வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!

தேர்தல் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. ஆனால், தேர்தல் குறித்துப் பல செய்திகள் பரபரப்பாக அலையடித்துக் கொண்டிருக்கின்றன.

வாக்களிக்கத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பொறுப்புடன் செல்கிறவர்கள் மட்டும் பல லட்சம் பேர்.

நடக்கும் இந்தத் தேர்தலைப் பார்வையிட சிறப்பு “அப்ஸர்வர்கள்” வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது.

இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது. அது யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்த செய்திகள் கசிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது தொழில்நுட்ப மேம்பாட்டுடன் ஜி-பே மூலம் ‘கேஷ்லெஸ் டிரான்சேக்ஷன்’ நடப்பதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பறக்கும் படை அயராமல் பறந்து கொண்டிருப்பதாகச் சொன்னாலும் பண விநியோகம் நடப்பதாகச் செய்திகள் வெளிவரத் தான் செய்கின்றன.

அதோடு வாக்களிக்கும் இயந்திரங்களின் செயல்பாடு குறித்த சந்தேகங்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தேர்தல் முறைகேடு தொடர்பாக தஞ்சை, அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டு மறுதேர்தல் நடந்த பெருமையும் தமிழகத்திற்கு இருக்கிறது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் குறிப்பிட்ட தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த புகார்கள் எழுந்து அடங்கியிருக்கின்றன.

இப்போதைய நிலையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட வாக்காளர்கள் என்ன செய்யலாம்?

* பணப் பட்டுவாடாவை வலிந்து தரும் பட்சத்தில் விஷூவல் சாட்சியங்களுடன் தேர்தல் ஆணையத்திடமும், ஊடகங்களிடமும் தெரிவிக்கலாம்.

* ஜி-பே மூலமோ, டோக்கன் மூலமோ எந்த முயற்சி நடந்தாலும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தலாம்.

* வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது வாக்காளர்களுக்கு இயந்திரச் செயல்பாடு குறித்த சந்தேகம் இருந்தால் அது குறித்துத் தயங்காமல் புகார் அளிக்கலாம்.

* உச்சநீதிமன்றமே மின்னணு இயந்திரங்கள் குறித்த சிறு சந்தேகங்கூட எழாதபடி தேர்தலை நம்பிக்கையுடன் நடத்த வேண்டியது அவசியம்.

அதிலும் ஜூன் 4 – ஆம் தேதி வரை பல கட்சிகளின் முகவர்கள், தகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம்.

* சரி, இதை வாக்காளர்கள் செய்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டும்?

ஆதாரங்களுடன் பணப்பட்டுவாடா பற்றிய புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த தேர்தல் வரை வழக்கை இழுத்தடிக்கக் கூடாது.

* மின்னணு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக ஆதாரபூர்வமாகத் தெரிய வந்தால் அந்தத் தொகுதிக்கான தேர்தலையே நிறுத்தி வைக்க வேண்டும்.

* வாக்களிப்பது நமது வாக்காளப் பெருமக்களின் அடிப்படை உரிமை. அந்த ஜனநாயக உரிமையில் சந்தேகமோ, முறைகேடோ நடப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

You might also like