‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ என்ற மலையாளப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் பிரமிக்க வைத்தது. இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதற்குக் காரணம், அதன் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். அவர் தந்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25’, ‘கனகம் காமினி கலகம்’, ‘ன்னா தான் கேஸ் கொடு’ படங்கள் வெவ்வேறு விதமான அனுபவத்தைத் தந்திருந்தன.
அதுவே இப்படம் நிச்சயம் சிறப்பானதாக இருக்குமென்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல், ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தில் இடம்பெற்ற சுரேஷ், சுமலதா எனும் பாத்திரங்களின் காதலை இதில் இயக்குனர் பிரதானப்படுத்தியிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு.
ஒரு காதல்!
சுரேஷும் (ராஜேஷ் மாதவன்) சுமலதாவும் (சித்ரா) காதலர்கள். ஒருவரையொருவர் உயிராக நேசிக்கின்றனர்; எக்காலத்திலும் பிரியக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.
தோழன் பகவதி (சரத் ரவி) உடன் வரும் சுரேஷ் காதல் பார்வையை வீச, தோழிகள் புடைசூழ வலம் வரும் சுமலதா அதனை கபக்கென்று அள்ளிக்கொள்வது வழக்கமான ஒன்று.
பாட்டியின் இறப்பையொட்டி வீடு திரும்பும் சுரேஷ், ஒரு பிரிவுக்குப் பிறகு சுமலதாவைக் காண்கிறார். அவரைத் தொடர்ந்து காணும் வகையில், ஒரு நாடகமொன்றை இயக்க முடிவு செய்கிறார்.
காரணம், அந்த கிராமத்தில் வாழ்ந்த சுரேஷ், சுமலதாவின் தந்தை நாஹர் (சுதீஷ்) உட்படப் பலர் நாடகப் பித்தர்களாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்.
நாஹரைச் சந்திக்கும் சாக்கில் சுமலதா உடனான காதலை வளர்க்க முடிவு செய்கிறார் சுரேஷ். நாடகம் வளர வளரக் காதலும் நீள்கிறது.
அந்த காலகட்டத்தில், நாஹரின் குடி போதையை நிறுத்த ஒரு நாடகமாடுகிறார் சுரேஷ்.
போதையில் இருக்கும் அவரை கிறிஸ்துமஸ் சாண்டா வேடத்தில் சென்று தாக்குகிறார்.
சுரேஷின் சகோதரர்கள் ஆளுக்கொரு திசையில் வீட்டுக்குள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடக ஒத்திகை அவர்களை ஒன்றிணைக்கிறது.
சுமலதா மீது பிரேமம் கொண்டு திரியும் பிரியேஷின் தந்தை எம்டியின் வாழ்விலும் அது மாற்றத்தை நிகழ்த்துகிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வளர்த்த தாடி மீசையை அவர் இந்த நாடகத்திற்காகத் தியாகம் செய்கிறார்.
இப்படிப் பல நல்மாற்றங்களை நிகழ்த்தும் அந்த நாடக ஒத்திகை, ஒருநாள் சுமலதா – சுரேஷின் காதலையும் வெட்டவெளிச்சமாக்குகிறது. காதலர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார் நாஹர்.
நாடகம் அரங்கேறும் தினமன்று சுரேஷை தாக்குகிறார் நாஹர். மனமொடியும் சுரேஷ், இந்தச் சமூகம் நமது காதலை வாழ விடாது என்று சுமலதாவிடம் சொல்கிறார். இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுக்கின்றனர்.
ஆனால், சுமலதா மலையுச்சியில் இருந்து கீழேயிருக்கும் நீர்நிலையில் குதிக்க, பயத்தில் அங்கிருந்து ஓடுகிறார் சுரேஷ். காதலன் தன்னோடு இல்லாதது கண்டு திகைக்கும் சுமலதா வெளியே வருகிறார்.
அதேநேரத்தில், காதலி இறக்கத் தான் காரணமாகிவிட்டோம் எனும் எண்ணத்தில் வெவ்வேறு ஊர்களில் சுற்றித் திரிகிறார் சுரேஷ். அவரை ஒருநாள் போலீசார் பிடிக்கின்றனர்.
காவல் நிலையத்தில் சுரேஷ் – சுமலதா தரப்பினர் மத்தியில் பஞ்சாயத்து நடக்கிறது. அப்போது, இருவரும் இனி சந்திக்க, பேசக் கூடாது என்று முடிவாகிறது. ’தன்னிடத்தில் காதல் இல்லை’ என்று சுமலதா சொல்ல, சுரேஷும் அவ்வாறே சொல்கிறார்.
ஆனால், காவல்நிலைய வாசலிலேயே சுமலதாவிடம் ‘நாம் மீண்டும் ஒன்றிணைவோம்’ என்கிறார் சுரேஷ். ஆனால், அவரோ ‘சேர்ந்து சாக வேண்டுமென்று முடிவு செய்தால் சாக வேண்டும். அப்படியல்லாத காதல் எனக்குத் தேவையில்லை’ என்கிறார்.
சுமலதாவுக்கு நீச்சல் தெரியும் என்பது எப்படி சுரேஷுக்கு தெரியாதோ, போலவே சுரேஷுக்கு நீச்சல் தெரியாது என்பதும் சுமலதாவுக்கு தெரியாது. அதனால் நிகழ்ந்ததுதான் மேற்சொன்ன களேபரம்.
அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை சுரேஷ் குழுவினர் ஒத்திகை செய்த நாடகம் அரங்கேற ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
அது அரங்கேறியதா, சுரேஷின் ஆத்மார்த்தமான காதலை சுமலதா புரிந்து கொண்டாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
காதலைத் தவிர வேறொன்றுமில்லை என்று படத்தின் டைட்டில் சொன்னாலும், கதையும் காட்சிகளும் அவ்வாறே அமைந்தாலும், அதனைத் தாண்டி நிறைய பேசுகிறது இப்படம்.
மிரட்டலான நடிப்பு!
சுரேஷ் ஆக நடித்த ராஜேஷ் மாதவனும் சரி; சுமலதாவாக நடித்த சித்ராவும் சரி; பிரதான பாத்திரங்களில் பெரிதாகத் தோன்றியதில்லை.
மிகச்சாதாரணமாகத் திரையில் தெரியும் அவர்களது தோற்றத்தையே ஒரு சிறப்பாக மாற்றி, இருவரையும் நாயகன் நாயகியாக நடமாட விட்டிருக்கிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன்.
அதற்கேற்ப ராஜேஷ் மாதவன், சித்ராவின் நடிப்பு அபாரமானதாக உள்ளது. தமிழில் அவ்வப்போது நகைச்சுவை கலந்த சீரியஸ் பாத்திரங்களில் நடிக்கும் சரத் ரவி, இதில் நாயகனின் நண்பனாகத் தோன்றியுள்ளார்.
சுதீஷ் இதில் நாயகியின் தந்தையாக வந்து, தனது 30 ஆண்டு கால நடிப்பனுபவத்தின் சிறப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல், இப்படத்தில் சுமார் இரண்டு டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள். அனைவருமே மிகச்சிறப்பான பெர்பார்மன்ஸ் தந்துள்ளனர்.
மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கின்றனர் என்பதே உண்மை. அனைவருக்கும் இதில் கெட்டப் மாற்றம் உண்டு என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
ஆமாம், இப்படமானது மிகச்சாதாரணமான காதல் கதையாக இருந்தாலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது.
அதாவது நாயகன் நாயகி முதல் அவர்கள் சார்ந்தவர்கள் வரை, கதையில் அவர்களது பாத்திரங்களிலோ, செய்கையிலோ, குணாதிசயங்களிலோ மாற்றம் கிடையாது.
அதேநேரத்தில் 1960களில், 1990களில், 2020களில் வாழ்பவர்களாக அவர்களைக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அதனால், ஒரு காட்சியில் நாயகன் நாயகியிடம் காதலைத் தெரிவிக்கும்போது ஒரு காலகட்டம் திரையில் இடம்பெற்றால், அடுத்த காட்சியில் வேறொரு காலகட்டத்தில் வாழும்போது அக்காதலுக்கு அவர்கள் ‘ரியாக்ட்’ செய்வது காட்டப்படும்.
நாயகியின் தந்தை தாய் முதல் நாயகனின் சகோதரர்கள், அவர்களது மனைவிகள், தாய், தந்தை உட்பட ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மாற்றங்களும் இவ்வாறே திரையில் அமைந்துள்ளது. அது முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், பிறகு அதுவே இப்படத்தின் யுஎஸ்பி என்பது பிடிபடுகிறது.
அசாத்தியமான கற்பனை!
‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தில் குஞ்சாக்கோ போபன் ஏற்ற கொழுமல் ராஜீவன் பாத்திரம் எம்.எல்.ஏ.வின் வீட்டில் புகுந்து திருடியதாகப் பொய்யாகக் குற்றம்சாட்டப்படும்போது, சம்பவம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் தினத்தில் அவர் மீது விபத்து ஏற்படுத்தியதாக ஒரு ஆட்டோ ஓட்டுநர் சாட்சியம் அளிப்பார்.
தனது பெயர் சுரேஷ் என்றும், காதலி சுமலதா சம்பவம் நடந்த தினமன்று தன்னோடு ஆட்டோவில் இருந்தார் என்றும் சொல்வதாக அக்காட்சி இருக்கும்.
அதற்கு முந்தைய காட்சியில், திருவிழாவில் ஒரு நாடகம் நடப்பதைக் காணச் செல்வார் ராஜீவன்.
இவ்விரண்டு காட்சிகளில் இருந்தும் ’SSHP’ கதையை உருவாக்கியிருக்கிறார் ரதீஷ் பாலகிருஷ்ணன். அந்த கற்பனை அசாத்தியமானது.
அது மட்டுமல்லாமல், இப்படத்தில் திரைக்கதைக்கான இலக்கணத்தையும் மிக எளிதாக மீறியிருக்கிறார்.
ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு மாறுவதை பார்வையாளர்கள் உணரக் களங்களும் கால நேரமும் மாறுவதைப் பயன்படுத்துவார்கள் திரைக்கலைஞர்கள். அவற்றில் ‘கண்டினியூடி’ விட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது பெரும்பாடான ஒன்று.
ஆனால், அந்த நியதியை மீறிக் குறிப்பிட்ட பாத்திரங்களை வெவ்வேறு காலகட்டத்திற்கேற்ப வெவ்வேறு தோற்றத்துடன் ஒரேமாதிரியான உணர்வெழுச்சியை வெளிப்படுத்தும் காட்சியின் தன்மையோடு பொருத்த முயற்சித்து வெற்றி கண்டிருக்கிறார் ரதீஷ் பாலகிருஷ்ணன்.
கூடவே, இந்த இலக்கண மீறலைக் கொண்டு காலம்காலமாக நம் சமூகத்தில் காதலானது சாதி, மதம், இனம் உள்ளிட்ட பல வேறுபடுகளைக் கொண்டு சிதைக்கப்படுகிறது என்று உணர்த்த விரும்பியிருக்கிறார்.
இன்றைய காதலர்கள் ஒரு பிரிவுக்குப் பிறகு என்னவாகின்றனர் என்பதையும் போகிறபோக்கில் விமர்சனம் செய்திருக்கிறார். காதல் குறித்தான அவரது பன்முகப் பார்வைக்கு நமது தனிப்பட்ட பாராட்டுகள்!
டான் வின்சென்ட்டின் இசை இப்படத்தின் இன்னொரு சிறப்பு. பின்னணி இசை மட்டுமல்லாமல் கிளாசிக் அனுபவத்தைத் தருகின்றன ’சங்குரிச்சாலு’, ’சுண்டலானு’, ‘போண்டா’, ’நாடகே நாடகம்’, ’பிரேமலோலா’ பாடல்கள்.
சங்குரிச்சாலு பாடலில் நடனமாடியவர்களின் பங்களிப்பும், அதனைக் காட்சியாக்கம் செய்திருக்கும் விதமும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அந்த கொரியோகிராபி நிச்சயம் தேசிய விருதைப் பெறும் தகுதி கொண்டது.
படத்தொகுப்பாளர் ஆகாஷ் தாமஸ், ஒளிப்பதிவாளர் சபின் உரலிகண்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கே.கே.முரளிதரன், கலை இயக்குனர்கள் ஜித்து செபாஸ்டியன், மிதுன் சலிசேரி, ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவையைக் கையாண்ட அனில் ராதாகிருஷ்ணன் மற்றும் சினு ஜோசப், ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன், ஒப்பனையாளர் லிபின் மோகனன், ஸ்டண்ட் கொரியோகிராபர் மாபியா சசி என்று பல்வேறு கலைஞர்களின் பணி இதில் சிறப்புற அமைந்துள்ளது.
காதலில் திளைக்கும் ஒரு ஆண், பெண்ணைத் திரையில் காட்டி, எந்தக் காலகட்டமானாலும் அவர்கள் மீதான அடக்குமுறை மாறுவதில்லை என்று திரையில் கூறுகிறது SSHP.
மேலோட்டமாக நோக்கினால் சாதாரணமானதாகத் தோன்றும் இப்படத்தின் கதை; ஆனால், சிறப்பானதொரு காட்சியாக்கம் வழியே அசாதாரணமான அனுபவமொன்றை ரசிகர்களுக்குத் தருகிறது இப்படம்.
இப்படம் ஓடிடியில் வெளியாகும்போது உலகம் முழுக்கப் பெரும் வரவேற்பைப் பெறும்!