உயிர் தமிழுக்கு – பம்முவது புலியா, பூனையா?

நிகழ்கால அரசியலைக் கிண்டலடிக்கும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே வெளியாகும். அதனை வெளிப்படுத்தப் பெரியளவில் துணிவும் தைரியமும் வேண்டும்.

சோவின் ‘முகம்மது பின் துக்ளக்’, மணிவண்ணனின் ‘அமைதிப்படை’, ஆர்.கே.செல்வமணியின் ‘மக்களாட்சி’ என்று சில படங்களை அதற்கு உதாரணம் காட்டலாம். அவை கூட முழுமையாக அப்பணியைச் செய்யவில்லை என்று சிலர் விமர்சிப்பது தனிக்கதை.

மேற்சொன்ன வரிசையில் சேரும் ஒரு படமாக ‘உயிர் தமிழுக்கு’ அமைய வேண்டுமென்று நாயகன் அமீர் முதல் இயக்குனர் ஆதம் பாவா வரை பலரும் விரும்பியிருக்கின்றனர்.
சரி, அந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றியை எட்டியுள்ளது?

அரசியல் கதைக்களம்!

தேனியைச் சேர்ந்த பாண்டியன் (அமீர்) கேபிள் கடையொன்றை நடத்தி வருகிறார். எம்ஜிஆர் ரசிகரான அவர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நல்லது செய்து கொஞ்சம் பெயரைச் சம்பாதித்திருக்கிறார்.

பாண்டியனின் நண்பர் சுடலை (இமான் அண்ணாச்சி) உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்யச் செல்கிறார். உடன் பாண்டியனையும் அழைத்துப் போகிறார்.

போன இடத்தில், பழக்கடையார் (ஆனந்தராஜ்) மகள் தமிழ்செல்வியைச் (சாந்தினி ஸ்ரீதரன்) சந்திக்கிறார் பாண்டியன். உடனடியாக, அவர் மீது காதல் கொள்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்செல்வியை அடிக்கடி பார்க்க முடியும் என்றெண்ணுபவர், சுடலையிடம் அந்த வாய்ப்பு தனக்கு வேண்டும் என்று சொல்கிறார்.

வெளியூரைச் சேர்ந்த தன்னை ஒரு இக்கட்டான சூழலில் காப்பாற்றியவர் பாண்டியன் என்ற காரணத்தால், அரசியல் கட்சித் தலைமை தனக்களித்த வாய்ப்பை அவருக்கு வழங்குகிறார் சுடலை. அதற்காக, கட்சியின் மாவட்டச் செயலாளரிடம் (ராஜ் கபூர்) வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

பிரசாரத்தின்போது தமிழ் வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறார் பாண்டியன். ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பழக்கடையாருக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அந்த தேர்தலில் தமிழ்செல்வியும் பாண்டியனும் அடுத்தடுத்த வார்டுகளில் வெற்றி பெறுகின்றனர். கூடவே, பாண்டியன் மீது காதலில் விழுகிறார் தமிழ்செல்வி.

ஒருகட்டத்தில் தனது மகளும் பாண்டியனை விரும்புவது அறிந்து, பழக்கடையார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

தந்தையின் விருப்பத்திற்காக, வெளிநாடு சென்றுவிடுகிறார் தமிழ்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து, பழக்கடையார் படுகொலை செய்யப்பட்ட தகவலைக் கேள்விப்பட்டு அவர் நாடு திரும்புகிறார். அந்தக் கொலையைச் செய்தது ஆளுங்கட்சியைச் சேர்ந்த சென்னை மாவட்டச் செயலாளர் பாண்டியன் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

அதையடுத்து, காதலர் பாண்டியன் மீது கொலை வெறி கொள்கிறார் தமிழ் செல்வி. அதன்பிறகு என்னவானது? உண்மையில் பழக்கடையாரைக் கொன்றது யார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் போலீசாரின் தடையையும் மீறி, துக்க வீட்டிற்கு பாண்டியன் மத்திய அமைச்சர் ஒருவருடன் செல்வதில் இருந்து ‘உயிர் தமிழுக்கு’ திரைக்கதை தொடங்குகிறது. பிளாஷ்பேக்கில் கடந்த கால கதை விரிகிறது.

முழுக்கவே அரசியல் கதைக்களமாக இருந்தாலும், இதில் அது குறித்த நுணுக்கமான விவரிப்புகள் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், நிகழ்கால அரசியலை வசனங்களில் கிண்டலடிக்கும் இடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுகின்றன.

சூடான வசனங்கள்!

இயக்குனராக மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த விவாதங்கள், பொது நிகழ்ச்சிகளிலும் தனக்கென்று தனியான அடையாளத்தைக் கொண்டிருப்பவர் அமீர். அதையே மூலதனமாகக் கொண்டு, இதில் அவர் ஏற்ற பாண்டியன் பாத்திரம் வார்க்கப்பட்டுள்ளது.

முன்னணி கதாநாயகர்கள் நடிக்கிற, வழக்கமான ஹீரோயிச பார்முலா உடன் கொஞ்சமாய் ‘அமைதிப்படை’ சத்யராஜ், ‘உள்ளே வெளியே’ பார்த்திபன் என்று சில நாயகர்களின் மேனரிசங்களை கொண்டு தான் ஏற்ற அரசியல்வாதி பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அமீர்.

படத்தில் பல சூடான வசனங்கள் உண்டு; அவை நடப்பு அரசியலில் உள்ள பல்வேறு கட்சிகளை, அது சார்ந்த தலைவர்களை, நிகழ்வுகளைக் கிண்டலடிக்கின்றன. அதற்கு உறுதுணையாக இருந்தார் என்பதைத் தவிர, இப்படத்தில் அமீரின் பங்களிப்பை நம்மால் கொண்டாட முடிவதில்லை.

சாந்தினி ஸ்ரீதரன் இதில் நாயகியாக வருகிறார். பிளாஷ்பேக்கில் பாந்தமாகத் தென்படுபவர், சில காட்சிகளில் மட்டும் உடல் பருத்து ‘இவர் வேறொருவரா’ என்று கேட்கும் அளவுக்குத் தோன்றியிருக்கிறார்.

படத்தில் ஆனந்தராஜ், ராஜ்கபூர், ராஜசிம்மன், மகாநதி சங்கர், சரவணசக்தி, மறைந்த மாரிமுத்து என்று பலரும் வந்து போகின்றனர். அவர்களில் அமீர் உடன் இமான் மட்டுமே மனதில் நிற்கிறார்.

அமீர் உடன் அல்லக்கைகளாக வருபவர்களில் சிலர் ஏற்கனவே சில படங்களில் சிறப்பான பாத்திரங்களை ஏற்றவர்கள் தான்.

ஆனால், அவர்களுக்கு வசனம் பேசக் கூட வாய்ப்பு தரப்படவில்லை. இறுதிக்கட்டத்தில் அவை ‘கட்’ ஆகியிருக்கின்றன என்பதே அனுமானம்.

போலவே, ஆனந்தராஜின் உடன் வருபவர்களில் பலர் சில காட்சிகளில் ‘ஆப்செண்ட்’ ஆகி நம் பொறுமையைச் சோதிக்கின்றனர். அந்த வகையில் சம்பத் ராம், அர்ஜுனன் போன்றவர்கள் அந்த வரிசையில் சேர்கின்றனர்.

தேவராஜின் ஒளிப்பதிவு, ஏ.கே.முத்துவின் கலை வடிவமைப்பு, அசோக் சார்லஸின் படத்தொகுப்பு, அசோக்கின் ஸ்டண்ட் வடிவமைப்பு என்று பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து ஒரு மிகச்சாதாரண கதையை ‘கமர்ஷியல் திரைப்படமாக’ உருமாற்றியிருக்கின்றன.

’உன்னைய மாதிரி டேபிளுக்கு கீழே கால்ல விழுந்து அரசியலுக்கு வரலை’ என்பது போன்ற வார்த்தைகள் தொடங்கி வாக்கு எந்திரத்தை விமர்சிப்பது வரை படுசூடாக அரசியல் பேசியிருக்கிறது வசனத்தைக் கையாண்டிருக்கும் அஜயன் பாலா, பாலமுரளி வர்மனின் இணை. அவற்றில் சில தணிக்கையில் ‘மியூட்’ ஆகியிருக்கின்றன.

வித்யா சாகர் இதன் இசையமைப்பாளர். பாடல்களை விடப் பின்னணி இசையில் அதனை எளிதாக உணர முடிகிறது.

தனது அனுபவத்தின் துணையோடு, காட்சிகளில் ஹீரோயிசத்தை அவர் உயர்த்தியிருக்கிறார்.

ஆதம் பாவா இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைத்தாலும், ஒரு படமாகத் திருப்திப்படுத்தும் அளவுக்கு ‘உயிர் தமிழுக்கு’ இல்லை என்பதே உண்மை.

நாயகி ஏன் நாயகனை வெறுக்கிறார் என்று திரைக்கதையில் புதைந்திருக்கும் கேள்விக்குப் படத்தில் பதிலே இல்லை. ஆறு ஆண்டுகள் இருவரும் என்ன செய்தார்கள், காதலை மொபைல் போனில் பேசியே வளர்த்தார்களா என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.

அதுவே, சுமார் 20 சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்யாமலேயே படத்தை இயக்குனர் ரிலீஸ் செய்துவிட்டாரோ என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

பூனையா, புலியா?

பெரிதாகத் திருப்பங்கள் ஏதும் இல்லாமல் ஒரு சாதாரண கதைக்குத் திரையுருவம் தந்திருப்பதில் வருத்தமில்லை. அதேநேரத்தில் புரட்சிகரமான கருத்துகளையோ, புதுமையான கதை சொல்லலையோ எதிர்பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே தரும்.

தேனியில் இருந்த பழக்கடையாரும் கேபிள் பாண்டியனும் சென்னை சைதாப்பேட்டைக்கு எப்போது ‘ஷிப்ட்’ ஆனார்கள் என்பதைச் சொல்லாதது திரைக்கதையில் இருக்கும் பெரிய ஓட்டைகளில் ஒன்று.

’அமைதிப்படை’ பாணியில் வெளியான சில அரசியல் நையாண்டி படங்கள் எந்தக் கட்சியையும் பட்டவர்த்தனமாக விமர்சிக்காமல் கையைக் கட்டி நின்று கொண்டன.

அதிலிருந்து சற்றே விலகிச் சில விமர்சனங்களைக் கக்கியிருக்கிறது ‘உயிர் தமிழுக்கு’.

ஆனால், அதிலும் பம்மல் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

‘காதலுக்காக அரசியலுக்கு வந்தவன் நான்’ என்று ஒரு இடத்தில் வசனம் பேசுகிறார் அமீர். அந்தக் காதலை முழுமையாக உணர வைத்திருக்கலாம். இல்லை, அரசியல் களத்தைச் சூடாகத் திரையில் காண்பித்திருக்கலாம்.

இரண்டையும் செய்யாமல், அமீரை ஒரு சாதாரண நாயகனாகவே முன்னிறுத்துகிறது ‘உயிர் தமிழுக்கு’. புலியின் உறுமலை எதிர்பார்த்தால், பூனை கிறீச்சிடும் ஒலியே கிடைக்கிறது. ‘மியாவ்’ சத்தம் போதும் என்பவர்கள் மட்டும் இதனை ரசிக்கலாம்!

-உதய் பாடகலிங்கம்

You might also like