சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று யாராவது நம்மிடம் கேட்டால் காந்தி, நேரு என்று பட்டியல் பத்துடன் சுருங்குமளவிற்கே நாம் சுதந்திரத் தியாகிகளை ஞாபகம் வைத்திருக்கிறோம்.
ஆனால், பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைவதற்கு ஏராளமான முகம் தெரியாதவர்கள் உயிரையும் உறவையும் தியாகம் செய்துள்ளனர்.
பெண்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு பின் கொண்டாடப்படவில்லை. ஏன் இவர்கள் பெயர் கூட நமக்கும் அரசுக்கும் நினைவில்லை.
சுதந்திரத்திற்காக உயிர் இழந்தவர்கள் ஒரு புறமிருக்க, உடலுறுப்புகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் வறுமையையும், வலியையும் சுமந்து வாழ்ந்து மடிந்தனர். இன்னும் சில தியாகிகள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இவ்வாறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களைப் பற்றிய கதை தான் ஹீராமண்டி.
லாகூரைச் சேர்ந்த ஹீராமண்டி என்னும் ஊரைக் கதைக்களமாக கொண்டு தொடர் எடுக்கப்பட்டது.
ஹீராமண்டியில் வாழும் பாலியல் தொழிலாளிகள், நவாபுகள், புரட்சியாளர்கள் ஆகியவர்களே கதையின் கதாபாத்திரங்கள். பாலியல் தொழிலாளர்களுக்கெல்லாம் எல்லாம் தலைவியாக மல்லிகாஜான் உள்ளார்.
மல்லிகாஜானிற்கு இரண்டு பெண்களும் தங்கையும் அக்கா மகளும் உள்ளனர். கதை முழுவதும் காதலும், விரோதமும், சண்டைகளும், வலிகளும் புரட்சியும் நிரம்பியுள்ளன.
தங்க ஊசி என்றால் அதைக்கொண்டு காயப்படுத்திக் கொள்வோமா? மாட்டோம் அல்லவா! ஆனால் கதையில் வரும் பாலியல் தொழிலாளிகள் தங்கக் கூண்டுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களிடம் அறுசுவை உணவுகள் சாப்பிடுவதற்கு இருக்கிறது.
தங்கமும், வைரமும் அவர்கள் வீடு முழுவதும் நிரம்பியிருக்கிறது. அவர்கள் அணியும் ஆடைகள் விலை உயர்ந்தவை. ஆனால் அவர்கள் வாழ்க்கை வெறுமையால் நிரம்பியுள்ளது. எந்தவித புற அழுத்தங்கள் இல்லாமல் அவர்கள் காதல் கொள்வதற்கான உரிமையில்லை.
தான் பெற்ற குழந்தையைத் தானே வளர்ப்பதா, இல்லையா என்பதைக் கூட புறச் சூழ்நிலைகளே முடிவு செய்கிறது.
மல்லிகாஜானுக்கு ஆலம்ஷேப், பிபூஜான் என்று இரு குழந்தைகள் உள்ளனர். ஆலம்ஷேப் பேரழகி, கவிதைகள் மீது அளப்பெரிய காதல் கொண்டவள்.
அவளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட விருப்பமே இல்லை. கடைசி வரை ஈடுபடவும் இல்லை.
கவிதைகளுடனும் புத்தகத்துடனும் நித்தம் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
உலகிலேயே மிகப்பெரிய கவிதாயினியாக வேண்டும் என்பது அவளது விருப்பம். அவளுக்கும் தால்ஜ்தாருக்கும் இடையிலான காதலை காணும் போது உலகிலுள்ள அனைத்து காதலர்களும் பூரிப்படைவார்கள், அவ்வளவு அழகு.
இருவருக்குமிடையிலான காதல் கவிதை பரிமாற்றல்களும், இருவருடைய கண்களின் உரையாடலும், ஊடல்களும் காண்போரை காதலில் திளைக்க வைக்கிறது.
ஹீராமண்டியில் வாழும் பெண்களுக்கான மிகப்பெரிய எதிரியே கலாச்சாரச் போர்வையில் உள்ள அடிமைத்தனமே. ஆனால் அவர்களுக்குள்ளேயே பகைமை இருந்தது.
ஒரு சமூகத்தின் ஆதிக்க மனநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்குள்ளேயே பிரிவுகளும் வெறுப்பும் இருப்பது ஹீராமண்டியில் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா இடங்களிலும் இதே நிலைமை தான்.
ஆனால், ஒடுக்கப்பட்டவர்களுக்குள் இருக்கும் பிரிவுகள் ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகி விடுகின்றன.
ஹீராமண்டி அரசர்களின் உல்லாசக் கோட்டை. ஆனால் அங்கு மகிழ்ச்சியை தருபவர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.
ஹீராமண்டியின் அரண்மனையும் கதை மாந்தர்கள் அணிந்திருக்கும் அணிகலன்களும் கண்ணைக் கவருகின்றன.
அணிகலன்களும் கோட்டை அலங்காரமும் சுதந்திரத்திற்கு முன் நம்மை இழுத்துச் செல்கின்றன.
கதையின் தீ வசனங்களிலும் நிரம்பியிருக்கிறது.
காதலுக்கும் புரட்சிக்கும் இடையில் கோடு எதற்கு? காதலே புரட்சித் தீ தானே! என்று ஆலம்ஷேப் கூறுவதும், இது எனக்கான போர், நான் தான் போரிட வேண்டும் என்று மற்றொரு பேரழகி கூறுவதுமான வசனங்கள் கதைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது.
சுதந்திரத்திற்காக ஹீராமண்டியில் நிகழும் போரில் எண்ணற்ற தியாகங்கள் நிகழ்கின்றன. எந்த பட்டத்தைத் தான் சுமக்கவே கூடாது என்று பெண் விரும்புகிறாளோ, காதலனே விலை மாந்தர் என்னும் பட்டத்தை அவளுக்கு அளிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறான்.
ஆனால் அவள் சிறிதும் கோவம் கொள்ளாமல் காதலனின் புரட்சி நடவடிக்கைக்காக தானே முன்வந்து பழியைச் சுமக்கிறாள்.
நாட்டின் நலனுக்காக தன் காதலையே விட்டுக்கொடுத்துவிட்டானே என்று பூரிப்பை அடைகிறாள்.
தன் மகளை மீட்க, தாய் கூட்டு பலாத்காரத்திற்கு தன்னை பலி கொடுக்கிறார்.
இவ்வாறு பெண்கள் தன்னை அழித்துக் கொண்டு அன்பிற்குரியவர்களை காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் காப்பாற்ற முடியாமல் தோற்றுப் போகின்றனர்.
காதலுணர்வினால் கருவைச் சுமக்கும் நிலையில் தனக்கான காதலனை திருமணம் செய்துகொள்ள காத்திருக்கும் தருவாயில் காதலன் இறக்கிறான்.
நெஞ்சுக்குழியில் சுமப்பவன் மரணக்குழியில் அடக்கம் செய்யப்படுவதைத் தாழாமல் அவளது வாழ்வே இருள்கிறது.
ஆனால், இதயத்தைக் கிழிக்கும் வலிகளைச் சுமந்தாலும் தன் நாட்டிற்காக, அன்பிற்குரியவர்களுக்காக காதலனை கொன்றவனை தன்னை பாலியல் நோக்கத்துடன் நெருங்க அனுமதிக்கிறாள்.
காதலனை அடித்துக் கொன்ற கைகள் அப்பெண்ணின் பரிசத்தை சீண்டும் போது எத்தனை ரணமாக இருந்திருக்கும். நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
அழுகிய விலங்கின் கைகள் தன்னை தொடுவது போலல்லவா இருந்திருக்கும். ஆனால் அதையும் பொறுத்து சமயம் வருகையில் பழி தீர்க்கிறாள்.
உலகின் அனைத்து பிரச்சனைகளையும் பெண்ணிய பார்வையுடன் மட்டும் சுருக்குவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.
ஆனால், ஒவ்வொரு பிரச்சனையிலும் போராட்டங்களிலும் பெண்களின் நிலையையும் பங்களிப்பையும் அழுத்தமாக பதிவு செய்தாக வேண்டும்.
சமூகத்தின் நலனுக்காக பெண்கள் இந்தியாவின் பல மூளைகளை தொடர்ச்சியாக தன் பங்களிப்பை செலுத்துகின்றனர்.
அதே நேரத்தில் போராடக் கூடிய ஆண்களுக்குப் பின் இரும்புச் சுவராகத் தாங்கிப் பிடிக்கின்றனர்.
இரும்ச்பு சுவராக இருந்து ஏராளமான இழப்புகளைச் சந்திப்பதற்கு ஆண்மகன் மீதுள்ள அன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. புரட்சியின் மீது தானும் கொண்டுள்ள காதலின் காரணமாகவே அவர்கள் அனைத்து இழப்புகளையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
பெண் சக்தி இல்லாமல் எந்தவித மாற்றத்தை சமூகத்தில் நிகழ்த்த முடியாது என்பதற்கான சாட்சியே ஹீராமண்டி
– கு.சௌமியா