காஜல் அகர்வால் தமிழில் நாயகியாக அறிமுகமான படம் பேரரசு இயக்கிய ‘பழனி’. தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நிறைந்திருந்த அவரது பங்களிப்பு, அவருக்கென்று தனியாக ரசிகர்களை உருவாக்கியது.
‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ போன்ற படங்கள் அவரை முன்னணி நாயகியாக்கியது. இதே போன்ற வளர்ச்சியைத் தெலுங்கு திரையுலகிலும் அவர் எதிர்கொண்டார். இதோ இப்போது, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ‘இந்தியன் 3’ படத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
அப்படிப்பட்ட காஜல் அகர்வால் ஒரு போலீஸ் அதிகாரியாகத் தோன்றி, ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் ‘சத்யபாமா’. அவரது தனியாவர்த்தனத்தை வெளிப்படுத்துகிறது இப்படம். இதனை புதுமுக இயக்குனர் சுமன் சிக்கலா இயக்கியுள்ளார்.
இந்த படம் எப்படியிருக்கிறது?
குற்றவாளியைத் தேடும் கதை!
தனது திருமணத்திற்கு மிகத்தாமதமாகச் செல்லும் அளவுக்கு, தான் செய்யும் காவல் துறை பணியை நேசிப்பவர் சத்யபாமா (காஜல் அகர்வால்). அவரது கணவர் அமரேந்திரா (நவீன் சந்திரா) ஒரு புனைவு எழுத்தாளர்.
மனைவியின் பணிச்சுமை, வேலை நிமித்தம் அடிக்கடி வெளியே செல்வது போன்றவற்றை அமர் மனதார ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும், குழந்தைப்பேறு இல்லாத குறை அவரை வாட்டுகிறது. அதற்குக் காரணம், சத்யபாமா எதிர்கொண்டுவரும் ஒரு உளவியல் பிரச்சனை.
சத்யபாமாவின் கண் முன்னே ஹசீனா என்ற பெண் கொல்லப்படுகிறார். கணவன் யது தன்னைக் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி புகார் தெரிவித்த அப்பெண்ணை, வீட்டுக்கு அனுப்பி வைத்தவர் சத்யபாமா தான். ஆனால், அன்றிரவே அவரை யது கொன்றுவிடுகிறார். அன்றுதான் அமரேந்திரா – சத்யபாமா திருமணமும் நடந்திருக்கிறது.
அப்படியிருந்தும், உயிர் பயத்தில் சத்யபாமாவுக்கு போன் செய்கிறார் ஹசீனா. யது கொல்ல வந்திருப்பது அறிந்ததும், முதலிரவில் அமர் உடன் இருந்த சத்யபாமா உடனடியாக அங்கு செல்கிறார். ஆனால், அவர் செல்வதற்குள் எல்லாம் கைமீறிப் போய்விடுகிறது.
யதுவின் துர்க்குணமும் ஈகோவும் வெற்றி பெறுகிறது. அவரைத் துரத்திச் செல்லும் சத்யபாமா தனது துப்பாக்கியிலுள்ள அத்தனை குண்டுகளையும் காலி செய்கிறார். ஆனாலும், யது தப்பித்துவிடுகிறார்.
ஹசீனா இறந்தபோது கர்ப்பமாக இருந்தார் எனும் உண்மை பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்த காரணத்தால், அந்த வழக்கில் தீர்வு காணாமல் தான் மட்டும் கணவர், குழந்தை என்று மகிழ்ச்சியாக வாழ்வது அர்த்தமற்றதாகச் சத்யபாமாவுக்குத் தோன்றுகிறது. அதுவே அவரை உள்ளூர வாட்டி வதைக்கிறது.
சில மாதங்கள் கழித்து, ஒருநாள் ஹசீனாவின் சகோதரர் இக்பால் காணாமல் போனதாகத் தகவல் தெரிவிக்கிறார் அவரது தந்தை. இக்பாலின் தோழியும், அவரைக் காதலிக்கும் நபரும் சில உண்மைகளை மறைப்பதாகச் சத்யபாமாவுக்குத் தோன்றுகிறது.
அதேநேரத்தில், இக்பால் காணாமல் போனதன் பின்னணியில் யது இருப்பதாகவும் சில சான்றுகள் கிடைக்கின்றன.
உண்மையில் என்ன நடந்தது? இக்பால் என்ன ஆனார்? யது எங்கிருக்கிறார் என்ற கேள்விகளுக்கான பதில்களை ‘த்ரில்’ உடன் நமக்குச் சொல்கிறது ‘சத்யபாமா’வின் மீதி.
தான் விசாரணை செய்த வழக்கில் குற்றவாளி தப்பித்தது, சத்யபாமாவை நிம்மதியிழக்கச் செய்கிறது. இறுதியில், அவர் தீர்வைக் கண்டறிந்தாரா இல்லையா என்பதைச் சுவைபடச் சொன்ன வகையில் ஒரு வித்தியாசமான தெலுங்கு படமாகத் திகழ்கிறது ‘சத்யபாமா’.
காஜல் ரசிகர்களுக்கானது..!
‘சத்யபாமா’வில் அழகாகவும், அதேநேரத்தில் ஆக்ரோஷமாகவும் தோன்றியுள்ளார் காஜல் அகர்வால். வழக்கமாக இந்திய ‘பார்பி’ பொம்மை போல அவர் வந்து போன படங்களை ஒப்பிட்டால், இப்படம் நிச்சயம் வித்தியாசமாகத் தெரியும். அதனால், அவரது ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடுவது நிச்சயம்.
அதேநேரத்தில், அவரைத் தவிர இப்படத்தில் வேறு எவருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது இப்படத்தின் மைனஸ். காஜல் ஜோடியாக வரும் நவீன் சந்திராவும் அதில் அடக்கம்.
பிரகாஷ்ராஜ், நாகிநீடு, ’அலாவைகுண்டபுரம்லோ’ ஹர்ஷவர்தன், ரவிவர்மா, அங்கித் கொய்யா, பிரஜ்வால் யத்மா, சம்பதா மற்றும் ஹசீனா, யதுவாக நடித்தவர்கள் உட்படப் பலர் இதிலுண்டு. அனைவரும் மிகச்சில நிமிடங்கள், நொடிகளே வந்தாலும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
விஷ்ணு பேசியின் ஒளிப்பதிவு, ரோஹன் சிங்கின் தயாரிப்பு வடிவமைப்பு, ஸ்ரீசரண் பக்கலாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, பீகேவின் படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இயக்குனரின் கற்பனைக்குத் தோள் கொடுத்திருக்கின்றன.
இந்தப் படத்தில் ஏஐ கேமிங் மூலமாக உரையாடுவது போன்று விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. அந்த சித்தரிப்பு இனி பல படங்களில் இடம்பெறும் என்று நம்பலாம்.
திரைக்கதை அமைத்த சஷிகிரண் டிக்கா மற்றும் இயக்குனர் சுமன் சிக்கலா இருவரும், சிக்கலான சில விஷயங்களை எளிமையாகத் திரையில் சொல்லத் தவறியிருக்கின்றனர். அவை பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன. அதனால், சில குழப்பங்களை ரசிகர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றை முடிந்தவரை குறைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம்.
நாயகியை மட்டுமே முன்னிறுத்தும் திரைக்கதை என்பதால், சில ‘க்ளிஷே’க்களையும் இதில் காண முடிகிறது. அவற்றைக் கடந்துவிட்டால், ‘சத்யபாமா’ ஒரு விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ ஆக தென்படும். இப்படத்தின் முடிவு சிலருக்குத் திருப்தி அளிக்காமல் போகலாம். ஆனால், அந்த திருப்பத்தை நாம் எதிர்பார்த்திருக்க முடியாது என்பதால் ‘சத்யபாமா’ நிச்சயம் சுவையான காட்சியனுபவத்தைத் தரும்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்
#சத்யபாமா_விமர்சனம் #காஜல்_அகர்வால் #இயக்குனர்_சுமன்_சிக்கலா #நவீன்_சந்திரா #பிரகாஷ்ராஜ் #Satyabhama_movie_review #Kajal_Aggarwal #director_suman_sikkala #naveen_chandra #prakashraj