மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்

மனிதர்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக விளங்குகிறது மலேரியா. உலகம் முழுக்கவே இந்த நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் இதன் பாதிப்பு மிகக்குறைவு என்றபோதும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் இன்றுவரை மலேரியாவைக் கண்டு அஞ்சும் நிலையே தொடர்கிறது. அங்குள்ள பெண்களும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதனால் கடுமையாகப் பாதிப்படைகின்றனர்.

வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் பரவும் நோயான மலேரியாவைக் கட்டுப்படுத்த உலகளவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2050-க்குள் பூமியில் இருந்து மலேரியாவை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து நாடுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

மலேரியா பாதிப்பு!

அனோபிலிஸ் எனும் கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு மலேரியா நோய் பரவுகிறது. குறிப்பாக, அந்த வகை பெண் கொசுக்கள் கடிக்கும்போது, பிளாஸ்மோடியம் வகை ஒட்டுண்ணிகள் நம் உடலுக்குள் செலுத்தப்படுவதாலேயே இப்பாதிப்பு ஏற்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, குளிர் நடுக்கம், தசைவலி, சோர்வு ஆகியன மலேரியாவின் அறிகுறிகள் ஆகும். இது குணப்படுத்தக்கூடிய நோய் என்றபோதும், சரியான முறையில் சிகிச்சைகளை மேற்கொள்ளாத போது இதன் தாக்கம் கடுமையாகும். சில நேரங்களில் உயிரிழப்புகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளே மலேரியா நோயினால் பாதிக்கப்படுவதகக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. உலகம் முழுக்கப் பதிவாகும் மலேரியா பாதிப்புகளில் சுமார் 94 சதவிகிதம் அப்பகுதியில் ஏற்படுபவை தான்.

2022-ம் ஆண்டில் மட்டும் 249 மில்லியன் பேருக்குப் புதிதாக மலேரியா தொற்று ஏற்பட்டதாகக் கூறுகிறது அவ்வமைப்பு.

மேலும், அந்த ஆண்டில் 6,08,000 பேர் மலேரியாவினால் உயிரிழந்திருக்கின்றனர். இந்த தரவுகளே, ஆப்பிரிக்க கண்டத்தில் மலேரியா எந்த அளவுக்குப் பாதிப்பை உருவாக்கியுள்ளது என்பதைச் சொல்லும்.

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் ஏழ்மையில் வாடுவதாகவும், கல்வியறிவு குறைவான சூழலில் வாழ்வதாக்வும், நோய்க்கான சிகிச்சை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.

அகதிகள், புகலிடம் தேடுவோர், பழங்குடியின மக்கள், வாழ்வாதாரத்திற்காக மோசமான சூழலில் வாழ்வோர் என்று பலரும் மலேரியாவுக்கு இலக்காகின்றனர். பருவநிலை மாற்றமும், மனித வாழ்வு நெருக்கடிகளும், இயற்கைப் பேரிடர்களும் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடிய சூழலை அதிகப்படுத்துகின்றன.

மலேரியா தினம்!

சுமார் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூமியில் மலேரியா உள்ளதாகக் கூறுகின்றனர் மானுடவியல் அறிஞர்கள். கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் மலேரியா நோய் கண்டறியப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அங்கு வாழ்ந்த மருத்துவ அறிஞர் ஹிப்போகிரேட்டஸ், தட்பவெப்ப நிலைக்கும் தொடர்ச்சியற்ற காய்ச்சலுக்குமான தொடர்பைக் கண்டறிந்தததாகத் தரவுகள் கூறுகின்றன.

1880-ம் ஆண்டில் சார்லஸ் லாவ்ரன் என்பவர், மனித ரத்தத்தில் மலேரியா நோய் ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் இருந்ததைக் கண்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்நோய் குறித்துப் பல ஆய்வுகளும் சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் மலேரியாவினால் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாதிப்பை எதிர்கொள்கின்றன.

மலேரியாவைக் கட்டுப்படுத்துவது, முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக இவ்வுலகில் இருந்து அந்நோயை ஒழிப்பது எனும் நோக்குடன், 2001 முதல் ஆப்பிரிக்க நாடுகளில் ‘உலக மலேரியா தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் முயற்சியால், 2008 முதல் அது உலகம் முழுக்கப் பின்பற்றப்படுகிறது.

’மிக சமத்துவமான உலகை உருவாக்க, மலேரியா நோய்க்கு எதிரான மோதலைத் தீவிரப்படுத்துவோம்’ என்பது 2024 ஆம் ஆண்டு மலேரிய தினத்திற்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

மலேரியா நோய் வந்தபிறகு சிகிச்சைகள் மேற்கொள்வதை விட, ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

அதனால் கொசுக்களின் பரவலைக் கட்டுப்படுத்தவும், ஒட்டுண்ணிகள் பெருக்கத்தைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மலேரியாவைத் தடுப்போம்!

அனோபிலிஸ் கொசுக்கள் மூலமாக இந்நோய் பரவும் என்பதால், கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளே பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுகின்றன.

கொசு வலை பயன்படுத்துவது, தேங்கிய நீரில் கொசு பரவல் இருக்குமென்பதால் அவற்றைச் சுத்தப்படுத்துவது, இருக்குமிடத்தில் கொசு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது,

உடலை மூடுகிற வகையிலான ஆடைகளை அணிவது, மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்கையில் தேவையான மருத்துவப் பரிந்துரைகளைப் பெறுவது,

மலேரியா எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது, கொசுக்களின் பெருக்கம் அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லாமலிருப்பது, முடிந்தவரை சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பார்த்துக் கொள்வது போன்றவற்றின் மூலமாக இந்நோய் பாதிப்பைத் தடுக்க முடியும்.

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே, அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.

– மாபா

You might also like