இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!

நூல் அறிமுகம்:

ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்’ நூலின் ஆசிரியர் நிகோலாய். 

குழந்தைகளின் சாகசங்களையும் குறும்புகளையும் அவர்களின் உலகத்தில் இருந்து எழுதி இருக்கிறார். இயற்கையை நேசிக்கவும், புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதுதான் இந்தப் படைப்பின் கரு.

கோல்யா என்ற சிறுவன் மேல் வகுப்புக்கு தேர்ச்சி அடைந்து விட்டான். விடுமுறை நாட்களில் நாட்குறிப்பு எழுத முடிவு செய்திருக்கிறான்.

தினமும் என்ன சம்பவங்கள் நடக்கிறதோ அவற்றையும், அவனுடைய கருத்துகளையும் அதில் எழுதி வைக்க வேண்டும் என அந்த சிறுவன் எண்ணுகிறான். தொடர்ச்சியாக எழுதினால் அவனுக்கு ஒரு மை பேனா வாங்கி தருவதாக அவனுடைய அம்மா சொல்கிறார்.

அவனும் நண்பர்களும் பள்ளியில் நடைபெற்ற பாலர் சங்கக் குழுவின் கூட்டத்திற்கு செல்கிறார்கள்.

அங்கு இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. என்ன செய்யலாம் என்ற பல யோசனைகளுக்கு பின்பு, இளம் இயற்கையாளர் வட்ட கூட்டத்திற்குச் சென்ற பின், தேனீக்கள் வளர்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

ஒரு தேன்கூடு செய்து தேனீ வளர்க்கலாம் என்பதுதான் அவர்களுடைய யோசனை. தேனீக்கள் தேனை உருவாக்குவதோடு விளைச்சலை அதிகரிக்கவும் பயன்படும் என்பதை அந்த கூட்டத்தில் அறிந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான விவரங்களை எல்லாம் நீனா செர்ஜியேவனா (தேனீக்கள் வளர்ப்பது பற்றிய விவரங்களை) கோல்யா மற்றும் நண்பர்களுக்குச் சொல்கிறார்.

தேனீயின் வீடும் குடும்பமும் எங்கே இருக்கும் என தேடி கண்டுபிடித்து நண்பர்கள் அலைகிறார்கள். காடு மேடு பள்ளம் எல்லாம் உருண்டு புரண்டு விழுகிறார்கள். ஆனாலும் அசரவில்லை அவர்கள். தேடுவதைக் கண்டடையும் வரை அவர்கள் விட்டுவிடுவதாக இல்லை.

தேனீ பெட்டியை செய்கிறார்கள்; தேனீ தேடி கண்டறியும் பயணம் செய்கிறார்கள்; வேலியைத் தாண்டி குதிக்கிறார்கள் மர உச்சியில் ஏறுகிறார்கள்;

இப்படி நூல் முழுவதுமே குழந்தைகளின் சாகசங்களும், குறும்புகளும், கொண்டாட்டங்களும் நிறைந்து இருக்கும். இதை வாசிக்கும் போது நாமும் நம் பால்ய நினைவுகளை அசைபோட துவங்கி விடுவோம்.

தேனீ வளர்ப்பின் பயணத்தில் அவன் நண்பர்களுடன் செய்யும் குறும்புகள் சேட்டைகள் சாகசங்கள் இவற்றையெல்லாம் நாட்குறிப்பாக எழுதுவது தான் இந்தக் கதை .

ரஷ்ய மொழியிலிருந்து இதுவரை தமிழுக்கு வராத இந்த புத்தகம், முதன்முதலாக ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து வாசல் பதிப்பகத்தின் வழியாக தமிழுக்கு வந்திருக்கிறது.

இந்தப் படைப்பின் அழகை சிந்தாமல் சிதறாமல் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ரகுரு.

கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.

*****

நூல் : கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்
ஆசிரியர் : நிகோலாய் நோசோவ்
தமிழில் : ரகுரு
வாசல் பதிப்பகம்
பக்கங்கள் : 128
விலை : ₹100.00

You might also like