பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மே 22 – சர்வதேச பல்லுயிர் பெருக்கத் தினம்

“நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே இருக்கும்”

– இந்த வசனம் சமீபத்தில் வந்த ‘ரசவாதி’ படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ் பேசுவதாக அமைந்திருக்கும்.

இயக்குனர் சாந்தகுமார் அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். அவர் எந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பது தினசரிகளைத் தொடர்ந்து படிக்கிற ஒருவரால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், நாம் அந்த பிரச்சனை குறித்து பார்க்கப் போவதில்லை. அதனால் ஏற்படும் முக்கியமான விளைவுகளில் ஒன்றான ‘பல்லுயிர் பெருக்கம்’ மீதான பாதிப்பு குறித்து நோக்கப் போகிறோம்.

தாங்கும் இயற்கை!

இந்த உலகமே மிக விசித்திரமானது. நமக்குத் தெரிந்த அறிவைக் கொண்டு, ‘இது இப்படித்தான்’ என்று எதையும் முழுமையாக வரையறை செய்ய இயலாது.

மிகச்சில நாட்கள் வாழ்கிற உயிரினங்கள், நுண்ணுயிரிகள் முதல் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழும் விலங்குகள், தாவரங்கள் வரை அனைத்துக்கும் இங்கு இடமுண்டு.

மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும் நிலத்தில் உயிரிகள் வாழ்வது போலவே மலையிலும், பனியிலும், நீரிலும், சதுப்பு நிலத்திலும் வாழ்கின்றன.

கட்டாந்தரையாக இருக்கிற ஒரு நிலத்தைக் கொத்திப் போட்டுவிட்டு, மழைக்காகக் காத்திருந்தால் போதும். சில நாட்கள் கழித்து அந்த மண்ணில் பச்சை துளிர்க்கும். அவை எங்கிருந்து வந்தன. நமக்குத் தெரியாது. ஆனால், ஒரு உயிர் துளிர்ப்பதென்பது இந்த பூமியில் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

எத்தனை முறை பயிரிட்டாலும், மண் தனது வளத்தை இழக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனைக் கையாள்கிறது. மண் புழுவின் வாழ்க்கை முதல் பல விஷயங்கள் அதற்குப் பின்னிருக்கின்றன.

எத்தனை அசுத்தப்படுத்தினாலும் நீர்நிலைகள் சுத்தமாகின்றன. கார்பன் டை ஆக்சைடு உமிழும் திறன் நமக்கிருக்கிறது என்றால், அதனை உள்வாங்கிக்கொண்டு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஆக்சிஜனை வெளியிட்டு வருகின்றன தாவரங்கள்.

‘கோளாறுகளைச் சரி செய்வதே வாழ்க்கையாகி விட்டது’ என்று புலம்பும் மனிதர்களைப் போலல்லாமல், நாளும் பொழுதும் இயற்கை தன்னியல்பாக அதனைச் செய்து வருகிறது.

தாவரங்கள், விலங்குகள், நுண்ணியிரிகள் என்று பல கோடி ஆண்டுகளாக இந்த பூமியை வாழ்வித்து வருகிறது. அனைத்து உயிர்களும் பல்கிப் பெருகுகிற அந்த நிலையை மெதுமெதுவாகச் செல்லரித்து வருகின்றன மனிதர்களின் செயல்பாடுகள்.

அனைத்துயிர்களையும் காப்போம்!

இந்த உலகில் நாம் உண்ணும் உணவில் 80 சதவிகிதம் தாவரங்களில் இருந்தே கிடைக்கின்றன. மீதமுள்ளவற்றை மட்டுமே மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் புரதத்தில் இருந்து பெறுகிறோம்.

அந்தப் பயன்பாடு அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கும், உருவாக்குவதற்குமான வாய்ப்பைத் தந்தது.

இன்று அதிலும் கூட சிக்கல் உருவாகியிருக்கிறது.

உணவுக்காக மட்டுமல்லாமல் மருந்துகளுக்காகவும் கூட, இதே தாவரங்கள், விலங்குகளை நம்பியிருக்கிறோம் நாம்.

ஆனால், அவற்றைக் காக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றால் ‘பூஜ்யம்’ என்றே சொல்ல வேண்டும்.

பெருகி வரும் ஆலைக்கழிவுகள், விவசாயத்தில் ரசாயனப் பயன்பாடு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், மட்காத கழிவுகளால் மண் வளமற்றுப் போதல் என்று பல விஷயங்கள் அதற்குக் காரணமாக இருக்கின்றன.

ஒரு உயிரி வாழ்வதற்குத் தேவையான சூழலைச் சிதைத்துவிட்டோம் என்றால், அதன் வாழ்வுக்கண்ணி எப்படி சீராக இருக்கும்.

அதனைக் குலைத்துப்போட்டுவிட்டு, நாம் மட்டும் பாதுகாப்பாக ஒரு கான்க்ரீட் கட்டடத்துக்குள் எத்தனை காலம் வாழ்ந்துவிட முடியும்?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டால், பல்லுயிர் பெருக்கம் குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் பரவலாகிவிடும். நம்மால் இந்த இயற்கைக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தொற்றிக் கொள்ளும்.

இயற்கையோடு இயைந்து வாழும் மக்களுக்கு அதுவொரு இயல்பாகவே உள்ளது. அப்படிப்பட்டவர்கள் தொழில்நுட்ப மேம்பாட்டின் வீச்சினைப் பார்த்து பிரமிப்பதற்குப் பதிலாக, அவற்றில் எதையெல்லாம் தனதாக்கலாம் என்று யோசித்துச் செயல்பட்டு வருகின்றனர்.

அனைத்துயிர்களையும் காக்க வேண்டுமென்கிற எண்ணம் இயற்கையாகவே அவர்களிடத்தில் இருப்பதனால், அது எளிதாக அவர்களால் நிகழ்த்தப்படுகிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாவோம்!

பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும்போது மனிதகுலமும் பாதிப்புகளை எதிர்கொள்ளும். அது பிடிபட்டபிறகு, பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள் பல தன்னார்வ நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அது குறித்த தொடர்ச்சியான விவாதங்கள் ஐ.நா-வால் முன்னெடுக்கப்பட்டன.

பூமியில் வாழ்கிற ஒவ்வொரு உயிரினங்களையும் காப்போம்; இப்பூமியின் சமநிலையைக் குலைக்காமல் இருப்போம்.

இப்படி ஒரு நோக்கோடு 1993-ம் ஆண்டு முதல் 2000 ஆவது ஆண்டு வரை டிசம்பர் 29 அன்று சர்வதேச பல்லுயிர் பெருக்கம் தினம் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அது மே 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

2022-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட குன்மிங் – மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்பெருக்கக் கட்டமைப்பு, 2050ஆம் ஆண்டுக்குள் இயற்கையில் நிகழும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வரையறுத்துச் செயல்படுத்துவது குறித்த வழிமுறைகளை முன்வைத்தது.

அதன் ஒருபகுதியாக நாம் அனைவரும் திகழ வேண்டும் என்பதைச் சொல்லும் வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான இத்தினத்தின் கருப்பொருளாக ‘திட்டத்தின் ஒரு பகுதியாவோம்’ என்பது கொள்ளப்பட்டுள்ளது.

அளவுக்கு மீறிப் பெறப்படும் வளங்கள் எப்போதும் சுனையின் வேரை அறுக்கவே வழிவகுக்கும். மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும்.

அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.

இயற்கையை மீறி முன்னேறச் செல்ல முயலாமல், அதனோடு ஒட்டி உறவாடி வாழ்ந்தாலே அதனை எளிதாகக் கைக்கொள்ளலாம். வாருங்கள், ‘பல்லுயிர் பெருக்கம் பேணுவோம்; மனிதகுலத்தின் மாண்பைக் காப்போம்’!

  • மாபா
You might also like