சடங்கு, சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை!

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச் செல்ல நேர்ந்தது. நான் போன நேரத்தில் கையில் ஒரு குடையும், காலில் பாதக்குறடுகளும் அணிந்து மாப்பிள்ளை காசியாத்திரைக்குப் புறப்பட, அவரைத் தடுத்து நிறுத்த மணப்பெண்ணின் தந்தை முயற்சித்துக் கொண்டிருந்தார்.

நான் மாப்பிள்ளையின் காதில் மெதுவாகச் சொன்னேன், “காசிக்குச் செல்வதற்கு நேரடியாக விமான சேவை இருக்கும்போது எதற்கு இந்தக் கோலம்?” என்று. இது மட்டுமல்ல… காசி யாத்திரைக்குப் பிறகு கன்யாதானம்.

அதன் பின்னர் கெட்டி மேளத்துடன் தாலி கட்டுவது… பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் விளையாடும் நலங்கு… இப்படி பல திருமணச் சடங்குகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற விகடன் தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம், இப்படிப்பட்ட திருமணச் சடங்குகள் இருப்பதை பலரும் அந்தத் தொடர் மூலமாக முதல்முறையாக தெரிந்து கொண்டதுதான்.

இந்தச் சடங்குகளையெல்லாம் யார் உருவாக்கினார்கள்… அதில் எந்தச் சடங்கு திருமணத்தை நிரூபிக்க அத்தியாவசியமானது? என்பது பற்றி பல உரையாடல்கள் உள்ளன.

ஏனென்றால், இந்தியத் துணைக் கண்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான திருமணச் சடங்குகள், சாதிப் பழக்கவழக்கங்கள், பெரியவர்கள் சொல்லக்கூடிய குடும்ப நடைமுறைகள் என்று ஏராளமான சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கின்றன!

திருமணமும் தீர்ப்பும்…

இந்தப் பின்னணியில், சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்து மதத்தைச் சார்ந்த விமான ஓட்டிகள் இருவர் எளிமையான முறையில் ‘வேதிக் ஜன கல்யாண சமிதி’ என்ற அமைப்பின் கீழ் தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள்.

பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள்.

கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்பதற்கு பதிலாக, தங்களது திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுக்கிறார். சடங்குகள் இல்லாத அந்தத் திருமணம் 1955-ம் வருடத்திய இந்து திருமண சட்டத்தின்படி செல்லாது என்று அறிவிக்கும்படி கேட்கிறார்.

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் புரியும்போது, அதில் அக்னி சாட்சியாக, மணமகனும் மணமகளும் ஏழு அடி நடந்து செல்லவில்லையென்றால் (சப்தபதி) அந்த திருமணம் செல்லாது என்றும், அது திருமணப் பதிவாளரிடம் பதிவு செய்திருந்தாலும் அத்தியாவசிய சடங்குகள் செய்யாததனால் சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றமும் அறிவித்துவிட்டது.

இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும் தங்களது திருமணம் எப்படி நடந்தது என்றும், அதில் உரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்டனவா என்றும், அதிலும் அத்தியாவசியமான அக்னி சாட்சியுடன் சப்தபதி நடைபெற்றதா என்றும் கேள்வி கேட்டுவருகிறார்கள்.

இந்து திருமணச் சட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அது இயற்றப்பட்ட வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ஆட்சி செய்ய முற்பட்டபோது, அவர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த பிரதேசங்களில் திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்துக் கொள்வது போன்றவற்றைப் பற்றி முறையான சட்டங்கள் இல்லாததோடு, ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நடைமுறைகள் இருந்துவந்ததையும் கண்டனர்.

எனவே, ஹென்றி மேயின் என்பவரை வைத்து இந்துக்களின் நடைமுறைகளை ஒருசேர தொகுக்க முயன்றனர். அவரும் தனக்குத் தெரிந்த வக்கீல் நண்பர்கள் மூலம் இந்து சாஸ்திரத்தின்படியிலான சில நடைமுறைகளைத் தொகுத்து அதுதான் ‘இந்துக்கள் சட்டம்’ என்று கூற முற்பட்டார்.

அந்த முயற்சி நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. எனவே, பலரும் தங்களது சௌகரியத்துக்கு ஏற்பவே நடக்க முயன்றனர்.

அண்ணல் அம்பேத்கரின் முயற்சி…

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அண்ணல் அம்பேத்கரிடம் இந்து திருமண, வாரிசுரிமை தொடர்பான சட்டத்தைத் தயார் செய்யும் பொறுப்பு பிரதமர் நேருவால் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, முதன்முறையாக இந்துக்களுக்குப் பொதுவான ஒரு வரைவுச் சட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்துக்களின் திருமணம், அதற்கான உறவு முறைகள், வாரிசுரிமை இவற்றைப் பற்றி அச்சட்டம் கருத்தில் கொண்டதோடு முதன்முறையாக ஒரு தாரத் திருமணம், பெண்களுக்கு மணவிலக்கு கோரும் உரிமை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அந்த வரைவுச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆனால், இந்து மகா சபையைச் சேர்ந்தவர்களும் காங்கிரசில் இருந்த சில பழமைவாத தலைவர்களும் அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். அது குறித்துப் பேசிய 28 காங்கிரஸ் உறுப்பினர்களில் 23 பேர் அச்சட்ட வரைவைக் கடுமையாக எதிர்த்தனர்.

1947-ல் தொடங்கிய இந்த விவாதம் காங்கிரஸ் கட்சி தலைமையின் பலவீனத்தினால் நான்கு வருடமாகியும் முடிவு பெறாமலேயே இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் அந்தச் சட்டமே மரணித்துப்போனது.

இதனால் வெறுப்படைந்த டாக்டர் அம்பேத்கர், தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்றுகூட யோசித்தார்.

நல்வாய்ப்பாக, புதிதாக நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மத சார்பான உரிமை வழங்கப்பட்ட போதும், சமூக சீர்திருத்தம் தொடர்பான சட்டங்கள் இயற்றுவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.

1952 தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பண்டித நேரு அரசில் மீண்டும் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்.

தான் ஏற்கெனவே தயார்செய்த இந்துக்களுக்கான பொது சட்டத்தை ஒதுக்கிவிட்டு, அதையே இந்து திருமண சட்டம், இந்து வாரிசுரிமை சட்டம், இந்து தத்தெடுக்கும் சட்டம், இந்து சிறார்கள் மற்றும் காப்பாளர் சட்டம் என்று நான்கு தனித்தனி சட்டங்களாகத் தயார் செய்தார்.

அந்த சட்டங்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பினாலும், புதிதாக உருவான நாடாளுமன்றத்தில் நேருவுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தால் அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியாரின் முயற்சி…

இருப்பினும் இந்துக்களுக்கான அந்தச் சட்டங்களில் பல குறைபாடுகள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலின வேற்றுமைகள் காணப்பட்டன.

‘இந்துக்கள் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்தாலும், அதற்கு முன்னால் திருமணங்களுக்கான சடங்குகள் நடைபெறவில்லையென்றால், அது செல்லத்தகாத ‘திருமணம்’ என்று கருதப்படும் நிலைதான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் முயற்சியில் சீர்திருத்தத் திருமணங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி நடைபெற்ற சுயமரியாதை திருமணமொன்றை உயர் நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்துவிட்டது.

எனவே, 1967-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற தி.மு.க தலைவர் பேரறிஞர் அண்ணா, இந்து திருமணச் சட்டத்தில் பிரிவு 7A என்ற புதிய பிரிவை உருவாக்கினார்.

சாஸ்திரப்படி சடங்குகள் ஏதுமின்றி நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் இந்து திருமண சட்டப்படி செல்லும் என்றும், அப்படி திருமணம் செய்துகொண்ட மணமக்களை எந்தச் சட்டத்தின் கீழும் தண்டிக்க முடியாது என்றும் அச்சட்டப்பிரிவு அறிவித்தது.

இந்தியாவிலேயே அதுபோன்ற ஒரு சட்டத்திருத்தம் இன்று வரை எந்த மாநிலத்திலும் இயற்றப்படவில்லை. சடங்குகள் தவிர்ப்பது மட்டுமன்றி அதிக பொருட்செலவு இல்லாத திருமணங்களாகத்தான் ஆரம்பத்தில் அவை விளங்கின.

ஆனால் அது போன்ற சாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்பு திருமணங்கள் செய்வதற்கு இதர மாநிலங்களில் எவ்வித ஏற்பாடும் இல்லை.

அப்படிப்பட்ட திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ்தான் செய்துகொள்ள முடியும். அதற்கும் கடினமான வரையறைகள் உள்ளன.

இந்துக்களுக்கான பொதுச் சட்டம்?

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட இந்து திருமணச் சட்ட திருத்தத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. நாகலிங்கம் எதிர் சிவகாமி (2001) என்ற வழக்கில் அச்சட்டப்பிரிவு செல்லும் என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்.

எனவே, இதுபோன்ற சட்டப் பாதுகாப்பு உள்ள தமிழ்நாட்டில் சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மேலும் பொது சிவில் சட்டத்தைப் பற்றி வாய் கிழியப் பேசும் பா.ஜ.க., இந்தியா முழுவதும் இந்துக்களுக்கான பொதுச் சட்டத்தை உருவாக்காததோடு, திருமணங்களையும், வாரிசுரிமைப் பிரச்னையையும் சாஸ்திரத்தின் அடிப்படையில் அணுகாமல் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

சமீபத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கன்யாதான சடங்கு செய்யாத திருமணம் செல்லும் என்றும் அது சாஸ்திரத்தில் முக்கியமல்ல என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காசியாத்திரை தொடங்கி, கன்யாதானம் என்று விரிந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நலங்கு விளையாட்டுகளுடன் நடக்கும் சடங்குகளில் எது தேவை, எது தேவையில்லை என்று ஒவ்வொன்றாக கூறுவதற்குப் பதிலாக தமிழ்நாட்டின் மாடல் திருத்தத்தை அகில இந்திய சட்டமாக அறிவித்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாது.

மேலும் பாதி திருமணச் சடங்குகள் அக்காலத்தில் மிகுதியாக நடைபெற்ற குழந்தைத் திருமணத்தின்போது குழந்தைகளின் அச்ச வெளிப்பாடுகளை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

கன்யாதானமும்கூட மைனர் பெண் குழந்தையைப் பெற்றோர் தாரை வார்த்துக் கொடுக்கும் ஏற்பாட்டின் ஒரு வடிவமே.

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?

– நீதியரசர் கே.சந்துரு எழுதிய கட்டுரை

#சடங்கு #சம்பிரதாயங்கள் #திருமணம் #உச்சநீதிமன்றம் #இந்து_திருமணச்_சட்டம் #காங்கிரஸ் #டாக்டர்_அம்பேத்கர் #இந்திய_அரசமைப்புச்_சட்டம் #தந்தை_பெரியார் #திமுக #அண்ணா #பாஜக #நீதிபதி_கே_சந்துரு #சென்னை_உயர்நீதிமன்றம் #Supreme_Court #Hindu_Marriage_Act #Congress_Dr_Ambedkar #Constitution_of_India #Periyar #DMK #BJP  #Justice K_Chanduru #Madras_High_Court

You might also like