எண்பதுகளில் மம்முட்டி, மோகன்லால், தொண்ணூறுகளில் ஜெயராம், சுரேஷ்கோபி, முகேஷ் போன்ற நாயகர்கள் மலையாளத் திரையுலகில் அடையாளம் காணப்பட்டார்கள் என்று சொன்னால், 2000ஆவது ஆண்டுவாக்கில் குஞ்சாக்கோ போபன், திலீப் போன்றவர்கள் நட்சத்திர அந்தஸ்தை பெற்றனர்.
குறிப்பாக மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்த இடத்தில் திலீப் இருந்தார். நகைச்சுவையோடு கலந்த காதல், சென்மெண்ட் படங்களோடு பின்னாட்களில் ஆக்ஷனையும் அவர் கையிலெடுத்தார்.
2010-க்கு பிறகு மலையாளத் திரையுலகில் வீசிய புதிய அலை அவரது படங்களுக்கான வரவேற்பைக் குறைத்தது. கடந்த ஐந்தாண்டுகளில் அவரது படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. சமீபத்தில் வெளியான ‘தங்கமணி’யும் அதில் அடக்கம்.
இந்தச் சூழலில், தற்போது ‘பவி கேர்டேக்கர்’ வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குனர் வினீத்குமாரும் ஒரு நடிகர் தான்.
‘பவி கேர்டேக்கர்’ எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது? இது முழுக்க நகைச்சுவையைக் கொண்ட படமா?
நடுத்தர வயதுக்குரிய ஏக்கங்கள்!
பவித்ரன் என்ற பவி (திலீப்), கொச்சியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பணியாற்றுகிறார். இரவில் செக்யூரிட்டியாகவும், பகல் பொழுதில் ‘கேர்டேக்கர்’ ஆகவும் இருக்கிறார்.
அவரது சகோதரி தனது குடும்பத்தோடு வெளியூரில் வசிக்கிறார். அதனால், அவருக்குத் தெரிந்தவர்கள் என்று அந்த ஊரில் எவருமில்லை.
நிறைய பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆவது என்று எண்ணத்திலேயே, நடுத்தர வயதை எட்டியவர் பவி. வாழ்க்கைத் துணை என்று எவரும் வாய்க்கவில்லை.
ப்ரோ எனும் நாயை பவி வளர்த்து வருகிறார். அந்தக் குடியிருப்பில் வளர்ப்பு மிருகங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், மரியம்மா (ராதிகா) எனும் பெண்மணிக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார். இரவில் பணி முடித்துவிட்டு வந்து, காலையில் அங்கு உறங்குவது அவரது வழக்கம்.
அந்த குடியிருப்பில் வசிக்கும் பெண்ணான ஜானகி (ஸ்ரேயா ருக்மிணி), அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ஸ்ருதி (திலீனா ராமகிருஷ்ணன்), அவரோடு சேர்ந்து வேலை செய்யும் லீனா (ஸ்வாதி கொண்டே) என்ற பெண், குடியிருப்புக்குத் தபால்களை எடுத்துவரும் ஜீனா (ரோஸ்மின் தடத்தில்) மற்றும் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லித்தரும் பெண் (ஜுஹி ஜெயகுமார்) ஆகியோர் மீது பவிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
தினமும் அவர்களைப் பார்த்தாலும், அந்த ஈர்ப்பை அவர் நேரடியாக வெளிப்படுத்தத் தயங்குகிறார். அதன் எதிர்வினையாக, அவரது செயல்பாடுகள் அவர்களுக்கு வினோதமாகத் தெரிகின்றன.
அந்த பெண்களைக் காக்கிறேன் பேர்வழி என்று அவர்களது சுய விருப்பங்களில் தலையிடுகிறார் பவி. தனது தவறான புரிதலால் எரிச்சலூட்டுகிறார். உதவி செய்கிறேன் என்று பல அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறார். ஆனால், அவர்கள் எவரும் பவியிடம் பெரிதாக ஆத்திரப்படுவதில்லை.
இந்த நிலையில், பவியின் வீட்டில் இரவில் ஒரு நபர் தங்கப்போவதாகச் சொல்கிறார் மரியம்மா. அது அவரை எரிச்சல்படுத்துகிறது.
எதையாவது செய்து, அந்த நபரை விரட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார் பவி.
அவர் ஒரு பெண் என்று அறிந்ததும், கூடுதலாகத் தாம்தூம் என்று குதிக்கிறார்.
ஒருகட்டத்தில் அந்த கொதிப்பு அடங்கி, அந்த பெண்ணிடம் சமாதானம் பேச முயல்கிறார்.
அந்தப் பெண் இருக்கும்போது பவி வீட்டுப்பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என்பது மரியம்மாவின் நிபந்தனை. அதனால், குறிப்பொன்றை எழுதி வீட்டில் வைத்துவிட்டுச் செல்கிறார்.
அதில், ‘இதுவரை நான் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவும்’ என்றிருக்கிறது. ‘நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லை’ என்று அந்தப் பெண் பதில் அளிக்கிறார்.
மெல்ல மெல்ல, இருவருக்குமான உரையாடல் அந்தக் குறிப்புகள் வழியே நிகழ்கின்றன. ஒருகட்டத்தில் அந்த பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார் பவி. தனது மொபைல் எண்ணையும் கொடுக்கிறார். தன்னையும் அறியாமல் அவர் மீது காதல்வயப்படுகிறார்.
அதன்பிறகு என்னவானது? அந்தப் பெண்ணைப் பவி நேரில் பார்த்தாரா? தனது காதலைத் தெரிவித்தாரா என்பதனைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
இப்படத்தில் அந்தப் பெண் பவிக்குச் சமையல் செய்து தருவதாகவும், அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோது பவி சமைத்து வைத்துவிட்டு வருவதாகவும் காட்சிகள் உண்டு.
போலவே, முகம் தெரியாத அந்தப் பெண்ணை அவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் காட்சிகள் உண்டு. சித்திக் இயக்கத்தில் திலீப் நடித்த ‘பாடிகார்டு’ படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்டை நினைவூட்டும் வகையில் அவை அமைந்துள்ளன.
போலவே, நாயகன் திருமணமாகாத, நடுத்தர வயதுடையவர் என்பது இந்தி நடிகர் இர்பான் கானின் ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்தை நினைவூட்டுகிறது.
நடுத்தர வயதுக்குரிய ஏக்கங்களோடு வரும் ஒரு நபர் மனதில் காதல் முளைப்பது என்பதே இக்கதையின் அடிநாதம். அதனை மட்டுமே திரைக்கதை பிரதானப்படுத்தியுள்ளது.
அற்புதமான ஒளிப்பதிவு!
வழக்கமாக, மலையாள கமர்ஷியல் படங்களுக்கென்று ஒரு ‘மேக்கிங் ஸ்டைல்’ இருக்கும். இதில் அது சுத்தமாக இல்லை.
’பவி கேர்டேக்கர்’ படத்தின் காட்சியாக்கம், நமக்கு ஐரோப்பிய படமொன்றைப் பார்க்கும் அனுபவத்தைத் தரும். அந்த அளவுக்கு, அனைத்து காட்சிகளும் பளிச்சென்று உள்ளன. சோகமான காட்சிகளிலும் கூட, இருண்மை தெரியாதவாறு அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சனு ஷாகிர்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் நிமேஷ் தனூர், படத்தொகுப்பாளர் தீபு ஜோசப், ஸ்ரீஜித் சீனிவாசனின் ஒலி வடிவமைப்பு, சகி எல்சாவின் ஆடை வடிவமைப்பு என்று இப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு மிகச்சீரிய முறையில் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் மிதுன் முகுந்தன் இதில் தந்திருக்கும் ’பிறகிலாரோ விளிச்சு’, படம் முடிந்து தியேட்டரை விட்டு வந்தபின்னும் நம் மனதில் ரீங்காரமிடுகிறது. இன்ன பிற பாடல்களும் கூட அதே ரகம் தான்.
ரொமான்ஸ், காமெடி காட்சிகளின் தாக்கத்தை நாம் முழுதாக உணரும் வகையில், அவரது பின்னணி இசை உள்ளது.
இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ராஜேஷ் ராகவன், திலீப்பின் தீவிர ரசிகர் என்ற நோக்கோடு இதில் பணியாற்றியிருக்கிறார்.
சில காட்சிகள் ஏற்கனவே பார்த்த திலீப்பின் சில படங்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. எப்படிப்பட்ட திலீப்பை திரையில் ரசிப்போம் என்ற எண்ணத்தோடு அவரது எழுத்தாக்கம் அமைந்திருப்பது சிறப்பு.
அதேநேரத்தில், இக்கதையில் லாஜிக் குறைபாடுகளைத் தேடினால் கணிசமாகக் கண்டெடுக்கலாம் என்பது மிகப்பெரிய குறை.
இயக்குனர் வினீத்குமார், இந்த படத்தில் திலீப் அழகாகத் தெரிய வேண்டும் என்பதில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் திலீப் மட்டுமே வருகிறார். ஆனாலும், நமக்கு பெரிதாக போரடிப்பதில்லை.
அதற்குக் காரணம், வினீத்தின் காட்சியாக்கமே. ஒரு ‘பீல்குட்’ படம் தர வேண்டும் என்ற அவரது நோக்கம் திரையில் தெளிவாகத் தெரிகிறது.
ஏற்கனவே விளையாடி களம் என்றபோதும், தன்னைத்தானே கிண்டலடித்துக் கொள்ளும் பாணியை இதில் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் திலீப். போலவே, காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.
திரைக்கதையின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் ஸ்வாதி கொண்டே, ஸ்ரேயா ருக்மிணிக்கு திரையில் இடம் தந்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால் அந்த வாய்ப்பு கூட ரோஸ்மின் தடத்தில், ஜுஹி ஜெயகுமார், திலீனா ராமகிருஷ்ணனுக்குக் கிடைக்கவில்லை. படம் ஓடும் நேரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று ஐந்து நாயகிகளையும் இன்னும் கொஞ்சம் நேரம் திரையில் காட்டியிருக்கலாம்.
அதுதான் படத்தின் யுஎஸ்பி என்று நினைப்பவர்களை, நிச்சயம் இத்திரைக்கதை ஏமாற்றும். ராதிகாவுக்கு இதில் வேறொருவர் ‘டப்பிங்’ தந்துள்ளார். அக் குரலைக் கேட்டதுமே நம் முகம் திரையை விட்டு வேறு பக்கம் தாவுகிறது.
இவர்கள் தவிர்த்து அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தர்மஜன் போல்காட்டி, ஜானி ஆண்டனி, ஸ்படிகம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
‘பட்டி டிங்கரிங்’ செய்திருக்கலாம்!
ஒரு நடுத்தர வயது ஆண் தான் எதிர்கொள்ளும் பெண்களிடம் எல்லாம் தனது ஈர்ப்பை வேறுவிதமாக வெளிப்படுத்துவதுதான் இக்கதையின் மையப்புள்ளி. ஆனால், அதனைச் சரிவரக் காட்டத் தவறியிருக்கிறது ராஜேஷ் ராகவன் – வினீத் குமார் கூட்டணி.
நாயகிகளுக்குத் திரைக்கதையில் போதுமான இடம் தராதது கூட, அதற்கொரு காரணமாகத் தெரிகிறது. போலவே, அக்குடியிருப்பில் வசிப்பவர்களாக ஒரு சிலரே திரையில் காட்டப்படுகின்றனர்.
அது அரைகுறையாக அச்சூழல் வடிவமைக்கப்பட்ட தோற்றத்தை வடிக்கிறது.
இன்னும் கொஞ்சம் வீரியமாக, அவர்களது முகங்கள் நம் மனதில் பதியும்படி அக்காட்சியாக்கம் அமைந்திருக்கலாம்.
அது போன்ற குறைகளை ‘பட்டி டிங்கரிங்’ செய்திருக்கலாம்.
இவற்றைத் தாண்டி, தியேட்டருக்கு வரும் திலீப் ரசிகர்களை இப்படம் நிச்சயமாகத் திருப்திப்படுத்தும். அதற்கேற்ற விஷயங்கள் இதில் உள்ளன.
போலவே, ‘பவி கேர்டேக்கர்’ படமானது வன்முறை துளியும் இல்லாத, ஆபாசமான வசனங்கள் மற்றும் அருவெருக்கத்தக்க காட்சிகள் இல்லாத ஒரு காட்சியனுபவத்தைத் தருகிறது.
விடுமுறைக் காலத்தில் தியேட்டருக்கு குடும்பத்தோடு வர, அது நிச்சயம் வழிவகுக்கும். அந்த வகையில், நெடுங்காலத்திற்குப் பிறகு திலீப்பின் வெற்றிப்படமாக அமைந்துள்ளது இந்த ‘பவி கேர்டேக்கர்’.
– உதய் பாடகலிங்கம்