம்.
காவல் துறையில் அப்பெண் உயரதிகாரியாக உயர்ந்தபிறகும் கூட, அந்த ஆத்திரம் அவரை விட்டு அகலவில்லை.
இந்த நிலையில், கான்ராட்டுக்கு ஒரு போதைப்பொருள் கும்பலோடு தொடர்பிருந்ததாக ஒரு தகவல் காவல்துறைக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அது உண்மை என்று நம்பும் வகையில், கான்ராட் இறப்பதற்கு முன்பாக வேறொரு வங்கிக்கணக்கில் இருந்து அவரது கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்ததாக ஆதாரங்கள் பொய்யாக உருவாக்கப்படுகின்றன.
அதனைத் திட்டமிட்டுச் செய்யும் ஒரு கும்பல், அப்பரிமாற்றம் நிகழ உதவியவரையும் அவரது காதலியையும் சுட்டுக் கொல்கிறது. பிறகே, கான்ராட்டுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
அந்த பொய்த்தகவலுக்குப் பின்னிருப்பது யார் எனும் ஆராய்ச்சியில் மைக்கும் மார்கஸும் இறங்குகின்றனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? அந்த சதியைச் செய்வது யார் என்று சொல்கிறது ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படம்.
இந்தக் கதையில் மீண்டும் மைக், மார்கஸ் இணை ஆக்ஷனில் அதகளப்படுத்தியிருக்கிறதா என்ற கேள்வியே ‘பேட் பாய்ஸ்’ ரசிகர்களிடம் இருந்து முதலில் வெளிப்படும். அதற்கு இடம் வலமாகவும் மேலும் கீழுமாகவும் அடுத்தடுத்து தலையாட்ட வேண்டியிருக்கிறது.
முக்கியக் குழப்பம்!
மைக்கின் திருமணத்தில் கலந்துகொள்ளும் மார்கஸுக்கு மாரடைப்பு ஏற்படுவதாகவும், அதன் தொடர்ச்சியாக மரணத்திற்கு அப்பால் இருக்கும் உலகை அவர் காண்பதாகவும் இத்திரைக்கதை ஆரம்பிக்கிறது.
அதன் வழியே இறந்துபோன கான்ராட் உடன் மார்கஸ் உரையாடுவதாகவும் காட்சிகள் உண்டு. ஆனால், அதுபோன்ற வித்தியாசமான அந்த அனுபவங்கள் குறித்து திரைக்கதையில் விளக்கம் ஏதும் இடம்பெறவில்லை.
கான்ராட்டுக்கு எதிரான ஆதாரங்களை உருவாக்கும் நபர் பற்றி திரைக்கதையில் எந்தக் குறிப்பும் இல்லை. அவர் பின்னால் இருப்பவர்கள் யார் யார் என்ற விளக்கமும் இல்லை.
அவரும் காவல்துறையைச் சேர்ந்தவர் என்றே எழுத்தாக்கம் செய்துள்ள கிறிஸ் ப்ரெம்னர் – வில் பியல் இணை குறிப்பிட்டிருக்கிறது.
அதெல்லாம் சரி, இப்போது எப்படி இப்படியொரு நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கிறார் என்ற கேள்வியையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதனால், முதன்மை பாத்திரங்கள் இரண்டும் வில்லன்களை சுட்டு வீழ்த்துவதோடு தங்களது வேலைக்கு ‘பை பை..’ சொல்கின்றனர்.
இதுபோன்ற முக்கியமான குழப்பங்களுக்குப் பதில் தெரியாத காரணத்தால், நாமும் ‘பாப்கார்ன்’ நெடியினால் தும்மல் வந்துவிடக் கூடாது என்பதில் கவனத்தைக் கொட்ட வேண்டியிருக்கிறது.
நாயகர்களான வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ் பாத்திரங்களின் வயது ஐம்பதுகளை தொட்டிருப்பதாகக் காட்டியிருப்பது நல்ல விஷயம். அதுவே, அவர்களது தோற்றத்தோடு பொருந்திப் போகிறது.
ஆனால், அதனை அடுத்த பாகத்தில் வேறு ஒரு இணையைப் பயன்படுத்துவதற்காகச் சொல்கின்றனர் என்பது உறைக்கும்போதே இப்படத்தை உருவாக்கியதற்கான காரணம் அது ஒன்றே எனப் பிடிபடுகிறது.
அதற்குப் பதிலாக, நம்மூர் சீரியல்களில் குறிப்பிடுவது போன்று ‘இவர்களுக்குப் பதிலாக இவர்கள் நடிக்கின்றனர்’ என்ற ‘கார்டு’ பயன்படுத்தினால் போதுமே!
இந்தப் படத்தில் வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ் உடன் வனிசா ஹட்ஜென்ஸ், அலெக்சாண்டர் லுட்விக், பவுல நுனெஸ், எரிக் டேன், டிஜே காலித், ஜோ பாண்டோலியானோ உட்படப் பலர் நடித்துள்ளனர்.
ராப்ரெச் ஹேவர்ட்டின் ஒளிப்பதிவானது ஆக்ஷன் காட்சிகளில் நம்மை அதிகம் கவர்கிறது. லார்ன் பால்ஃபின் அமைத்துள்ள பின்னணி இசை ஓகே ரகம். அந்த இசை கேட்டு ஆக்ஷன் காட்சிகளில் சீட் நுனியில் அமரும் தருணங்களை எல்லாம் இதில் எதிர்பார்க்கக் கூடாது.
ஆசஃப் ஐசன்பெர்க் – டேன் லெபண்டால் இணையின் படத்தொகுப்பு, ஒரு பி கிரேடு ஹாலிவுட் படம் பார்த்த எபெக்டையே தருகிறது.
‘பேட் பாய்ஸ்’ மூன்று பாகங்களையும் பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை மட்டுமே தரும்.
காரணம், தேய்ந்து போன ரிக்கார்டு போல இத்திரைக்கதையில் மையப்பாத்திரங்களின் அதகளச் சத்தம் குறைவாக இருப்பது தான்.
வில் ஸ்மித்தின் ‘எம் ஐ பி’ சீரிஸ் கூட இப்படியொரு சரிவையே எதிர்கொண்டது.
அதனால், இனி ‘பேட் பாய்ஸ்’ஸின் அடுத்தடுத்த பாகங்களை தொலைக்காட்சி தொடராகவோ, வெப் சீரிஸ் ஆகவோ காணும் நிலை வரலாம்.
அதற்கு நம்மைத் தயார்படுத்துவதற்கான முயற்சி இது என்று கருதினால், ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்
#The_Bad_Boys_Ride_or_Die_review #பேட்_பாய்ஸ்_ரைடு_ஆர்_டை_விமர்சனம் #அடில் #பிலால் #Adil #Bilall #வில்_ஸ்மித் #Will_Smith #Martin_Lawrence #Vanessa_Hudgens #மார்ட்டின்_லாரன்ஸ்