கருடன் – கனக்கச்சிதமான பாத்திரங்களின் வார்ப்பு!

விடுதலை படத்திற்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கருடன்’. எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இதனை இயக்கியிருக்கிறார்.

சசிகுமாரும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர் என்பது திர்பார்ப்பை அதிகப்படுத்தியது. சூரிக்கு இணையான முக்கியத்துவம் அவர்களுக்கு உண்டு என்பதும் படக்குழு சார்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.

சரி, ‘கருடன்’ எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது? இந்த படத்தின் நாயகனாக சூரி இன்னொரு உயரத்தைத் தொட்டிருக்கிறாரா?

மூன்று பேர்!

தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்) மற்றும் கருணா (உன்னி முகுந்தன்). இருவரும் இணை பிரியா நண்பர்கள். இவர்களது பெற்றோரும் கூட நண்பர்கள் தான்.

சிறு வயதில் ஒரு விபத்தில் இருவரது பெற்றோரும் பலியாக, அன்று முதல் கருணாவின் பாட்டியிடம் (வடிவுக்கரசி) வளர்கிறார் ஆதி.

கருணாவின் குடும்பம் ஜமீன் வம்சத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அவர்களது செல்வாக்கும் வசதிவாய்ப்புகளும் மிகவும் மங்கிய நிலையில் இருக்கின்றன.

ஊரிலுள்ள சத்திரத்தில் சாமியார்களோடு தங்கியிருந்த ஒரு சிறுவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார் கருணா. அந்தச் சிறுவன் கருணாவை நண்பனாக எண்ணாமல், ஒரு முதலாளியாக நினைக்கிறார். அவருக்கு ஆதியின் பாட்டி ‘சொக்கன்’ என்று பெயரிடுகிறார்.

அன்று முதல் ஆதிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இருக்கிறார் சொக்கன்.

வளர்ந்தபிறகும் கூட ஆதி, கருணாவோடு எந்நேரமும் சேர்ந்தே திரிகிறார் சொக்கன் (சூரி). கருணா என்ன செய்தாலும், சொன்னாலும் ‘சரி’ என்று இருப்பதே சொக்கனின் மனதில் இருக்கும்.

அதேநேரத்தில் நண்பன் ஆதியின் சொல்லை மீற முடியாமல் தடுமாறுகிறார் கருணா. இது அவருக்கும் அவரது மனைவிக்கும் (ரோஷிணி ஹரிப்ரியன்) இடையே சண்டையை உருவாக்குகிறது.

கருணாவின் மச்சான் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை விரும்ப, இருவருக்கும் திருமணம் முடித்து வைக்குமாறு சொல்கிறார் ஆதி. அதனை கருணா ஏற்க, அன்று முதல் அவரது மனைவி ஆதி குடும்பத்தை விரோதியாகப் பார்க்கிறார்.

வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலோ என்னவோ, பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை கருணாவிடம் அதிகமாகிறது. அது மிகச்சில தருணங்களில் தலைகாட்டுகிறது.

இந்தச் சூழலில், தமிழக அமைச்சர் ஒருவர் (ஆர்.வி.உதயகுமார்) கோம்பையில் இருக்கும் ஆதி, கருணா குறித்து அப்பகுதி டிஎஸ்பிக்கு (சமுத்திரக்கனி) உத்தரவிடுகிறார். அவரும் அவ்வாறே செய்கிறார். கூடவே சொக்கன் குறித்தும் தகவல்கள் வந்து சேர்கின்றன.

திடீரென்று ஒருநாள் கருணாவின் பாட்டி இறந்து போகிறார்.

இந்தச் சூழலில், கோம்பையில் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஒரு சொத்து சம்பந்தப்பட்ட பட்டயம் வங்கி லாக்கரில் இருப்பதை அறியும் அமைச்சர், அதனை திருடித் தருமாறு கோம்பையைச் சேர்ந்த பிரமுகர் நாகராஜ் (மைம் கோபி) என்பவரிடம் கூறுகிறார். அதனைச் செய்யும் நோக்கில், அவரும் கருணாவுக்கு நெருக்கமாகிறார்.

இந்த நிலையில், கோயில் திருவிழா அன்று அந்த பட்டயத்தையும் சேர்த்து அம்மனுக்கு செலுத்தும் நகைகள் வங்கியில் இருந்து எடுத்துவரப் படுகின்றன. அதற்குக் காவலாக ஆதியும் அங்கிருக்கிறார். அந்த நேரத்தில், அந்த பட்டயத்தைக் கவர கருணாவின் மச்சானும் நாகராஜின் ஆட்களும் முயற்சி மேற்கொள்கின்றன.

அப்போது ஏற்படும் மோதலில், கருணாவின் மச்சான் கையை வெட்டுகிறார் சொக்கன்.

அதன்பிறகு என்னவானது? ஆதி, கருணா இடையே பிளவு ஏற்பட்டதா? இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? இருவரையும் மையப்படுத்திய கதையில் சொக்கனுக்கான இடம் என்ன என்று சொல்கிறது ‘கருடன்’ படத்தின் மீதி.

ஆதி, கருணா, சொக்கன் என்று மூன்று பேர்களைச் சுற்றி நகர்கிறது இப்படத்தின் கதை. இவர்களைச் சார்ந்தவர்கள் என்று மேலும் சிலரைக் காட்டுவதால், படத்தில் ஒரு டஜன் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படியொரு கதாபாத்திர வார்ப்பைக் கண்டுதான் எத்தனை நாட்களாகிவிட்டது.

அசத்தல் நடிப்பு!

என்னதான் சூரி நாயகனாக இருந்தாலும், படம் முழுக்க சசிகுமாரும் உன்னி முகுந்தனும் வந்து போயிருக்கின்றனர். அவர்களுக்கான முக்கியத்துவத்தில் கொஞ்சம்கூட சமரசம் செய்யப்படவில்லை என்பதே இப்படத்தின் யுஎஸ்பி.

அதற்கேற்ப சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் அசத்தல் நடிப்பைத் தந்துள்ளனர். என்ன, உன்னி முகுந்தன் மலையாள வாசனையோடு தேனி வட்டாரத் தமிழைப் பேசுமிடங்கள் கொஞ்சம் செயற்கையாகத் தெரிகின்றன.

‘என்ன நடந்தது’ என்று உன்னி முகுந்தன் கேட்டதும், தன்னையும் அறியாமல் சூரி உளறிக் கொட்டும் காட்சிகள் இதிலுண்டு. அவ்விடங்களில் ரசிகர்கள் கைதட்டும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், கண் கலங்கும் அளவுக்குச் சில உணர்ச்சிகரமான தருணங்களையும் அவர் தந்திருக்கிறார்.

சூரியின் ஜோடியாக ரேவதி வந்தாலும் ஷிவதா, ரோஷிணி ஹரிப்ரியன், வடிவுக்கரசி ஆகிய பெண் பாத்திரங்களுக்கும் கூட திரையில் சம அளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர்.

ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி பாத்திரங்களும் கூட அவற்றுக்கு உரிய இடத்தோடு திரையில் காட்டப்படுகின்றன. பிரிகிடா – துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ஜோடிக்குத் திரையில் சரியான இடம் தரப்படவில்லை. அவர்களை இன்னும் சில நிமிடங்கள் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சிகள் ‘லைவ்’வாக அமைந்து, நாமே அந்த சண்டையில் ஈடுபடுவது போன்ற உணர்வை ஊட்டுகின்றன. ஒருகட்டத்தில் அடியாட்கள் மீது விழும் அடி கோரமானதாக மாறுவதும், ரத்தம் திரையில் பீறிடுவதும் நம்மை மயக்கமடையச் செய்கிறது. அந்தளவுக்குத் திரையில் வன்முறை அதீதமாக வெளிப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு, திரைக்கதையில் உருப்பெற்றுள்ள கதைக்களத்திற்குச் செம்மையான உருவத்தைத் தந்திருக்கிறது. துரைராஜின் கலை வடிவமைப்பு அதற்கேற்ற உதவிகளைச் செய்திருக்கிறது.

முன்பின்னாகப் பயணிக்கும் திரைக்கதை வினோதமாகத் தெரியாத அளவுக்கு, முன்பாதியைச் சரியாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்.

பின்பாதியில் சில குழப்பங்கள் பெருகக் காரணமாகியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்டவை போலிருந்தாலும் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன.

பின்னணி இசையில் வழக்கம்போல தாண்டவமாடியிருக்கிறார் மனிதர்.

இடைவேளைக்கு முன்னதாக வரும் சண்டைக் காட்சியில் ஒட்டுமொத்தப் படக்குழுவுன் உழைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கும்.

வெற்றிமாறன் எழுதிய கதையை உள்வாங்கிக்கொண்டு, எழுத்தாக்கத்தையும் காட்சியாக்கத்தையும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.

இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரியோடு இன்னபிற பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறும் விதமாக, அனைவரையும் திரையில் காட்டியவிதமே அவருக்குப் பல பெரிய பட வாய்ப்புகளைப் பெற்றுத்தரும்.

தவிர்த்திருக்கலாம்!

சண்டைக்காட்சிகளின்போது பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மீது வன்முறை செலுத்தப்படுவதாகக் காட்டப்படுவதைக் கடப்பது கடினம். இதில் அப்படிப்பட்ட தருணங்கள் இருக்கின்றன.

‘தளபதி’ மம்முட்டி – ரஜினி போலவே, இதிலும் உன்னி – சூரி காம்பினேஷனை வேறுமாதிரியான கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். கிளைமேக்ஸ் தருணத்தில் சூரி பாத்திரம் என்ன நினைக்கிறது, செய்கிறது என்பதில் ஆகச்சிறந்த தெளிவு வெளிப்படவில்லை.

உன்னி முகுந்தன் பாத்திரம் ‘ஹானஸ்ட்ராஜ்’ஜில் வரும் தேவனை நினைவூட்டுகிறது. ஆனால், அப்படத்தில் இருந்த தெளிவான சித்தரிப்பு இதில் மிஸ்ஸிங்.

இது போன்ற சில குறைகளைத் தாண்டி, சூரியைக் கதையின் நாயகனாகக் கொண்டு இப்படியொரு அழுத்தமான திரைக்கதை நகர்வையும் காட்சியாக்கத்தையும் உருவாக்க முடியும் என்று காட்டிய வகையில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.

ஒவ்வொரு காட்சியையும் கொண்டாட்ட மனநிலையுடன் உருவாக்கியிருக்கிறது ‘கருடன்’ படக்குழு. இந்த அனுபவத்தை இழந்து, கடந்த ஆறு மாதங்களாகத் தவித்து வந்தது தமிழ் சினிமா.

ஆதலால் ஒரு ‘பீல்குட் சினிமா’வாக இல்லை என்றாலும், இதனை நம்மால் கொண்டாட முடியும். அந்த அளவுக்கான உள்ளடக்கம் ‘கருடன்’ படத்தில் உண்டு என்று தாராளமாகச் சொல்லலாம்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like