கட்சி மாநாட்டில் மாணவர்களைச் சந்திக்கும் விஜய்!

உதவித் தொகை வழங்கவும் திட்டம்!

ரஜினிகாந்துக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம், தனக்கு சேர்ந்த தருணத்திலேயே, அரசியலில் குதிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார், விஜய்.

அதற்கான ஆரம்பப் புள்ளியாக, தனது விஜய் ரசிகர் மன்றத்தை, ‘விஜய் மக்கள் இயக்கம்’ எனும் பெயராக மாற்றம் செய்தார். தொடர்ச்சியாக பல்வேறு சமூகப் பணிகளை இந்த இயக்கம் மேற்கொண்டது.

உச்சமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2 தேர்வில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்.

சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கி கவுரவம் செய்தார், விஜய்.

பிளஸ்-2 பரீட்சையில் 600-க்கு 600 மார்க் வாங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு ‘வைர நெக்லஸ்’ அளித்தார்.

விஜயின் இந்த செயல்கள், அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

கட்சி ஆரம்பித்தார்

’காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்’ எனும் முதுமொழிக்கு ஏற்ப, இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார், விஜய்.

சுருக்கமாக தவெக, கட்சி தொடங்கினாலும், ‘’தமிழக வெற்றிக் கழகம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப் போவதில்லை – இந்த தேர்தலில், யாருக்கும் ஆதரவில்லை” என தெளிவு படக்கூறிய விஜய், ‘2026-ம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்றத்எதேர்தலே எனது இலக்கு’ என உறுதி படத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகிறார்கள், கட்சி நிர்வாகிகள்.

உறுப்பினர் சேர்க்கைக்காக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக த.வெ.க. அறிவித்துள்ளது.

விரைவில் சந்திப்போம்

இந்தநிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ வலைத்தளப் பக்கத்தில், விஜய், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

’மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள் – அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ள விஜய்,  “விரைவில் சந்திப்போம்’’ என்றும் கூறியுள்ளார்.

மதுரை மாநாட்டில் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஜுன் மாதம் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதன் பிறகு தவெக கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்த நாளான ஜுன் மாதம் 22-ம் தேதி இந்த மாநாடு நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த மாநாட்டில் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை அவர் அறிமுகம் செய்ய உள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார். கடந்த ஆண்டு அளித்தது போல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் விஜய் முடிவு செய்துள்ளார்.

– மு.மாடக்கண்ணு

You might also like