வெப்பன் – குடோன்ல இருந்த பருத்தி மூட்டை!

என்ன வகைமையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று சிந்தித்து ரசிப்பதற்குள், சில படங்கள் முடிவடைந்துவிடும். அதுவே அப்படத்தின் வெற்றி எத்தகையது என்பதை முடிவு செய்துவிடும்.

இன்னும் சில படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைமைகளைத் தாங்கி நின்று நம்மைச் சோதிக்கும்.

குறிப்பிட்ட வகைமைக்கான எல்லைக்குள் நின்றுகொண்டு, சில படங்கள் நமக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் அல்லது ‘ஏண்டா இப்படி’ என்பது போல நம்மை நாமே நொந்துகொள்ள வைக்கும்.

மேற்சொன்னவற்றில் இயக்குனர் குகன் சென்னியப்பன் உருவாக்கியுள்ள ‘வெப்பன்’ படம் எந்த வகைப்பாட்டில் சேரும்? இதற்கு படத்தின் ட்ரெய்லர் பார்த்தாலே பதில் சொல்லிவிட முடியும்.

தமிழில் தொடர்ச்சியாக ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் வெளியாவதற்கு ஏற்ற வகையிலான கதையொன்றைத் தொட்டிருக்கிறார். கதை என்னவோ அரதப்பழசுதான்.

ஆனால், புதிதாக ஏதோ சொல்லப் போகிறார் என்ற எண்ணத்தை ஊட்டுகிறது திரைக்கதையின் தொடக்கம். படம் முடிந்தபிறகு, அந்த எண்ணம் என்னவானது என்பதே ‘வெப்பன்’ படத்தின் வெற்றியைச் சொல்லிவிடுகிறது.

சூப்பர்ஹீரோவைத் தேடி..!

அக்னி (வசந்த் ரவி) தனது நண்பர்களோடு சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதனைப் பிரபலப்படுத்தும் நோக்கோடு, ‘சூப்பர்ஹீரோ’ குறித்த தேடலைச் சொல்லும் வகையில் சில வீடியோக்களை வெளியிடுகிறார்.

இந்த நிலையில், தேனி மலைப்பகுதியில் விபத்தில் அடிபடவிருந்த குழந்தையொன்று காற்றில் பறந்துவந்து உயிர் பிழைத்த வீடியோவை சமூகவலைதளங்களில் காண்கிறார் அக்னி.

‘அந்த இடத்தில்தான் அந்த சூப்பர்ஹீரோ இருக்க வேண்டும்’ என்று தனது நண்பர்கள், தோழி அவந்திகா (தான்யா ஹோப்) உடன் அங்கு செல்கிறார்.

அதேநேரத்தில், நாட்டின் செயல்பாட்டைத் தங்களது கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒரு ரகசிய சிண்டிகேட் அந்த சூப்பர்ஹீரோவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகிறது. அக்குழு முயற்சியை முடுக்குவதற்குள், அந்த குழுவில் இருப்பவர்கள் மர்மமாக உயிரிழக்கின்றனர்.

அது தொடர்பாக விசாரிக்கச் சில அடியாட்களை அனுப்புகிறார் சிண்டிகேட் தலைவர் தேவ் கிருஷ்ணா (ராஜிவ் மேனன்). அதேநேரத்தில், அந்தக் குழுவைச் சேர்ந்த இன்னொருவரும் சிலரை அனுப்புகிறார்.

அந்த சூப்பர்ஹீரோவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆராய்ச்சிகளின் விளைவாக, இரு குழுக்களும் தங்கள் வசம் முறையே நச்சுவாயு உமிழும் சாதனமொன்றையும், குறிப்பிட்ட உலோகத்தில் செய்யப்பட்ட ஆயுதமொன்றையும் கையோடு எடுத்துச் செல்கின்றன.

இரு குழுக்களுமே இரு வேறு திசைகளில் பயணிக்கின்றன. அதுவே, அவர்கள் தேடிச் செல்லும் நபர் ஒருவரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கு நடுவே, அக்னியும் அவரது நண்பர் கூட்டமும் தங்களது தேடலைத் தொடர்கிறது.

இறுதியில் என்னவானது, அந்த சூப்பர்ஹீரோ எங்கிருக்கிறார், யார் என்பது தெரிய வந்ததா என்பதோடு ‘வெப்பன்’ முடிவடைகிறது.

சொல்வதற்கு எளிதாக இருக்கும் இந்தக் கதையை, மிகச்சிக்கலான மற்றும் சொதப்பலான திரைக்கதையைக் கொண்டு நம் மண்டையை குழப்பத்தில் தோய்த்து எடுத்திருக்கிறார் இயக்குனர்.

விழலுக்கு இறைத்த நீர்!

லோகேஷ் கனகராஜ் தன் படங்களுக்கென்று ‘எல்சியு’ உருவாக்கியது போல, முழுக்கத் தமிழில் சூப்பர்ஹீரோ படங்களை எடுக்க வேண்டுமென்ற உத்வேகத்துடன் ‘வெப்பன்’ படத்தை உருவாக்க முனைந்திருக்கிறார் குகன் சென்னியப்பன்.

அதில் தவறேதுமில்லை! ஆனால், அதனைத் திரையில் காட்சியாக்கம் செய்திருக்கும்விதம் தான் நம்மை வெறுமையில் தள்ளிவிடுகிறது.

‘சூப்பர்ஹீரோ’ அறிமுகம் மட்டும் இப்படத்தில் போதும் என்று ரொம்பவே சாதாரணமான ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறார்.

திரைக்கதையில் மிகப்புதுமையான ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறோம் என்ற எண்ணத்தை ரசிகர்களிடத்தில் உருவாக்க முயற்சித்திருக்கிறார்.

அதற்கேற்ப, இடைவேளைக்கு முன்பான காட்சிகள் அனைத்தும் பாதியில் தொடங்குகின்றன அல்லது பாதியில் முடிவடைகின்றன.

முன்பாதி முழுக்கக் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதும், காட்சிகளில் இருக்கும் உள்ளடக்கமும் ‘பூடகமாகவே’ இருக்கின்றன. அவற்றுக்கான பதிலைத் திரையில் தேடி, அது காணக் கிடைக்காமல் வறண்டு சோர்ந்து சுருங்கும்போது ‘ட்விஸ்ட்’ என்ற பெயரில் சில விஷயங்கள் வந்து போகின்றன.

அதெல்லாம் ஒன்று சேரும்போது, ‘பொத்தி வச்ச கைக்குள்ள இருந்தது பத்து காசு தானா’ என்ற எண்ணமே மனதுக்குள் மண்டுகிறது. அதுவே இப்படத்தில் கொட்டப்பட்ட ஒட்டுமொத்த உழைப்பையும் விழலுக்கு இறைத்த நீராக மாற்றுகிறது.

சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜிவ் மேனன், ராஜிவ் பிள்ளை, வேலு பிரபாகரன் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகளில் இவர்களே முகம் காட்டியிருக்கின்றனர்.

கனிகா, மைம் கோபி, யாஷிகா ஆனந்த், வினோதினி வைத்தியநாதன், கஜராஜ், குமார் நடராஜன் உட்படப் பலர் இதில் இரண்டொரு காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர்.

திரையில் தென்படாத விறுவிறுப்பைத் தனது பின்னணி இசையால் உருவாக்கிவிட வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் ஜிப்ரான். அவருக்குப் பெரிதாக வெற்றி கிட்டவில்லை.

பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு நிச்சயமாக ஒரு ‘சூப்பர்ஹீரோ’ படத்திற்கானதாக அமைந்துள்ளது.

டிஐ பணியின் பங்களிப்பு அறிந்து சிறப்பான திட்டமிடலுடன் படம்பிடித்திருக்கிறார் என்ற எண்ணத்தை ஊட்டுகிறது காட்சியாக்கம்.

சுபேந்தரின் கலை வடிவமைப்பு வித்தியாசமானதொரு களத்தை, கருமையின் வெவ்வேறு வண்ணங்களில் காட்டுகிறது.

படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா பல காட்சிகளில் கன்னாபின்னாவென்று கத்திரி போட்டிருக்கிறார். அதுவே, அக்காட்சி எப்போது தொடங்கியது, முடிந்தது என்ற கேள்வியை நம்முள் எழுப்புகிறது.

படத்தில் விஎஃப்எக்ஸ் குழு சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறது. இது போலத் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பாராட்டலாம்.
அதையெல்லாம் மீறி, ஒரு திரைப்படமாக ‘வெப்பன்’ நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

கதாபாத்திரங்கள் அனைத்தும் ’ரோபோ’ போலப் பேசுகின்றன. இவர்கள் தேடும் சூப்பர்ஹீரோ, இதுவரை ஆற்றிய சாகசங்கள் எப்படிப்பட்டவை என்ற கேள்விக்குத் திரையில் பதில் இல்லை.

‘ஹிட்மேன்’, ‘அயர்ன்மேன்’, ‘எக்ஸ்-மென்’ தொடங்கிப் பல படங்களின் தாக்கம் திரையில் தென்படுகிறது. ‘யூனிவர்சல் சோல்ஷியர் படத்துலயே இதையெல்லாம் பார்த்துட்டோம்பா’ என்று இடைவேளையிலேயே படத்தைக் கிழித்துச் சிலர் தோரணம் கட்டுவதையும் பார்க்க முடிந்தது.

கிளைமேக்ஸ் காட்சியில் ‘இந்த இயற்கை தானாகவே தன்னோட குறைகளைச் சரி பண்ணிக்கும்.

சூப்பர் ஹீரோவுக்கான தேவை இங்க இல்ல’ என்று சத்யராஜ் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. அது மட்டுமே கொஞ்சம் இயல்பானதாக நமக்குத் தெரிகிறது.

மற்றபடி, விஎஃப்எக்ஸ் மிரட்டலோடு காதில் பூ சுற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ ரக படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு மங்கலான ‘ஜெராக்ஸ்’ ஆகத் தெரியலாம் இந்த ‘வெப்பன்’.

சிலருக்கோ ‘பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று தோன்றலாம். எது எப்படியோ, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ‘வெப்பன்’ ஒரு அல்வாத்துண்டு என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like