எதிரி – மெஸ்மரிசம் செய்த விவேக்கின் ‘காமெடி’!

சில படங்களின் நகைச்சுவை மட்டும் நம் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்படியான காட்சியனுபவத்தைத் தரும். அதில் நடித்தவர்களின் படங்கள் வேறு என்ன இருக்கிறது என்று தேடித் தேடி ரசிக்க வைக்கும்.

கே.எஸ்.ரவிக்குமார் – மாதவன் காம்பினேஷனில் வெளியான ‘எதிரி’ படத்தைப் பார்த்த வேறு மொழியினர், வேற்று நாட்டவர் ஒருவர், அப்படி மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் ’பிலிமோகிராஃபி’யை தேடிப் பார்ப்பார்.

அந்த அளவுக்கு, ‘எதிரியில்’ நம்மை மெஸ்மரிசம் செய்யும் வகையில் அமைந்திருக்கும் அவரது நகைச்சுவை.

நகைச்சுவையில் மாதவன்!

2000இல் வெளியான ‘அலைபாயுதே’வில் அறிமுகமான மாதவன், அடுத்தடுத்து நடித்த ‘மின்னலே’, ‘டும் டும் டும்’, ‘ரன்’, ‘அன்பே சிவம்’, ‘நள தமயந்தி’, ‘பிரியமான தோழி’, ‘ஜே ஜே’ படங்களில் தனக்கு நகைச்சுவையாகவும் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்திருப்பார்.

ஆனால், அப்படங்களில் அவரது பாத்திரமே நகைச்சுவையாக வடிக்கப்பட்டிருக்காது. ‘எதிரி’யில் அதனைச் செயல்படுத்திக் காட்டியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார்.

தமிழ்ப் படங்களை ரசிப்பவர்களை ஏ, பி, சி என்று சினிமா வர்த்தகர்கள் தரம் பிரித்த கதை இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு தெரியாது. 2000ஆவது ஆண்டுவாக்கில் கூட அது வழக்கத்தில் இருந்தது. அந்த வகையில் மாதவன் மீது ‘ஏ’ சென்டர் ஹீரோ என்ற முத்திரை இருந்தது.

அதனை மாற்றும்படியாக, ‘கமர்ஷியல் கிங்’ என்று கொண்டாடப்படுகிற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் மாதவன் முதன்முறையாகக் கைகோர்த்தார். அப்படித்தான் ‘எதிரி’ உருவானது. இப்படத்தின் கதையை கமலேஷ் குமார் எழுதியிருந்தார்.

சுப்பிரமணி என்ற அப்பாவி இளைஞன், வாய்ச்சவடால் குணத்தை வெளிப்படுத்தி தன்னை ஒரு ரவுடியாக வெளிக்காட்டிக் கொள்கிறார்.

அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் சம்பத் (விவேக்), அதற்கேற்ப ஒரு கதையை உருவாக்குவார். பாட்டில் மணி என்ற பெயரை அவருக்குச் சூட்டுவார்.

நடராஜன் (டெல்லி கணேஷ்) என்பவரது வீட்டில் சில இளைஞர்கள் வாடகைக்குக் குடி வருகின்றனர். முதலில் அமைதியின் சிகரமாகக் காட்டிக் கொள்கிறாவர்கள், வீட்டுக்கு வந்த சில நாட்களில் அவரது மகள் காயத்ரியைக் (கனிகா) கிண்டலடிக்கத் தொடங்குகின்றனர்.

அந்த இளைஞர்களை வீட்டில் இருந்து விரட்டுவதற்காக, மணியை அழைத்து வருகிறார் நடராஜன். அவரோ, அந்த இளைஞர்களில் ஒருவராக, அந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.

அதன்பிறகு, அந்த இளைஞர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவர் விரும்பும் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கிறது.

அதனைத் தடுத்து, அந்த பெண்ணைக் கடத்தி வர முடிவு செய்கிறார் மணி. அதன்படி அந்த இளைஞர் சொன்ன அடையாளத்தின்படி, திருமண மண்டபத்திற்குச் சென்று மணப்பெண்ணைத் தூக்கிவருவதே மணியின் திட்டம்.

ஆனால், தவறுதலாக இன்னொரு திருமண மண்டபத்திற்குச் செல்லும் மணி, அங்கிருக்கும் பிரியாவைக் (சதா) கடத்தி வந்துவிடுகிறார்.

நடராஜன் வீட்டுக்கு வந்தபிறகே, அனைவருக்கும் உண்மை தெரிய வருகிறது. ஆனால், ‘மீண்டும் வீட்டுக்குச் செல்லமாட்டேன்’ என்று பிரியா அடம்பிடிக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறார் மணி.

அதன்பிறகு பிரியா யார் என்று மணிக்குத் தெரிய வந்ததா? உண்மையை அறியும் பிரியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மணியைச் சும்மாவிட்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு அப்படத்தின் இரண்டாம் பாதியில் சொல்லப்பட்டிருக்கும்.

அவ்வை சண்முகி ‘கமல்’, பிஸ்தா ‘கார்த்திக்’ போன்று மாதவனின் நகைச்சுவை பரிமாணத்தை ‘எதிரி’யில் காட்ட முயற்சித்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

ஏற்கனவே மாதவனுக்கு இருந்த இமேஜை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சில காட்சிகளை அமைத்தவர், சில காட்சிகளில் அதற்கு மாறாக இன்னொரு பரிமாணம் வெளிப்படுமாறு செய்திருந்தார்.

குறிப்பாக, மாதவனின் நகைச்சுவை நடிப்பு திரையில் ரசிக்கப்பட உதவிகரமாக இருந்தார் விவேக்.

இதில் சதாவோடு இன்னொரு நாயகியாக கனிகா நடித்திருப்பார். பெஃப்சி விஜயன், ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, வாசு விக்ரம், மதன் பாப், கனல் கண்ணன், தென்னவன், மீரா கிருஷ்ணன் என்று பலர் இதில் தலைகாட்டியிருப்பார்கள்.

சிரிப்பூட்டும் படம்!

‘எதிரி’யில் விவேக் வரும் காட்சிகள் எதுவுமே யதார்த்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும். அந்த அளவுக்கு முன்பாதி முழுக்க அவரது ‘காமெடி அட்ராசிட்டி’ படுபயங்கரமாக இருக்கும்.

அதுவும் டெல்லி கணேஷ் உடன் அவரது காம்பினேஷன் ‘படு ப்ரெஷ்ஷாக’ இருக்கும். அதன்பிறகு வேறு படங்களில் இருவரையும் சேர்ந்து நடிக்காதது வருத்தம் தரும் விஷயம்.

குறிப்பாக, ‘பாட்ஷா’ படத்தில் ஆனந்தராஜ், யுவராணியின் கையைப் பிடித்திழுக்கும் காட்சியில், சசிகுமாரைப் பார்த்து ’உள்ளே போ..’ என்று ரஜினி ‘ஹை டெசிபலில் கத்துவாரே..! அதனை அப்படியே இமிடேட் செய்து, டெல்லி கணேஷை பார்த்து அந்த வசனத்தை பேசியிருப்பார் விவேக்.

’சிரிப்பு என்ன விலை’ என்று கேட்பவர் கூட, அந்தக் காட்சியில் வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டியிருக்கும்.

அதேநேரத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் கிண்டலடிக்கும்விதமாகச் சில வசனங்கள் அமைந்ததாக, அந்த காலகட்டத்தில் இப்படத்திற்கு எதிர்ப்பும் எழுந்தது.

விவேக் காமெடி போலவே இந்த படத்தின் இன்னொரு சிறப்பு, ரஹ்மானின் வில்லன் பாத்திரம். ‘சங்கமம்’ படத்தில் நாயகனாக நடித்தவர், ‘ராம்’ படத்திற்கு முன்னரே இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்திருப்பார்.

அந்த காலகட்டத்தில் யுவன்சங்கர் ராஜாவின் இசை இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த படத்தில் ‘முதன்முதலாக’ பாடல் மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏனைய பாடல்கள் மிகத்தாமதமாகவே ஆராதிக்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல், டெல்லி கணேஷின் பாத்திரம் வசிக்கும் வீடே இதில் பிரதான இடத்தைப் பிடித்தது. ‘இது குறைந்த பட்ஜெட் படமோ’ எனும் எண்ணத்தை அது அதிகப்படுத்தியது.

அதுவரை வெளியான மாதவன் படங்களில் நிறைந்திருந்த ‘ரிச்னெஸ்’ இதில் இல்லை. ஆனால் அசோக் ராஜனின் ஒளிப்பதிவு, ஜி.கே.வின் கலை வடிவமைப்பு, தணிகாசலத்தின் படத்தொகுப்பு என்று இப்படத்தின் உள்ளடக்கம் கே.எஸ்.ரவிக்குமார் படங்களுக்கான பார்முலாவை அப்படியே பின்பற்றியிருந்தது.

ஏப்ரல் 23, 2004 அன்று ‘எதிரி’ வெளியானது. அந்த ஆண்டில், ஏப்ரல் 14 அன்று சிம்புவின் ‘குத்து’ வெளியானது. இரண்டு நாட்கள் கழித்து விஜய்யின் ‘கில்லி’ ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. ஏப்ரல் 23 அன்று பி.சி.ஸ்ரீராமின் ‘வானம் வசப்படும்’ வந்தது.

மே1 ஆம் தேதியன்று விக்ரமின் ‘அருள்’, அஜித்தின் ‘ஜனா’ வெளியாகின. அதே மாதம் 7ஆம் தேதியன்று சூர்யாவும் ஜோதிகாவும் இரட்டை வேடங்களில் நடித்த ‘பேரழகன்’ வந்தது. மே 21 அன்று மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ வெளியானது.

இப்படித் தொடர்ந்து பல படங்கள் வெளிவந்த காரணத்தால், ‘எதிரி’க்குப் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், ‘சின்ன பட்ஜெட் படம்’ என்ற முத்திரையும் அதன் மீது குத்தப்பட்டது.

அது போன்ற சில காரணங்களால், ‘எதிரி’ பெரிய அளவுக்குக் கொண்டாடப்படவில்லை. ஆனால், பிற்பாடு தொலைக்காட்சிகளில் பல முறை அப்படம் ஒளிபரப்பானது. ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.

‘எதிரி’ வெளியாகி இருபதாண்டுகள் நிறைவுற்றிருக்கின்றன. இன்று, இந்தித் திரையுலகிலகினராலும், ரசிகர்களாலும் மாதவனின் நகைச்சுவை நடிப்பு சிலாகிக்கப்படுகிறது. அதற்கான விதை போட்ட படங்களில் ஒன்றாக ‘எதிரி’யை நிச்சயம் சொல்ல முடியும்.

குறிப்பாக, விவேக் – மாதவன் கூட்டணியில் வெளிவந்த நகைச்சுவையில் ‘மின்னலே’வைப் பின்னுக்குத் தள்ளுவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டது கே.எஸ்.ரவிக்குமார் தந்த ‘எதிரி’!

– உதய் பாடகலிங்கம்

You might also like